கேரள மாநில மருத்துவ-பொறியியல் நுழைவுத்தேர்வு: முதல் இரண்டு இடங்களை பிடித்து முஸ்லிம் மாணவிகள் சாதனை

0

கேரள மாநிலத்தில் 2015-ஆம் ஆண்டிற்கான மருத்துவம்-பொறியியல் நுழைவுத்தேர்வில் மலப்புரத்தை சேர்ந்த ஹிபா மருத்துவத்தில் முதல் ரேங்கை பெற்றுள்ளார். அவரது மதிப்பெண் 954.7826.எர்ணாகுளத்தை சேர்ந்த மர்யம் ராபிஆ இரண்டாவது ரேங்கை பெற்றுள்ளார். அவரது மதிப்பெண் 944.3478.
மருத்துவ நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்த ஹிபாவின் தந்தை அப்துல் ரஹ்மான் குட்டி கடந்த 2012-ஆம் ஆண்டு புற்றுநோய் பாதித்து மரணமடைந்தார். தனக்கு பொறியியல் பாடத்தில் விருப்பம் இருந்தபோதும் தந்தையின் விருப்பப்படி மருத்துவத்தில் நுழைவுத் தேர்வை எழுதியுள்ளார் ஹிபா. கடந்த ஆண்டு மருத்துவ நுழைவுத்தேர்வில் 3121-வது ரேங்கைப் பெற்றார். ஆனால், மனம் தளராமல் இவ்வாண்டும் நுழைவுத்தேர்வை எழுதி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் மஞ்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-வது வகுப்பை முடித்துள்ளார்.
மருத்துவ நுழைவுத்தேர்வில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள மர்யம் ராபிஆ கடந்த முறை எழுதிய தேர்வில் 2450-வது இடத்தைப் பெற்றார். இம்முறை இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். ‘பெரும்பாலும் தேர்வு நெருங்கும்போது எனக்கு மன அழுத்தம் ஏற்படும். ஆனால், அல்லாஹ்வின் கருணையின் காரணமாக அதில் இருந்தெல்லாம் நான் விடுபட்டுவிட்டேன்’ என்று கூறும் ராபிஆ டெல்லி எய்ம்ஸிலும் நுழைவுத்தேர்வை எழுத உள்ளார். அவரது சகோதரி எய்ம்ஸில் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று அங்கு மருத்துவம் பயின்று வருகிறார்.

Comments are closed.