கேரளாவில் இஸ்லாமிய அழைப்பு மையங்களை நோக்கி பேரணி:மக்கள் எழுச்சியின் முன்னால் மண்டியிட்ட சங்க்பரிவாரம்!

0

கேரள மாநிலத்தில் இஸ்லாமிய அழைப்பு மற்றும் பயிற்சி மையங்களை மூடக்கோரி மலப்புறம் மாவட்டம் மஞ்சேரியில் உள்ள ‘சத்ய சரணி’ மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள ‘ஸலஃபி செண்டர்’ ஆகியவற்றை நோக்கி 25 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் பேரணியை நடத்தப்போவதாக ஆர்.எஸ்.எஸ் ஆதரவு சங்க்பரிவார் அமைப்பான இந்து ஐக்கியவேதி அறிவித்திருந்தது.ஆனால், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை குழி தோண்டி புதைக்க முற்படும் சங்க்பரிவார சக்திகளின் பேரணியை நடத்த அனுமதிக்காமாட்டோம் என்று அறிவித்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, இப்பேரணியை மக்கள் சக்தியால் தடுத்து நிறுத்துவோம் என்று பிரகடனப்படுத்தியது.

இந்நிலையில் பேரணி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 20-ஆம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைமையில் ஆயிரக்கணக்கான மக்கள் திருவனந்தபுரம் மற்றும் மஞ்சேரியில் உள்ள இஸ்லாமிய அழைப்பு மையங்களின் முன்னால் குவிந்தனர்.திருவனந்தபுரம் அரசு ஆயுர்வேதா கல்லூரியின் முன்னால் துவங்கிய இந்து ஐக்கியவேதியின் பேரணியை போலீஸ் தடுத்து நிறுத்தியது.இதனைத்தொடர்ந்து இந்து ஐக்கியவேதியை சார்ந்தவர்கள் அங்கே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.25 ஆயிரம் பேர் கலந்துகொள்வதாக அறிவித்த பேரணியின் துவக்கத்தில்(காலை 10 மணி அளவில்) விரல் விட்டு எண்ணும் அளவிலான நபர்களே வந்திருந்தனர்.பின்னர் பேரணி 11.30 மணிக்கு துவங்கியபோது ஆயிரத்திற்கும் குறைவான நபர்களே கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில் திருவனந்தபுரம் ஸலஃபி செண்டருக்கு அருகே காலை 8 மணி முதலே பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள் ஸலஃபி மஸ்ஜிதின் இருபுறமும் உறுதியாக நின்றனர்.மஸ்ஜிதுக்கு அருகில் உள்ள சாலையிலும் மக்கள் குவிந்தனர்.இந்து ஐக்கியவேதியைச் சார்ந்தவர்கள் கலைந்து சென்ற பிறகே பாப்புலர் ஃப்ர்ண்டின் செயல்வீரர்களும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர்.இந்து ஐக்கியவேதி என்ற சங்க்பரிவார் அமைப்பைச் சார்ந்தவர்களால் போலீஸ் தடுத்த இடத்தில் இருந்து ஒரு அடி கூட நகரவில்லை.கேரளாவில் பல்வேறு போராட்டங்களில் காவல்துறையை அத்துமீறி வன்முறையில் இறங்கும் சங்க்பரிவாரத்தினர் இச்சம்பவத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் தலைமையிலான மக்கள் எதிர்ப்பிற்கு அஞ்சி அமைதியாக கலைந்து சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைப்போல மலப்புறம் மாவட்டம் மஞ்சேரியில் உள்ள ‘சத்ய சரணி’ இஸ்லாமிய அழைப்பு மையம் அமைந்திருக்கும் பகுதியில் காலை 6 மணி முதலே பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் முஸ்லிம் ஐக்கியவேதியைச் சார்ந்த உறுப்பினர்கள் திரண்டிருந்தனர்.அத்தோடு மஞ்சேரி செண்ட்ரல் மற்றும் பைபாஸ் ஜங்க்ஸன் ஆகிய பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களும் இந்து ஐக்கியவேதியின் பேரணியை தடுத்து நிறுத்து தயாராக நின்றனர். கேரள மாநில பா.ஜ.க தலைவர் கும்மனம் ராஜசேகரன் இந்து ஐக்கியவேதியின் பேரணியை துவக்கி வைத்தார்.பின்னர் போலீஸ் பேரணியை தடுத்து நிறுத்தியதைத்தொடர்ந்து சங்க்பரிவாரத்தினர் கலைந்து சென்றனர்.பேரணியை துவங்கிய இடத்தில் இருந்து ஒரு அடி கூட நகர முடியாமல் சங்க்பரிவாரத்தினர் கலைந்து சென்றதற்கு காரணம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமையிலான மக்கள் சக்தியின் எழுச்சியே காரணம் என்று கூறப்படுகிறது.

அதேவேளையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதரவு அமைப்பான இந்து ஐக்கியவேதியின் பேரணியை துவங்குவதற்கு முன்னரே தடுத்து நிறுத்த முயற்சிக்காத கேரள இடதுசாரி அரசின் காவல்துறைக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் பி.நவ்ஸாத் கண்டனம் தெரிவித்தார்.மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக ஒரு மதத்தைச் சார்ந்தவர்களின் பள்ளிவாசல் மற்றும் அழைப்பு மையத்தை நோக்கி பேரணி நடத்தப்போவதாக சுவரொட்டிகளை ஒட்டி, ஒலி பெருக்கி மூலம் பரப்புரைச் செய்த பிறகும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததோடு, ஒலி பெருக்கி பிரச்சாரத்திற்கு அனுமதி அளித்த சூழலை குறித்து விசாரிக்கவேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் திமிரை அடக்குவதற்கு மக்கள் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்துவதே ஒரே வழி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டதாக பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள் தெரிவித்தனர்.மேலும் திருவனந்தபுரம் மற்றும் மஞ்சேரியில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு இந்து ஐக்கியவேதியின் பேரணியை தடுத்து நிறுத்தி பாசிசத்திடம் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்று பிரகடனப்படுத்திய மக்களுக்கு நன்றியும் தெரிவித்தனர்.

Comments are closed.