கேரள கவிஞர் மீது ஆர்எஸ்எஸ் கும்பல் தாக்குதல்: ஆறு பேர் கைது

0

கடந்த திங்கள் மாலை, கேரள மாநிலம் கொட்டுக்கள் பகுதியில் வைத்து பிரபல மலையாள கவிஞர் குரீபுழா ஸ்ரீகுமார் மீது ஆர்எஸ்எஸ் குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவர் கொட்டுக்கள் நூலகம் ஒன்று ஒருங்கிணைத்த கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் பண்கேடுக்கையில், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்வா அமைப்புகளை சாடி கருத்து தெரிவித்த காரணத்திற்காக தாக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது உரையின் போது வடயம்பள்ளி ‘சாதி கிணறு” பிரச்சனையில் வலது சாரி இந்து அமைப்புக்களை கடுமையாக சாடியுள்ளார். இவரது பேச்சினால் ஆத்திரமுற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இவரை சூழ்ந்துகொண்டு தாக்கியதாகத் தெரிகிறது. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களின் தலையீட்டின் பேரில் இவர் அவர்களிடம் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவரது புகாரின் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த காவல்துறை கண்காணிப்பாளர் பி.அசோகன், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 15  ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் பஞ்சாயத் உறுப்பினர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்வம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கேரள முதல்வர் அலுவலகத்தில் இருந்தும் உத்தரவுகள் பிரப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக கேள்விகள் கேரள சட்டமன்றத்திலும் எழுப்பப்பட்டுள்ளது.

CPI கட்சியின் முலகரா ரத்னகரன் இது தொடர்பாக கேள்வி எழுப்புகையில்,  இந்த சம்பவத்தின் பின்னணியில் பஞ்சாயத் உறுப்பினர் திபு தலைமையிலான 15 பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் உள்ளனர் என்றும் இந்த 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கேரளா முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறிய அவர் கடந்த சில வருடங்களாக நாட்டில் நிலவி வரும் சகிப்பின்மை காரணமாக கருத்துச் சுதந்திரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்றும் இதற்கு கல்பர்கி, கோவிந்த் பன்சாரே, கெளரி லங்கேஷ் ஆகியோர் தங்களது உயிரை கொடுத்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

கேரளாவில் எழுத்தாளர் வாசுதேவ நாயர் மற்றும் திரைப்பட இயக்குனர் கமல் ஆகியோர் இது போன்று மிரட்டப்பட்டுள்ளனர் என்றும் இது போன்ற நிகழ்வுகள் பொருத்துக்கொள்ளப்படாது என்றும் அதன் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அனைவருக்கும் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்ய தேவையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.