கூடைப் பந்து போட்டியில் ஹிஜாபை அனுமதித்த FIBA

0

கூடைப்பந்து போட்டியில் ஹிஜாப் மற்றும் யூதர்கள் அணியும் யர்முல்க் தொப்பிகளை சர்வதேச கூடைப்பந்து கூட்டமைப்பு அனுமதித்துள்ளது.

இந்த அமைப்பின் மத்தியக் குழு இது தொடர்பான அனுமதியை கடந்த புதன் கிழமை கொடுத்து அதன் அறிவிப்பு முறையாக வியாழன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க கூடைப்பந்து தலைமை நிர்வாக அதிகாரி ஜிம் டூழி கூறுகையில், “எங்களது குழு கூட்டத்தில் இந்த முடிவிற்கு அனைவரும் சம்மதம் தெரிவித்திருந்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.

இந்த அமைப்பு தங்களின் முந்தைய சட்ட விதிகளில் மாற்றம் செய்வது தொடர்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு முடிவு செய்தது. பின்னர் இவ்வருட பிப்ரவரி மாதத்தில் இந்த மாற்றங்கள் குறித்து ஒரு முன்மொழிதலை வழங்குமாறு திட்டக் குழு பணிக்கப்பட்டது.

இந்நிலையில், அதன் பழைய விதிமுறைகள் சில நாட்டு பாரம்பரிய உடை பழக்கத்திற்கு ஏற்றதாக இல்லை என்பதனால் தற்போது இந்த புதிய விதிகளில் இது தொடர்பான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று FIBA தெரிவித்துள்ளது.

முன்னதாக இது போன்ற உடைகள் விளையாட்டின் போது கீழே விழுந்து விடலாம் என்றும் அதனால் வீரர்களுக்கு காயங்கள் ஏற்படக் கூடும் என்று கூறப்பட்டது. தற்போதுள்ள இந்த புதிய விதி முறைகளின் படி, அங்கீகரிக்கப்படும் உடைகள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளின் படி அனுமதிக்கப்பட்ட தலை முக்காடு வீர வீராங்கனைகளின் முகத்தை முழுமையாகவோ அல்லது பாதியாகவோ மறைக்கக் கூடாது என்றும், அந்த உடையினால் அதனை அணியும் வீரர் வீராங்கனைகளுக்கு சக வீரர்களுக்கோ ஆபத்து ஏற்படக் கூடாது என்றும் அதில் வெளிப்புறம் நீட்டிகொள்வது போன்ற எந்த ஒரு பாகங்களுக்கும் இருக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய இந்த புதிய விதிக்கான அறிவிப்பு இரண்டு வருடங்களாக சமூக வளைதலங்களில் ஹிஜாப் மீதான தடையை எதிர்த்து செய்யப்பட்ட பிரச்சாரங்களின் விளைவு என்று கூறப்படுகிறது.

தனது கல்லூரி அளவில் சிறந்த கூடைப்பந்து வீராங்கனையாக திகழ்ந்த கைக் சாலிஹு ரஃபியு, இந்த முடிவு குறித்து கூறுகையில், FIBA வின் முந்தைய சட்டம் பல சமூகத்தவரை இந்த விளையாட்டுகளில் தொழில் ரீதியில் பங்கெடுப்பதை தடுத்தது. தற்போது FIBA வின் கண்கள் திறக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இந்த புதிய சட்டத்தினால தான் மிகவும் மகிழ்ச்சியுற்றதாக கூறிய ரஃபியு, இதன் மூலம் இளம் தலைமுறையினர் இனி வேறெதைப் பற்றியும் கவலை இல்லாமல் விளையாட்டில் கவனம் செலுத்தலாம் என்று கூறியுள்ளார்,

ஹிஜாபை அனுமதிக்கும் இந்த புதிய விதி அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வர இருப்பதாக தெரிகிறது. கடந்த வாரம் அமெரிக்க குத்துச்சண்டை அதிகாரிகள் மத அடிப்படையில் அணியப்படும் தொப்பி மற்றும் ஹிஜாபிற்கு அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.