கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி விவகாரம் – மஸ்ஜித்களை மட்டும் குறி வைப்பதை காவல் துறை நிறுத்த வேண்டும்: பாப்புலர் ஃப்ரண்ட்

0

பத்திரிகை செய்தி

கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை அகற்றுவோம் என்ற பெயரில் மஸ்ஜித்களை மட்டும் குறி வைப்பதை காவல் துறை நிறுத்த வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்!

கடந்த இரண்டு தினங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக முஸ்லிம்கள் தொழுகை நடத்தக்கூடிய மஸ்ஜித்களில் உள்ள கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி அகற்றும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வழிபாட்டு தளங்கள் உட்பட பொது இடங்களில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை பயன்படுத்துவது குறித்தான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில் காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மேலும் மாசு கட்டுபாட்டு வாரியம் அனுமதித்த 70 டெசிபல் அளவிலான ஒலிப்பெருக்கியையே மஸ்ஜித்களில் பயன்படுத்தி வரும் வேளையில் ஒட்டுமொத்தமாக அனைத்து மஸ்ஜித்களிலும் ஒலிப்பெருக்கியை அகற்ற காவல்துறை முயற்சி செய்கிறது. எத்தனையோ வழிபாட்டு தளங்கள் இருக்கையில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தக்கூடிய மஸ்ஜித்களை மட்டும் குறிவைத்து ஒலிப்பெருக்கிகளை அகற்ற முனைவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அனுமதிக்கப்பட்ட அளவில் ஒலிப்பெருக்கியை பயன்படுத்துவதை தடுக்க நினைப்பது முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் செயலாகும். எனவே கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை அகற்றுகிறோம் என்ற பெயரில் முஸ்லிம்களின் வழிபாட்டு தளங்களை குறி வைப்பதை காவல்துறை நிறுத்த என வேண்டும் பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுகொள்கின்றது.

இப்படிக்கு
M.முஹம்மது சேக் அன்சாரி,
மாநில பொதுச்செயலாளர்,
பாப்புலர் ஃபராண்ட் ஆஃப் இந்தியா,
தமிழ்நாடு .

Comments are closed.