கெளரி லங்கேஷ் மற்றும் கல்பர்கி கொலைக்கிடயே தொடர்பு: விசாரணையில் வெளியான தகவல்

0

பிரபல கன்னட எழுத்தாளரும் பகுத்தரிவாதியுமான கெளரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டத்தை தொடர்ந்து அவரின் கொலையாளிகளை கண்டறிய நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொலைக்கும் முன்னர் கொலை செய்யப்பட்ட பகுத்தறிவுவாதியான கல்பர்கியின் கொலைக்கும் தொடர்பு இருப்பது தடவியல் சோதனையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை எதுவும் தர மறுத்தபோதிலும் இந்த இரு கொலைகளிலும் ஒரே மாதிரியான ஆயுதங்கள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை, கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, இந்த கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட தனிப்படை பல முக்கிய ஆதாரங்களை பெற்றுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் இந்த கொலை தொடர்பாக கருத்து தெரிவித்த மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் முன்னர் நடைபெற்ற (கல்பர்கி) கொலையுடன் இந்த கொலையும் ஒத்துப் போகின்றது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டெம்பர் மாதம் 5 ஆம் தேதி தனது வீட்டின் முன் இரவு  8  மணியளவில் இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் கெளரி லங்கேஷ் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவர் 7.65mm ரக துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார் என்று தடவியல் விசாரணை தெரிவித்துள்ளது. பகுத்தறிவுவாதி கல்பர்கி மற்றும் கோவிந்த் பன்சாரவை கொலை செய்யவும் இதே ரக துப்பாக்கிதான் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கெளரி லங்கேஷின் கொலையை போலவே இந்த கொலைகளிலும் அடையாளம் தெரியாத இரு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டனர். இவை அனைத்தும் இந்த கொலைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று நிரூபிக்கின்றது.

மேலும் பன்சாரே வை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட இரு துப்பாக்கிகளில் ஒன்று தபோல்கரை கொலை செய்ய பயன்படுத்தப்பட்டது என்று விசாரணை அறிக்கை தெரிவித்தது. இந்நிலையில் தபோல்கர் கொலை வழக்கை விசாரித்த சிபிஐ மற்றும் பன்சாரே கொலை வழக்கை விசாரித்த மகாராஷ்டிரா SIT இந்த இரு கொலைகளுக்கும் ஹிந்து ஜனாக்ருதி சமிதி இயக்கத்திற்கும் தொடர்பு இருப்பதை நிறுவியது. இந்த அமைப்பு சனாதன் சன்ஸ்தா அமைப்புடன் தொடர்புடையதாகும்.

முன்னர் நடைபெற்ற கொலைகளுக்கும் கெளரி லங்கேஷ் கொலைக்குமான முக்கிய நித்தியாசம் யாதெனில் மற்ற கொலைகள் பகலில் நடைபெற்றது, கெளரி லங்கேஷின் கொலை இரவில் நடைபெற்றுள்ளது. இது கெளரி லங்கேஷ் பழக்க வழக்கத்தினால் ஏற்பட்ட மாற்றமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் எவ்வாறு யாரிடம் இருந்து பெறப்பட்டன என்றும் இந்த கொலை கூலிப்படையினர் உதவியுடன் செய்யப்பட்டதாக அல்லது இதனை செய்தவர்கள் ஏதேனும் இயக்கத்தை சேர்ந்தவர்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. மேலும் CCTV  வீடியோக்கள் மற்றும் விடுதிகளில் தங்கியிருந்தோர் குறித்த தகவல்கள் முதலிய தகவல்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Comments are closed.