கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடரும் கைதுகள்: 11வது குற்றவாளி கைது
பிரபல பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் காவல்துறை அடுத்தடுத்து பல கைதுகளை நடத்தி வருகிறது. முன்னதாக மோகன் நாயக் என்பவர் அளித்த வாக்குமூலத்தை வைத்து அமித் பத்தி (வயது 27) மற்றும் கணேஷ் மிஷ்கின் (வயது 27) ஆகியோரை சிறப்பு புலனாய்வுத் துறை (SIT) கைது செய்திருந்தது. இந்நிலையில் தற்போது இவ்வழக்கின் 11வது கைதாக H.L.சுரேஷ் (வயது 36) என்பவரை SIT கைது செய்துள்ளது.
சுரேஷ் பெங்களூருவின் மகதி சாலையில் உள்ள சீகிஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர். இவர் கெளரி லங்கேஷ் கொலையில் முக்கிய குற்றவாளியான பருஷ்மன் வாக்மோர் மற்றும் சுஜித் குமார் என்ற பிரவீன் என்பவருக்கும் தனது வீட்டை கொடுத்து உதவியுள்ளார். இன்னும் இந்த கொலையின் சூத்திரதாரியான ஆமோல் காலேவின் முக்கிய உதவியாளராக இவர் இருந்ததும் தற்போது தெரியவந்துள்ளது.
முன்னதாக சுரேஷை இவ்வழக்கின் முக்கிய சாட்சியாக கருதி காவல்துறை அவரின் வாக்குமூலத்தை பெற்றது. பின்னர் அவர் கூறியது பொய் என்பதை கண்டறிந்த காவல்துறை அவரை கைதுசெய்துள்ளது.