கேலிச் செய்திகளை உண்மைச் செய்தி என நம்பி வெளியிடும் செய்தி நிறுவனங்கள்

0

சில காலத்திற்கு முன் ஆஜ் தக் செய்தி நிறுவனம் ஒரு போலியான ஃபத்வா ஒன்றை செய்தி என வெளியிட்டது. அது, ஒருவர் கொடுமையான பசியில் இருந்தால் அவர் தனது மனைவியை கொன்று உன்ன அனுமதி உண்டு என்பதே. இந்த செய்தியை அப்படியே புனே மிரர் செய்தித்தாளும் பிரசுரித்தது. உண்மையில் அந்த செய்தியானது மொரோக்கொவை சேர்ந்த கேலிச் செய்தி எழுத்தாளரான இஸ்ராஃபேல் அல் மக்ர்பி என்பவர் எழுதிய நையாண்டி செய்தி ஆகும். இது போன்றே தற்போது பாகிஸ்தானில் ஒருவருக்கு ரமதான் மாதத்தில் பள்ளிவாசலுக்குள் வைத்து காற்று பிரிந்த காரணத்தினால் அவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது என்கிற செய்தியினை பல முன்னணி செய்தி நிறவனங்கள் வெளியிட்டுள்ளன.

World News Daily Report என்ற இணையதளம் வெளியிட்ட ஒரு நையாண்டி பதிவு தான் இது. மேலும் அந்த தளம் தங்களது ஒவ்வொரு பக்கத்தின் இறுதியிலும் தாங்கள் வெளியிடும் செய்திகள் அனைத்தும் கற்பனையே என்று பதிவு செய்துள்ளனர்.

“World News Daily Report assumes all responsibility for the satirical nature of its articles and for the fictional nature of their content. All characters appearing in the articles in this website – even those based on real people – are entirely fictional and any resemblance between them and any person, living, dead or undead, is purely a miracle.” 

இப்படி இருக்க இந்தியாவின் பல முன்னணி ஊடகங்கள் இந்த தளத்தில் உள்ள செய்தியை உண்மையென நம்பி செய்தி வெளியிட்டிருப்பது மக்களுக்கு உண்மைச் செய்தியை தர அவர்கள் எடுக்கும் முயற்சி எந்த அளவிற்கானது என்பதை உணர்த்துகின்றது. ஃபேஸ்புக் முதலிய பல சமூக வலைதளங்களில் உள்ள பலர் இந்த செய்தியை உண்மை என நம்பி தங்களது பக்கங்களில் பதிவு செய்து வந்துள்ளனர். ஃபேஸ்புக்கில் மட்டுமே இந்த பதிவு சுமார் 100000 க்கும் மேற்பட்ட முறை பகிரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்று மற்றொரு நிகழ்வில் சவூதி அரேபியாவின் இளவரசர் சூதாட்டத்தில் 359 மில்லியன் டாலர்களும் 5 மனைவிகளையும் இழந்ததாக ஒரு செய்தியை காங்கிரஸ் தலைவர் ஷஷி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அது போலியான செய்தி என்று அவரிடம் சுட்டிக்காட்டப்படவே அவர் அந்த பதிவை நீக்கிவிட்டார். ஆனால் தனது அந்தப் பதிவிற்காக அவர் மன்னிப்பு ஏதும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சந்தேஷ் செய்தித்தாளும் இணைய செய்தித் தளமான OneIndia செய்தித் தளமும் பாகிஸ்தான் குறித்த அந்த போலியான செய்தியை உண்மையென பரப்பியுள்ளது. இதில் சந்தேஷ் குஜராத்தின் இரண்டாவது பெரிய செய்தித்தாள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை 02-07-2017 அன்று தங்களின் செய்தித்தாளில் 12 பக்கத்தில் பிரசுரித்துள்ளது சந்தேஷ். இந்த செய்தியை இந்தி மொழியில் மொழிப்பெயர்த்து தங்களது செய்தி தளத்தில் வெளியிட்டுள்ளது OneIndia செய்தித் தளம்.

இவர்களை பின்தொடர்ந்து பல வலதுசாரி செய்தித் தளங்களும் இந்த செய்தியை அப்படியே பிரசுரிக்க வலதுசாரி சிந்தனையாளர்கள் இதனை உண்மை என்றே நம்பி தங்கள் பக்கங்களில் பரப்பியுள்ளனர். மோடியால் டிவிட்டரில் பின்தொடரப்படும் ரிஷி பாக்றீ என்பவரும் கவ்ரவ் பிரதான் என்பவரும் இந்த செய்தியை தங்கள் பக்கங்களில் பகிருந்துள்ளனர். இது போன்றவர்கள் பகிரும் செய்திகளில் பெரும்பான்மையானவை போடோஷாப் செய்யப்பட்டதாகவும் போலியானதாகவும் இருப்பது வழக்கம் தான் என்றாலும் முன்னணி ஊடங்களை மேற்கோள் காட்டி இது போன்ற செய்தி வெளியிடும்போது சாதாரண மக்களிடையே அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. இத்தகைய ஊடகங்கள் இனியாவது தங்களின் பொறுப்புணர்ந்து செயல்பட்டு உண்மைச் செய்திகளை மக்கள் மத்தியில் சேர்க்க வேண்டும். மேலும் பொதுவாக நையாண்டி செய்திகளை வெளியிடும் தளங்கள் தங்களின் இணையதள பக்கத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்ட செய்திகள் நையாண்டி / போலியான செய்திகள் என்று குறிப்பிட வேண்டும். ஆனால் அதிகளவிலான மக்களை ஈர்க்கவும் விளபரங்கள் மூல வருமானம் ஈட்டவும் அவர்கள் இதனை பக்கத்தின் இறுதியில் குறிப்பிடுகின்றனர் என்று கூறப்படுகிறது.

Comments are closed.