கேரள பழங்குடி மது படுகொலை: மதச்சாயம் பூசிய சேவாக்?

0

கேரள மாநிலத்தில் உணவுப் பொருட்களை திருடினார் என்று குற்றம் சாட்டப்பட்டு  பழங்குடியினத்தை சேர்ந்த மது என்பவர் வன்முறை கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை குறித்து பலரும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து பதிவு செய்த கிரிக்கட் வீரர் சேவாக், “மது ஒரு கிலோ அரிசி திருடினார். உபைத், ஹுசைன் அப்துல் கரீம் ஆகியோர் அடங்கிய கும்பல் அந்த பாவப்பட்ட மனிதனை அடித்தே கொன்றுள்ளது.” என்று கூறியுள்ளார்.

அரிசி திருடியதற்காக மது கொலை செய்யப்பட்டது மனசாட்சி உள்ள அனைவரையும் உலுக்கியுள்ளது. இந்த படுகொலையை எவரும் நியாப்படுத்தவும் இல்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அனைத்து தரப்பட்ட மக்களும் கோரிக்கை விடுத்து வரும் வேலையில் குற்றவாளிகளில் முஸ்லிம்களின் பெயர்களை மட்டும் பதிவிட்டு அந்த கும்பலில் உள்ள முஸ்லிம் அல்லாதோர் பெயர்களை தவிர்த்த ஷேவாக்கின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வலது சாரி இந்து அமைப்புகளின் சமூக வலைத்தளங்கள் இந்த செயல்களில் ஈடுபடுவது அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டது தான் என்ற போதிலும் ஷேவாக் இத்தகைய செயலை செய்வது எதிர்பாராரது என்று பலரும் தெரிவித்துள்ளனர்.

ஷேவாக் பதிவிற்கு பதில் அளித்த கேரள பத்திரிகையாளர் ஸ்னேஹா கோஷி, “குற்றவாளிகளின் ஒரு மதத்தாரின் பெயர்களை மற்றும் குறிப்பிடுவதே ஒரு குற்றம். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரின் பெயர்கள் இதோ. அனீஸ், ஹுசைன், சம்சுதீன், ராதாகிருஷ்ணன், அபூபக்கர், ஜைஜிமொன், உபைத், நஜீப், அப்துல் கரீம், ஹரிஷ், பிஜு, முனீர், சதீஷ். இந்த அத்துணை பெயரையும் வெளியிட உங்களுக்கு தைரியம் உள்ளதா ஷேவாக்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இவர் மட்டுமல்லாது கொலையாளிகளில் முஸ்லிம்களின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டு கூறிய ஷேவாக்கின் செயலை மேலும் பலர் கண்டித்துள்ளனர். மூத்த பத்திரிகையாளரான சேகர் குப்தா, “இந்த கொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 16 நபர்கள் வெவ்வேறு மத நம்பிக்கையை உடையவர்கள். இந்த குற்றச்செயல் மிக மோசமானது, இதற்கு கடுமையான தண்டனை தரப்பட வேண்டும். இதனை மதப்பிரச்சனையாக்குவது ஷேவாக் போன்ற ஒருவரிடம் எதிர்பாராதது” என்று தெரிவித்துள்ளார்.

தனது பதிவிற்கு சமூக வலைதளங்களில் பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழவே, “குற்றத்தை ஒப்புக்கொள்ளாதது மற்றுமொரு குற்றம். இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் சிலரின் பெயர்கள் போதிய தகவல் இல்லாத காரணத்தால் விடுபட்டதற்கு நான் வருந்துகிறேன். அதற்கு நான் எனது உண்மையான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் எனது பதிவு மதசார்புடையது அல்ல. கொலையாளிகள் மதத்தால் வேறுபட்டாலும் வன்முறை மனோநிலையால் ஒன்று பட்டுள்ளனர். அமைதி நிலவட்டும்.” என்று தனது வருத்தத்தை ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் இந்த இரண்டு பதிவிற்கும் இடையேயான காலத்தில் போதுமான பாதிப்பு ஏற்பட்டுவிட்டது என்று தெரிகிறது. குற்றவாளிகளில் முஸ்லிம்களின் பெயர்களை மட்டும் பதிவிட்ட ஷேவாக்கின் பதிவு சுமார் 10000  முறைக்கு மேல் பகிரப்பட்டுள்ளது.

இது நாள் வரை மாட்டிறைச்சி காரணம் கூறியும், முஸ்லிம் என்ற காரணத்தினாலும் முஸ்லிம்கள் முதியவர், சிறுவர் என்று பாராமல் இந்துத்வா வன்முறை கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட போது அதற்கு நியாயம் கற்பித்தவர்கள் தற்போது மதுவின் கொலையை மத சாயம் பூசி விஷக்கருத்துக்களை பரப்ப தொடங்கிவிட்டனர். முன்னதாக பத்மாவதி பட வெளியீட்டின் போது ராஜ்புத் இனத்தவர்கள் பள்ளி பேருந்து ஒன்றை தாக்கிய போதும் முஸ்லிம்கள் தான் அதனை செய்தனர் என்று இந்துத்வா ஆதரவு ட்விட்டர் பிரபலங்கள் வதந்தி பரப்பியது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.