கேஸ் டைரி

0

வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி டைம்ஸ் நவ் செய்தியாளர்கள் மனு

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் “கேரளாவில் வேட்டையாடப்பட்டு மதம் மாற்றப்படும் இந்து பெண்கள்” என்ற தலைப்பில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பியது. தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ.வின் ரகசிய அறிக்கை தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் தலைவர் ஆசிரியர் சைனப்பா இந்துப் பெண்களை இஸ்லாதிற்கு மதம் மாற்றுபவர் என்று குறிப்பிடப்பட்டதாகவும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி குறிப்பிட்டது.

இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஆசிரியர் சைனப்பா, தான் பெண்களை மதம்மாற்றுபவர், மதம் மாறிய பெண்களுக்கு அடைக்கலம் தருபவர் என்றும் தன்னை குறித்து தவறான கருத்துகளை டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அவர்களின் நிகழ்ச்சி மூலம் பரப்பியுள்ளது என்று குறிப்பிட்டார். முஸ்லிம்களை சிறுமைபடுத்தும் நோக்கத்தில் கட்டமைக்கப்பட்ட லவ் ஜிகாத் பரப்புரையில் தன்னையும் தொடர்புபடுத்த டைம்ஸ் நவ் முயல்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

‘2017 ஆகஸ்ட் மாதம் 30 ஆம் நாள் ஒளிபரப்பட்ட இந்த நிகழ்ச்சியை உலகெங்கிலும் உள்ள பல இலட்சம் மக்கள் கண்டுள்ளனர். அந்த நிகழ்ச்சியை கண்ட என்னுடைய பல நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ஆதரவாளர்கள் என்னை அழைத்து தங்களின் அதிருப்தியை தெரிவித்தனர். டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் இந்த நிகழ்ச்சியினால் எனக்கு சமூகத்தில் இருந்த நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது’ என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார். வழக்கை விசாரித்த மலப்புரம் மாவட்ட நீதிமன்றம் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியர் ராகுல் சிவசங்கர் மற்றும் அந்த தொலைக்காட்சியின் நெறியாளராக பணியாற்றிய ஆனந்த் நரசிம்மன் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் தங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறி கேரள உயர் நீதிமன்றத்தை இருவரும் நாடியுள்ளனர். தங்களது தொலைக்காட்சியில் சைனப்பா குறித்த நிகழ்ச்சி ஒளிபரப்பட்ட போது இரண்டு மத மாற்ற வழக்குகள் தொடர்பாக சைனப்பா விசாரிக்கப்பட்டு வந்தார் என்றும் அவர்கள் தங்களது மனுவில் தெரிவித்துள்ளனர்.

லவ் ஜிகாத் என்று கூறப்பட்டு உச்ச நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்ற ஷபின் ஜஹான், ஹாதியா வழக்கு தொடர்பாக ஆசிரியர் சைனபா விசாரிக்கப்பட்டார். ஹாதியா இஸ்லாத்தை ஏற்ற போது தனது பெற்றோர்களுடன் செல்ல விருப்பம் இல்லாமல் இருந்த நிலையில் கேரளா உயர் நீதிமன்றம் சைனபாவை அவரின் பாதுகாவலராக நியமித்தது.

பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் ஜார்கண்ட் மாநில பா.ஜ.க.அரசு அம்மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை தடை செய்தது. இத்தடையை கண்டித்து நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி பெறவில்லை என்று கூறி காவல்துறை அதில் கலந்து கொண்ட 400 நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது. இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 188 மற்றும் 143ன் கீழ் காவல்துறை வழக்கை பதிவு செய்தது.

இதனை எதிர்த்து முகம்மது ஷேக் அன்சாரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 188ன் கீழ் வரும் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் போது காவல்துறை சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று ஜீவானந்தம் வழக்கில் நீதிமன்றம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டிய மனுதாரர், இந்த வழக்கில் காவல்துறை அந்த வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றும் எனவே அனைவரின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

நீதி கிடைக்காமல் மரணித்த முஹ்ஸின் ஷேக்கின் தந்தை

2014ல் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, புனேயை சேர்ந்த ஐ.டி. நிறுவன ஊழியர் முஹ்ஸின் ஷேக் படுகொலை செய்யப்பட்டார். இவரின் படுகொலை ‘முதல் விக்கெட்’ என்று இந்துத்துவ வெறியர்கள் குறிப்பிட்டனர். ஜூன் 2, 2014 அன்று இரவு மஸ்ஜித்தில் இருந்து தொழுதுவிட்டு திரும்பும் வழியில் தனன்ஜய் தேசாயின் இந்து ராஷ்டிர சேனா குண்டர்களால் முஹ்ஸின் கொல்லப்பட்டார். (விரிவான தகவல்களுக்கு விடியல் ஜூலை 2014 இதழ்). இந்த வழக்கில் தனன்ஜய் தேசாய் உள்ளிட்ட 24 பேர் கைது செய்யப்பட்டனர். புனே செசன்ஸ் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை. தன் மகனை கொலை செய்த குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அயராது போராடிய முஹ்ஸினின் தந்தை சாதிக் ஷேக் மாரடைப்பு காரணமாக டிசம்பர் 17 அன்று மரணமடைந்தார். மருத்துவ செலவுகளுக்கு பணம் இல்லாத காரணத்தினால ஆயுர்வேத சிகிச்சையை அவர் பெற்று வந்தார்.

தனது மகன் கொலை செய்யப்பட்டதற்கான நிவாரணமாக 30.9 இலட்சம் வழங்க வேண்டும் என்றும் இடைக்கால நிவாரணமாக ஐந்து இலட்சம் வழங்க வேண்டும் என்றும் சாதிக் ஷேக் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நரேஷ் பட்டேல் மற்றும் எம்.எஸ்.கர்னிக் ஆகியோர் அடங்கிய அமர்வு எதற்காக அரசாங்கம் இன்னும் நிவாரணம் வழங்கவில்லை என்று கேள்வி எழுப்பியது. தனது மகன் படுகொலையில் நீதியும் கிடைக்காமல் நிவாரணமும் கிடைக்காமல் மரணித்துள்ளார் சாதிக் ஷேக்.

டெலிபோன் பூத் மூலம் வருவாய் ஈட்டிவந்த சாதிக் ஷேக், தனது மகனின் படுகொலைக்கு பிறகு வழக்கு விசயமாக பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியிருந்ததால் அவரால் கடையை முறையாக நடத்த முடியவில்லை. இவரின் மற்றொரு மகனான முபீன் உள்ளூரில் உள்ள ஒரு வாகன கடையில் வேலை பார்த்து வருகிறார். தனது வருமானத்தை கொண்டு குடும்பத்தை நடத்த இயலவில்லை என்று அவர் தெரிவித்தார். பட்டதாரியான முபீன் தனது தந்தையின் உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் இருந்த காரணத்தினால் அவர் முன்னர் இருந்த வேலையை இழக்க நேரிட்டது.

முஹ்ஸின் ஷேக்கின் படுகொலையில் நீதியை பெறுவதற்கான தங்களின் போராட்டம் தொடரும் என்று குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

ஐ.பி.எஸ். அதிகாரி ரஜ்னீஷ் ராய் பணி நீக்கம்!

சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கௌண்டர் வழக்கை விசாரித்து மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகளை கைது செய்த ஐ.பி.எஸ். அதிகாரி ரஜ்னீஷ் ராயை மத்திய உள்துறை அமைச்சகம் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. அவர் கடைசியாக பணியாற்றிய சித்தூர் சி.ஆர்.பி.எஃப். பள்ளியின் முதல்வர் மற்றும் ஐ.ஜி. பொறுப்புகளை முறையாக ஒப்படைக்கவில்லை என்று கூறி அமைச்சகம் அவரை பணிநீக்கம் செய்துள்ளது.

முன்னதாக ரஜ்னீஷ் ராய் விருப்ப ஓய்வு அடிப்படையில் தனது பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆகஸ்ட் மாதம் அறிவித்தார். ஆனால் இதனை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. தன்னை ஓய்வு பெற்றதாக கருத வேண்டும் என்று குறிப்பிட்டு மத்திய அரசின் முடிவை எதிர்த்து சென்ட்ரல் அட்மினிஸ்டிரேடிவ் டிரிபூனலில் ரஜ்னீஷ் வழக்கு தொடுத்துள்ளார். விருப்ப ஓய்விற்கு யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் 50 வயதை கடந்த ஊழியர்கள் இந்த முறையில் பணியில் இருந்து ஓய்வு பெறலாம் என்றும் ராயின் வழக்கறிஞர் ராகுல் சர்மா தெரிவித்தார். ராயின் நோட்டீஸ் காலம் நவம்பர் 23யுடன் முடிவடைந்தது என்றும் அவர் கூறினார். பணியில் இருந்து ஓய்வு பெற்ற தன்னை எவ்வாறு பணிநீக்கம் செய்ய முடியும் என்று ரஜ்னீஷ் ராய் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேர்மையாக செயல்படும் அதிகாரிகளை பழிவாங்கும் மத்திய அரசின் செயல்பாடுகளின் ஓர் அங்கமாகவே ரஜ்னீஷ் ராய் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஹாஷிம்புரா வழக்கு: மேல்முறையீட்டை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம்

ஹாஷிம்புரா படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரின் மேல்முறையீட்டை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் அவர்களின் ஜாமீன் மனுக்களை நிராகரித்துள்ளது. 1987ல் 42 முஸ்லிம்களை படுகொலை செய்த வழக்கில் 16 முன்னாள் காவல்துறையினருக்கு ஆயுள் தண்டனை அளித்து அக்டோபர் 31 அன்று டெல்லி உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. முன்னதாக இந்த 16 காவல்துறையினரையும் விசாரணை நீதிமன்றம் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் நிராயுதபாணிகளான அப்பாவி மக்களை காவல்துறை குறிவைத்து சுட்டுக் கொன்றது என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டது. உயர்நீதிமன்றத்தால் தண்டனை அளிக்கப்பட்ட சமியுல்லாஹ், நிரஞ்சன் லால், மகேஷ் பிரசாத் மற்றும் ஜெய்பால் ஆகிய நால்வர் தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இவர்களின் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் யு.யு.லலித் மற்றும் நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது.

மணிப்பூர்:- தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பத்திரிகையாளர் கைது

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மணிப்பூர் பத்திரிகையாளர் கிஷோர்சந்திரா வாங்கம் ஒரு வருடத்திற்கு சிறையில் அடைக்கப்பட்டார். நவம்பர் 26 அன்று தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கிஷோர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆலோசனை குழு டிசம்பர் 11 அன்று கூடியது. டிசம்பர் 13 அன்று அதிகாரிகளிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்த ஆலோசனை குழு அவரின் கைதை உறுதி செய்தது. இதனை தொடர்ந்து கிஷோருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒருவரை அதிகபட்சமாக 12 மாதங்கள் சிறையில் அடைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பாதுகாப்பிற்கும் சட்டம் ஒழுங்கிற்கும் கிஷோரின் நடவடிக்கைகள் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இச்சட்டத்தின் 13வது பிரிவின் கீழ் அவரை அதிகபட்சம் 12 மாதங்கள் சிறையில் அடைப்பதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஐ.எஸ்.டி.வி. என்ற உள்ளூர் செய்திச் சேனலில் பணியாற்றி வரும் கிஷோர்சந்திரா, மாநிலத்தை ஆட்சி செய்யும் பா.ஜ.க. கூட்டணி அரசை விமர்சித்து சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்ததற்காக நவம்பர் 21 அன்று காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ஆங்கிலேயருக்கு எதிராக ஜான்சி ராணி நடத்திய போராட்டத்தை மணிப்பூர் சுதந்திர இயக்க போராட்டத்துடன் முதல்வர் பிரன் சிங் ஒப்பிட்டு பேசியதை கிஷோர்சந்திரா கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மணிப்பூரின் சுதந்திரத்திற்காக ஜான்சி ராணியின் பங்களிப்பு குறித்து கேள்வி எழுப்பியவர் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சை கடுமையாக விமர்சனம் செய்தார். நவம்பர் 25ல் உள்ளூர் நீதிமன்றம் அவரை விடுவித்த போதும் காவல்துறை அவரை மீண்டும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது.

கருத்துரிமையை நசுக்கி வரும் பா.ஜ.க. அரசின் மற்றொரு அங்கமாகவே மணிப்பூர் பத்திரிகையாளர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


Comments are closed.