கேஸ் டைரி

0

கேஸ் டைரி

இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை: ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரை கொலை செய்து நாடகமாடிய ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்!

ஜனவரி 23 ஆம் தேதி மத்திய பிரதேசத்தின் ரத்லம் பகுதியில் முகம் எரிக்கப்பட்டு சேதமடைந்த ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த உடல் ஹிம்மத் படிதார் என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவரின் உடல் என்று முதலில் கூறப்பட்டது. ஹிம்மத்தின் தந்தை லக்ஷ்மிநாராயண் படிதார், அது தனது மகனின் உடல் என்று தெரிவித்தார். இதனையடுத்து அப்பகுதி பா.ஜ.க.வினர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று கூறி போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் சம்பவம் நடைபெற்று ஒரு வாரத்திற்கு பிறகு இறந்ததாக கூறப்படும் நபர் உயிருடன் இருப்பது தெரிய வந்துள்ளது.

கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஹிம்மத் படிதார், தான் இறந்துவிட்டதாக பிறரை நம்பவைக்க ஒருவரை கொலை செய்து முகத்தை சிதைத்துள்ளது தற்போது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. காப்பீட்டுத் தொகையை பெற்று அதன் மூலம் தனது பத்து இலட்சம் ரூபாய் கடனை அடைக்க அவர் இந்த கொலையை செய்ததை விசாரணை அம்பலப்படுத்தியது. கொலை செய்யப்பட்ட நபர் அதே பகுதியை சேர்ந்த மதன் மாளவியா என்பதை டி.என்.ஏ. சோதனை உறுதிப்படுத்தியது. கொலை செய்யப்பட்ட மதனும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதனை கொலை செய்த ஹிம்மத் படிதார் மற்றவர்களை நம்ப வைக்க இறந்த உடலின் அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு பா.ஜ.க.வினர் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருவதாக பா.ஜ.க.வினர் குற்றஞ்சாட்டி போராட்டங்களை நடத்தி வந்தனர். இது குறித்து தனது கருத்தை தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் உள்துறை அமைச்சர் பாலா பச்சன், “பாஜக வினர் தங்களது மோசமாக குற்றங்களுக்கு தாங்களே பலியாகி வருகின்றனர். முன்னதாக மந்த்சௌர் முனிசிபாலிட்டி தலைவர் பிரஹ்லத் பந்த்வார் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட போது காங்கிரஸை குறை கூறினர். பின்னர் விசாரணையின் போது நிதி மோசடி தொடர்பாக பா.ஜ.க.வை சேர்ந்தவரே அவரை கொலை செய்தது தெரியவந்தது” என்று தெரிவித்துள்ளார்.


பா.ஜ.க. அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியாவின் மர்மம் நிறைந்த கொலையை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளது.

2003 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் கொல்லப்பட்ட பா.ஜ.க. அமைச்சரின் கொலையில் தொடக்கம் முதலே பல மர்மங்கள் இருந்து வந்தது. சிபிஐ விசாரித்த இந்த கொலை வழக்கில் 12 நபர்களை குற்றவாளிகள் என்று விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்றும் இந்த வழக்கின் விசாரணை சிதைக்கப்பட்டுள்ளது என்று கூறி குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது.

சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கௌண்டர் வழக்கின் முக்கிய சாட்சியான அஸாம் கான், ஹரேன் பாண்டியா கொலை தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். ஹரேன் பாண்டியாவை கொலை செய்யும் கூலிப்படை ஒப்பந்தத்தை குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரி டி.ஜி.வன்சாரா தங்களுக்கு அளித்தார் என்று சொஹ்ராபுதீன் ஷேக் தன்னிடம் கூறியதாகவும் இதன் அடிப்படையில் துளசிராம் பிரஜாபதி, நயீம் மற்றும் ஷாஹித் ஆகியோர் ஹரேன் பாண்டியாவை கொலை செய்ததாகவும் கடந்த 2018 நவம்பர் 3 ஆம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் அஸம் கான் தெரிவித்துள்ளார். இந்த தகவல்களை 2010 ஆம் ஆண்டே சிபிஐயிடம் தான் தெரிவித்ததாகவும் ஆனால் இதனை சற்றும் கண்டுகொள்ளாத சிபிஐ இது தங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் இதனை வெளியில் கூற வேண்டாம் என்று தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.

அரசியல் சூழ்ச்சிகள் காரணமாகவே பாண்டியா கொலை செய்யப்பட்டதாக என்கௌண்டர் கொலைகளை விசாரித்த குழுவிடம் வன்சாரா கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா 2013ல் வெளியிட்ட செய்தியையும் மனுதாரர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

இத்துடன் ராணா அய்யூப் எழுதிய ‘குஜராத் ஃபைல்ஸ்’ என்ற புத்தகத்தில் வரும் தகவல் ஒன்றையும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதில், காவல்துறை அதிகாரி ஒய்.ஏ. ஷேக், ஹரேன் பாண்டியாவின் மரணம் ஒரு அரசியல் சதித்திட்டம், கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அந்த கொலைக்கு முன்னதாகவே காவல்துறை கட்டுப்பாட்டில்தான் இருந்தனர் அவர்களுடன் இந்த கொலையை நேரில் கண்டதாக கூறப்பட்ட சாட்சியங்களும் காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் ஹரேன் பாண்டியா வழக்கை மீண்டும் விசாரிப்பதுடன் இந்த வழக்கை முன்னர் விசாரித்த அதிகாரிகளையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் தங்கள் மனுவில் சென்டர் ஃபார் பப்ளிக் இன்ட்ரஸ்ட் லிட்டிகேஷன் குறிப்பிட்டுள்ளது.


 

புனே இளைஞர் முஹ்சின் ஷேக் கொலை வழக்கு: இந்து ராஷ்டிர சேனா தலைவர் தனன்ஜெய் தேசாய்க்கு பிணை

2014 ஆம் ஆண்டு மோடி அரசு பதவி ஏற்றதும் முதல் விக்கட் என்று இந்துத்வா கும்பலால் கூறப்பட்டு ஜூன் 2ஆம் தேதி கொலை செய்யப்பட்ட இளைஞர் முஹ்சின் ஷேக் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்து ராஷ்டிர சேனா அமைப்பின் தலைவர் தனன்ஜெய் தேசாய்க்கு பாம்பே உயர்நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பிணைக்காக தேசாய் தரப்பு வழக்கறிஞர்கள் சமர்ப்பித்த அஃபிடவிட்டில், இந்து ராஷ்டிர சேனா அல்லது வேறு எவரும் நடத்தும் பொது அல்லது அரசியல் பேரணிகளில் தேசாய் பங்கெடுக்க மாட்டார், நிகழ்ச்சிகளில் சொற்பொழிவு நிகழ்த்த மாட்டார், இந்து ராஷ்டிர சேனா தொடர்பான அனைத்து சுவரொட்டிகள் மற்றும் பேனர்களை அவர் அகற்றி விடுவார் என்று உத்தரவாதம் கொடுத்துள்ளனர்.


நரோடியா பாட்டியா வழக்கு: நால்வருக்கு பிணை!

2002 குஜராத் நரோடா பாட்டியா கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உமேஷ்பாய் பரத்வாட், ராஜ்குமார், ஹர்ஷத் மற்றும் பிரகாஷ்பாய் ரதோட் ஆகியோருக்கு கடந்த 22 ஆம் தேதி நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இவர்கள் குற்றவாளிகள் என்று குஜராத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவாதத்திற்கு உட்பட்டது என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

2002 குஜராத் இனப்படுகொலையின் போது நரோடா பாட்டியா பகுதியில் 97 முஸ்லிம்கள் இந்துத்துவா குண்டர்களால் கொலை செய்யப்பட்டனர். இந்த கலவர வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், இந்த நான்கு பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இத்துடன் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பாபு பஜ்ரங்கி உட்பட 16 நபர்கள் இந்த வழக்கில் குற்றவாளிகள் என்று உயர் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டனர்.

Comments are closed.