கெளரி லங்கேஷ் கொலை: ஓர் ஆண்டு ஒரு பார்வை

0

கெளரி லங்கேஷ் கொலை: ஓர் ஆண்டு ஒரு பார்வை

கெளரி லங்கேஷ் அவரது வீட்டின் முன் வைத்து இந்துத்வா தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டு இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது.

மூத்த பத்திரிகையாளர், சமூக ஆர்வலர், மனித உரிமை போராளி, பகுத்தறிவாளர், மதவாத அரசியலுக்கு எதிரானவர் என்று பல குணங்களை உடைய கெளரி லங்கேஷ் கட்ந்த வருடம் செப்டெம்பர் 5 ஆம் தேதி இரவு 8 மணியளவில் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். தனது எழுத்துக்களில் இந்துத்வாவையும் சாதிய மற்றும் மதவாத அரசியலையும் வன்மையாக கண்டித்து வந்த அவர் மனித உரிமை அமைப்பான NCHRO வின் முன்னாள் உறுப்பினராக இருந்தவர். (பார்க்க செய்தி)

கெளரி லங்கேஷின் கொலை குறித்து பிரபல கன்னட எழுத்தாளர் K.மருளிசிடப்பா கூறுகையில், “தபோல்கர், பன்சாரே மற்றும் கல்பர்கியை கொலை செய்த அதே கும்பல் தான் கெளரி லங்கேஷையும் கொலை செய்துள்ளது. அவர் சங் பரிவாரங்களுக்கு எதிராக மிக உறுதியான நிலையில் இருந்தார்.” என்று தெரிவித்திருந்தார்.

இவர் மீது பாஜக இந்துத்வாவினர் பல அவதூறு வழக்குகளை தொடர்ந்து வந்தனர். கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் மீது பாஜக எம்.பி. பிரஹ்லாத் ஜோஷி மற்றும் உமேஷ் துஷி தொடர்ந்த அவதூறு வழக்கு ஒன்றில் அவர் குற்றவாளி என்று கூறி அவருக்கு ஆறு மாத காலம் சிறை தண்டனையும் அபராதமும் வித்தித்து தீர்ப்பளித்தது.

கெளரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட இரு தினங்களில் அவரது கொலையை குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக மாநில பாஜக எம்.எல்.ஏ D.N.ஜீவராஜ், கெளரி லங்கேஷ் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவிற்கு எதிராக எழுதாமல் இருந்தால் உயிருடன் இருந்திருப்பார் என்று தெரிவித்தார். 2017 செப்டெம்பர் 7 ஆம் தேதி பாஜகவின் யுவ மோர்ச்சா பேரணியை துவக்கி வைக்கையில், லங்கேஷ் அவரது “சட்டிகளா மரண ஹோமா” என்ற டிரவ்சர்களின் இறுதிச்சடங்கு கட்டுரைக்காகவே கொலை செய்யப்பட்டார் என்று அவர் தெரிவித்தார்.

பாஜக எம்.எல்.ஏ D.N.ஜீவராஜின் இந்த கருத்தை கண்டித்த அப்போதைய கர்நாடக முதல்வர் சித்தாராமையா, “இந்த கருத்து மூலம் என்ன கூற விரும்புகிறீர்கள்? இது இந்த கொலையின் பின்னணியில் யார் உள்ளார் என்பதை விளக்குகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஜீவராஜ் மீது காங்கிரஸ் கட்சியினர் சிலர் ஸ்ரீங்கேறி காவல்துறையிடம் புகாரளித்துள்ளனர். (பார்க்க செய்தி)

இத்துடன் கெளரி லங்கேஷ் கொலையை ஐ.நா. சபையின் மனித உரிமை தலைவர் ஜெய்த் ராஅத் அல் ஹுசைனும் கண்டித்தார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், “மேலும் நான் இந்தியாவில் அதிகரித்து வரும் சிறுபான்மையினருக்கு எதிரான சகிப்பின்மை குறித்தும் கலக்கமுற்றுள்ளேன். தற்போது பசு பாதுகாப்பு என்கிற பெயரில் நடைபெறும் வன்முறைகள் அபாயகரமாக உள்ளது. அடிப்படை மனித உரிமை பேசும் நபர்கள் கூட அச்சுருத்தப் படுகின்றனர். தொடர்ச்சியாக பிரிவினைவாதம், மற்றும் வெறுப்பு கருத்துக்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்த கெளரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.” என்று தெரிவித்தார். (பார்க்க செய்தி)

இந்நிலையில் இது குறித்து விசாரித்து வந்த காவல்துறை கெளரி லங்கேஷ் மற்றும் கல்பர்கி கொலைகளில் தொடர்பு இருப்பதை தடவியல் சோதனை மூலம் கண்டறிந்தனர். இந்த இருவருமே 7.65mm ரக துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டனர் என்று தடவியல் சோதனை மூலம் தெரியவந்தது. (பார்க்க செய்தி)

மேலும் 2017 அக்டோபர் மாதம், கெளரி லங்கேஷ் கொலையாளிகள் குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாக கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் “கெளரி லங்கேஷ் கொலை தொடர்பாக சிறப்பு விசரணை படைக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளன. அத்துடன் மேலும் பல ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகிறது. கொலையாளிகள் யார் என்று தற்போது தெரிந்தாலும் போதிய ஆதாரம் கிடைக்காத வரை அதுகுறித்து வெளிப்படையாக எதுவும் தெரிவிக்க இயலாது” என்று அவர் கூறியிருந்தார்.(பார்க்க செய்தி)

இந்த அறிவிப்பு வெளியாகி சில தினங்களில் சனாதன் சன்ஸ்தா அமைப்புடன் தொடர்புடைய பிரவீன் லிம்கர், ஜெயபிரகாஷ், சாரங் அகோல்கர், ருத்ரா படில், சங்லி, வினய் பவார் மற்றும் சதாரா ஆகியோர் கெளரி லங்கேஷ் கொலையில் சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவர்களில் ருத்ரா படில், சாரங் அகோல்கர் மற்றும் வினய் பவார் ஆகியோர் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி கொலை செய்யப்பட்ட பகுத்தறிவுவாதி நரேந்திர தபோல்கர் கொலை வழக்கிலும், 2015 பிப்ரவரி 16 ஆம் தேதி இடதுசாரி சிந்தனையாளர் கோவிந்த் பன்சாரே கொலைவழக்கிலும் 2015 ஆகஸ்ட் 30 ஆம் தேதி கொலை செய்யப்பட்ட கன்னட அறிஞர் M.M. கல்பர்கியின் கொலை வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆவர். (பார்க்க செய்தி)

இதனையடுத்து 2018 மார்ச் மாதம் இந்த வழக்கில் ஹிந்து யுவ சேனா அமைப்பு நிறுவனர் K.T.நவீன் குமார் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். மத்திய குற்றவியல் காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றின் பேரில் பெங்களுரு காவல்துறை இவரை கைது செய்தது. கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து காவல்துறை .32 ரக துப்பாக்கித் தோட்டாக்கள் ஐந்திணை பறிமுதல் செய்தது. விசாரணையின் பின்னர் மேலும் பத்து தோட்டாக்கள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. இவர் 2015 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக துப்பாக்கி குண்டுகள் வைத்திருந்த காரணத்தால் கர்நாடக குற்றப்பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டவர். (பார்க்க செய்தி)

2018 ஜூன் மாதம், இவ்வழக்கில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட பரசுராம் வாக்மோர், இந்து மதத்தை காக்க கெளரி லங்கேஷை சுட்டுக் கொண்டதாக காவல்துறையிடம் ஒப்புக்கொண்டார். தன்னை கைது செய்த அதிகாரிகளிடத்தில் தான் கெளரி லங்கேஷை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட பரசுராம், தான் கொலை செய்வது யார் என்பது தனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளான். கெளரி லங்கேஷ் கொலை குறித்து பரசுராம் கூறுகையில், “எனக்கு 2017 மே மாதம் எனது மதத்தை பாதுகாக்க ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. அதற்கு நான் ஒப்புக்கொண்டேன். அப்போது நான் யாரை கொலை செய்யப்போகிறேன் என்று எனக்கு தெரியாது. தற்போது நான் அந்தப் பெண்ணை கொலை செய்திருக்கக் கூடாது என்று எண்ணுகிறேன்.” என்று தெரிவித்தார். (பார்க்க செய்தி)

ஸ்ரீராம் சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் மற்றும் பரசுராம் வாக்மோர் இணைந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவியது. அப்போது தனக்கு பரசுராம் வாக்மோர் யார் என்பதே தெரியாது என்று பிரமோத் முத்தாலிக் கூறிய நிலையில் அந்த கொலையாளிக்கு ஸ்ரீ ராம் சேனா அமைப்பு அதன் பேஸ்புக் பக்கத்தில் நிதி திரட்டியது. மேலும் ஸ்ரீராம் சேனா அமைப்பின் பெண்கள் பிரிவுத் தலைவியும் பாஜக யுவ மோர்ச்சா அமைப்பின் உறுப்பினருமான மஞ்சலேஷ்வரி தொனாஷ்யல், அவரது பேஸ்புக் பக்கத்தில் இன்னும் மோசமான பதிவு ஒன்றை பதிவு செய்தார். அதில், “நாட்டில் இந்துத்வாவின் அஸ்திவாரத்தை அசைக்க இந்து எதிர்ப்பு சக்திகள் முயற்சித்தால் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பரசுராம் வாக்மோர் பிறப்பான்.” என்று பதிவு செய்தார். (பார்க்க செய்தி)

இந்த கொலை வழக்கில் அடுத்தடுத்து பல கைதுகளை செய்த காவல்துறை 2018 ஜூன் மாதம் இவ்வழக்கில் 11வது குற்றவாளியை கைது செய்தது. முன்னதாக மோகன் நாயக் என்பவர் அளித்த வாக்குமூலத்தை வைத்து அமித் பத்தி (வயது 27) மற்றும் கணேஷ் மிஷ்கின் (வயது 27) ஆகியோரை சிறப்பு புலனாய்வுத் துறை (SIT) கைது செய்திருந்தது. இதனையடுத்து இவ்வழக்கின் 11வது கைதாக H.L.சுரேஷ் (வயது 36) என்பவரை SIT கைது செய்தது. சுரேஷ் பெங்களூருவின் மகதி சாலையில் உள்ள சீகிஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர். இவர் கெளரி லங்கேஷ் கொலையில் முக்கிய குற்றவாளியான பரசுராம் வாக்மோர் மற்றும் சுஜித் குமார் என்ற பிரவீன் என்பவருக்கும் தனது வீட்டை கொடுத்து உதவியுள்ளார். இன்னும் இந்த கொலையின் சூத்திரதாரியான ஆமோல் காலேவின் முக்கிய உதவியாளராக இவர் இருந்ததும் தெரியவந்தது.

கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் பல தீவிர வலது சாரி இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களை காவல்துறை கைது செய்துவந்த நிலையில் மதசார்பற்ற இந்தியர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட வேண்டும் என்று கார்நாடக மாநில பாஜக எம்எல்ஏ பாசானகவ்டா படில் யட்நால் கூறினார். கார்கில் வெற்றி விழா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர், “நம் நாடு, வேறெங்குமிருந்தும் சந்திக்கும் ஆபத்துகளை விட அறிவுஜீவிகளிடம் இருந்தும் மதசார்பற்றவர்களிடமிருந்தும் சந்திக்கும் ஆபத்து தான் அதிகம். நான் உள்துறை அமைச்சராக இருந்தால் இவர்களை சுட்டுக் கொலை செய்ய உத்தரவிட்டிருப்பேன்.” என்று கூறினார்.

மேலும் “இந்த மதசார்பற்றவர்கள் நம் நாட்டில் வாழ்ந்துகொண்டு நமது காற்றை சுவாசித்துக் கொண்டு நம் நீரை பருகி, நாம் செலுத்தும் வரியில் அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு இந்திய இராணுவத்திற்கு எதிராக கோஷம் எழுப்புகின்றனர்” என்று அவர் கூறினார். (பார்க்க செய்தி)

தற்போது கடந்த ஆகஸ்ட் மாதம் முபையில் பல இடங்களில் குண்டு வெடிப்பு நடத்த திட்டமிட்டிருந்த இந்துத்வா தீவிரவாதிகள் பலர் திட்டமிட்டிருந்த நிலையில் மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் படையால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையில் இவர்களுக்கும் பல பகுத்தறிவுவாதிகள் மற்றும் அறிவு ஜீவிகளின் கொலைக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு வருகிறது. இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் பல நபராகலை குறிக்கும் சங்கேத வார்த்தைகள் இருப்பதையும் தீவிரவாத தடுப்புப் படை கண்டறிந்துள்ளது. இவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் மேலும் பல கொலைகளுக்கும் இந்துத்வா சக்திகளுக்கும் இருக்கும் தொடர்பு வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Comments are closed.