கெளரி லங்கேஷ் கொலை வழக்கு: சனாதன் சன்ஸ்தா அமைப்பை சேர்ந்த ஐந்து பேர் குற்றவாளி?

0

பிரபல பத்திரிகையாளர் மற்றும் பகுத்தறிவுவாதியான கர்நாடகாவை சேர்ந்த கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் சனாதன் சன்ஸ்தா அமைப்புடன் தொடர்புடைய பிரவீன் லிம்கர், ஜெயபிரகாஷ், சாரங் அகோல்கர், ருத்ரா படில், சங்லி, வினய் பவார் மற்றும் சதாரா ஆகியோர் சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலது சாரி இந்து தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தா அமைப்பை சேர்ந்த இவர்களில் லிம்கர், அண்ணா என்ற ஜெயபிரகாஷ், அகோல்கர் மற்றும் படில் ஆகியோர் 2009 ஆம் ஆண்டு கோவாவின் மட்கோன் பகுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள். தீபாவளி பண்டிகையின் போது குண்டுகளை வெடிக்கச் செய்ய திட்டமிட்டு குண்டுகளை எடுத்துச் சென்ற சனாதன் சன்ஸ்தா அமைப்பை சேர்ந்த இருவர் தவறுதலாக குண்டு வெடித்து உயிரிழந்தனர். இதனையடுத்து லிம்கர், அண்ணா, அகோல்கர் மற்றும் படில் அதிகம் தேடப்படும் குற்றவாளிகள் என்று தேசிய புலனாய்வுத்துறை அறிவித்து அவர்களுக்கு இன்டர்போலில் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கியது.

இவர்களில் ருத்ரா படில், சாரங் அகோல்கர் மற்றும் வினய் பவார் ஆகியோர் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி கொலை செய்யப்பட்ட பகுத்தறிவுவாதி நரேந்திர தபோல்கர் கொலை வழக்கிலும், 2015 பிப்ரவரி 16 ஆம் தேதி இடதுசாரி சிந்தனையாளர் கோவிந்த் பன்சாரே கொலைவழக்கிலும் 2015 ஆகஸ்ட் 30 ஆம் தேதி கொலை செய்யப்பட்ட கன்னட அறிஞர் M.M. கல்பர்கியின் கொலை வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆவர்.

கொலை நடைபெற்றவுடன் நடத்தப்பட்ட தடவியல் சோதனையில், கொலை நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட நான்கு காலி துப்பாக்கி தோட்டாக்கள் கல்பர்கி கொலை நடைபெற்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட காலி தோட்டாக்களுடன் ஒத்துப்போவதாக கண்டறியப்பட்டது. இதன் மூலம் கெளரி லங்கேஷ் கொலைக்கும் கல்பர்கி கொலைக்கும் தொடர்பிருப்பது உறுதியானது. பாலிஸ்டிக் சோதனை மூலம் இந்த கொலைகளுக்கு பின்னால் ஒரு பொதுவான குழு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதில் கல்பர்கி மற்றும் லங்கேஷின் கொலைகள் ஒரே மாதிரியான நாட்டு துப்பாக்கியால் நடத்தப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

பன்சாரே மற்றும் அவரது மனைவியை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட 7.65mm துப்பாக்கிகள் இரண்டில் ஒன்று தபோல்கர் கொலையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கெளரி லங்கேஷின் கொலை வழக்கு விசாரணை, தலைமறைவாகியுள்ள ஐந்து சனாதன் சன்ஸ்தா அமைப்பை சேர்ந்தவர்களை கண்டுபிடிப்பதை சார்ந்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு எதிராக ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. (பார்க்க செய்தி)

Comments are closed.