கேரளாவில் கள்ள நோட்டு அச்சடித்த பாஜகவினர்

0

பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பை சேர்ந்த ராஜீவ் எரச்சேரி என்பவர் கேரளாவில் போலி ரூபாய் நோட்டுகளை அச்சடித்து விநியோகம் செய்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் திரிஷூரில் உள்ள ஸ்ரீ நாராயணபுறம் பகுதியில் அமைந்துள்ள ராஜீவின் வீட்டில் சுமார் 1.35 லட்ச ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் மற்றும் அதனை அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட எந்திரங்கள், மை ஆகியவற்றுடன் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காவல்துறையினரின் கூற்றுப்படி ராஜீவ் அவரது சகோதரருடன் இணைந்து 2000 ரூபாயில் இருந்து 20  ரூபாய் வரையிலான கள்ள நோட்டுகளை அச்சடித்து விநியோகம் செய்துள்ளனர். இந்த ரூபாய் நோட்டுகளை அப்பகுதிளில் உள்ள சிறிய கடைகளிலும் பெட்ரோல் பங்குகளிலும், மதுபான கடைகளிலும் அவர்கள் மாற்றியதாக தெரியவந்துள்ளது. இவர்களிடம் இருந்து 2000 ரூபாய் நோட்டுகள் 65 தும், 500  ரூபாய் நோட்டுகள் 8 டும், 50 ரூபாய் நோட்டுகள் 5 தும், 20 ரூபாய் நோட்டுகள் 10 தும் கைப்பற்றப்பட்டதாக சாலக்குடி DSP சாகுல் ஹமீத் தெரிவித்துள்ளார். ராஜீவின் கைதை தொடர்ந்து அவரது சகோதரர் தலைமறைவாகியுள்ளார்.

தங்களுக்கு இவர்கள் மிக குறுகிய காலத்திலேயே பணக்காரர்கள் ஆகியது குறித்த தகவல் சில காலம் முன்னதாகவே கிடைத்ததாகவும் இவர்களின் நடவடிக்கையை தாங்கள் கவனித்து வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் சட்டவிரோத கந்துவட்டி தொழில் செய்து வந்ததும் தற்போது தெரியவந்துள்ளது. இவர்கள் மீது நடத்தப்பட்ட சோதனை சட்ட விரோத கந்து வட்டியினருக்கு எதிரான அப்பரேஷன் குபேரா என்றழைக்கப்படும் காவல்துறை நடவடிக்கையின் கீழ் நடத்தப்பட்டுள்ளது.

ராஜீவின் கைதை தொடர்ந்து அவரும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற பதிலை பாஜக தரப்பில் இருந்து எதிர்ப்பார்த்த சிலர் ராஜீவின் படம் உள்ள பாஜகவின் சுவரொட்டிகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதில் ஒரு சுவரொட்டி கறுப்புப் பணத்திற்கு எதிரான பாஜகவின் பிரச்சார சுவரொட்டி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்களை பாஜக தங்கள் கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.

Comments are closed.