கேஸ் டைரி

0

கேஸ் டைரி

அலீமுதீன் அன்சாரி வழக்கு – குற்றவாளிகளுக்கு பிணை வழங்கிய உயர் நீதிமன்றம்

ஜார்கண்டின் ராம்கார்க்கை சேர்ந்த அலீமுதீன் அன்சாரி என்பவரை சென்ற வருடம் ஜூன் 29 அன்று மாட்டிறைச்சியை கொண்டு சென்றார் என்று குற்றம்சாட்டி பசு பயங்கரவாதிகள் அடித்துக் கொலை செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம் மார்ச் மாதம் இந்த வழக்கில் தொடர்புடைய 11 நபர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. வழக்கில் தொடர்புடைய 12வது நபர் சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தார். பசு பயங்கரவாதிகள் தொடர்புடைய வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்ட முதல் வழக்காக இந்த வழக்கு திகழ்ந்தது. பசு பயங்கரவாதிகளின் கொடூரத்தில் நாடு சிக்கியுள்ள நிலையில் இத்தீர்ப்பு மக்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் விதத்தில் அமைந்திருந்தது.

ஆனால் குற்றவாளிகளின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் எட்டு நபர்களுக்கு பிணை வழங்கியது; அவர்களின் தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அலீமுதீன் கொலை செய்யப்பட்டு சரியாக ஒரு வருடம் கழித்து வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. ஊடக பிரிவின் மாவட்ட பொருப்பாளர் நித்யானந்த் மகாதோ, ரோகித் தாகூர், கபில் தாகூர், ராஜூ குமார், சந்தோஷ் சிங், விக்கி சாவ், சிக்கந்தர் ராம் மற்றும் உத்தம் ராம் ஆகியோருக்கு நீதிபதிகள் ஹெச்.சி.மிஸ்ரா மற்றும் பி.பி.மங்கல்மூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு ஜாமீன் வழங்கியுள்ளது. வழக்கில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் ஹசாரிபாக் தொகுதி பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய அமைச்சருமான ஜெயந்த் சின்ஹாவை சந்திக்கச் சென்ற போது குற்றவாளிகளுக்கு அவர் மாலை அணிவித்து கௌரவித்தது கண்டனங்களை பெற்றுள்ளது. விரைவு நீதிமன்றத்தின் தீர்ப்பில் தனக்கு சந்தேகம் இருந்ததாகவும் கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவிகள் என்றும் கூறி தனது செயலை நியாயப்படுத்தி வருகிறார் ஜெயந்த் சின்ஹா.

ஜூலை 8 அன்று ஒன்பதாவது குற்றவாளியான விக்ரம் பிரசாத்திற்கும் நீதிமன்றம் பிணை வழங்கியது. மற்றவர்களுக்கு பிணை வழங்கிய அதே அடிப்படையிலேயே இவருக்கும் பிணை வழங்கப்பட்டதாக கூறிய வழக்கறிஞர் பி.எம். திரிபாதி சிறையில் உள்ள மற்ற இருவருக்கான ஜாமீன் மனுக்களையும் விரைவில் தாக்கல் செய்யவுள்ளதாக கூறினார்.


வன்முறையை கட்டவிழ்க்க ஆட்களை சேர்க்கும் இந்துத்துவம்

கர்நாடகாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதற்கும் கொலைகளை நடத்துவதற்கும் இந்துத்துவ அமைப்பொன்று 60 நபர்களை தேர்வு செய்துள்ளதை கர்நாடகா காவல்துறை கண்டுபிடித்துள்ளது. பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலையை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது. இதில் ஏறதாழ பாதி நபர்கள் கண்டறியப்பட்டு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக அவர்கள் குறித்த தகவல் கர்நாடகா காவல்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.

சனாதன் சன்ஸ்தா, இந்து ஜனஜாக்ருதி சமிதி, இந்து யுவ சேனா மற்றும் ஸ்ரீராம் சேனா அமைப்பை சேர்ந்த ஆறு பேர் இதுவரை கௌரி லங்கேஷ் படுகொலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கௌரி லங்கேஷ் தவிர்த்து சிந்தனையாளர் பகவான் உள்ளிட்ட நபர்களையும் இந்துத்துவ கும்பல் கொலை செய்ய திட்டமிட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனிடையே நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே ஆகியோரின் கொலை வழக்குகளில் மகாராஷ்டிரா மாநில சிறப்பு புலனாய்வு துறை மற்றும் சிபிஐ சமர்ப்பித்த அறிக்கைகளில் திருப்தியடையாத பம்பாய் உயர்நீதி மன்றம் உள்துறை கூடுதல் சிறப்பு செயலாளர் மற்றும் சிபிஐ உதவி இயக்குநரை ஜூலை 12 அன்று நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் எஸ்.சி. தர்மாதிகாரி மற்றும் பாரதி ஹெச். தாங்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு, அறிக்கையில் தங்களுக்கு திருப்தி இல்லை என்று கூறியதுடன் ‘‘கௌரி லங்கேஷ் கொலையை விசாரித்து வரும் கர்நாடகா காவல்துறையுடன் இணைந்து செயல்படுகிறோம் என்ற கூற்றில் உறுதியாக உள்ளீர்களா?’’ என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. கௌரி லங்கேஷ் வழக்கில் கர்நாடகா காவல்துறை காட்டி வரும் அக்கறையை இந்த வழக்குகளில் மகாராஷ்டிரா காவல்துறையும் வெளிப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


நரோடா பாட்டியா வழக்கு: மூவருக்கு பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை

நரோடா பாட்டியா கலவர வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட மூன்று பேருக்கு குஜராத் உயர் நீதிமன்றம் பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தற்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ள உமேஷ் பர்வாத், பத்மேந்திரசிங் ராஜ்பூத் மற்றும் ராஜ்குமார் சவ்மல் ஆகியோர் 2012 ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டவர்கள்.

முன்னதாக இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த குஜராத் அமைச்சர் மாயா கோட்னானியை அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி குஜராத் உயர் நீதிமன்றம் விடுவித்தது குறிப்பிடத்தக்கது. விசாரணை நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர் மாயா கோட்னானி.

2002ம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று அகமதாபாத்தின் நரோடா பாட்டியா பகுதியில் நடத்தப்பட்ட இந்த கலவரத்தில் மொத்தம் 97 பேர் கொலை செய்யப்பட்டனர். குஜராத் இனப்படுகொலையின் போது நடத்தப்பட்ட படுகொலைகளை விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவால் விசாரிக்கப்பட்ட வழக்குகளில் இதுவும் ஒன்றாகும்.


மருத்துவர் கபீல்கானின் சகோதரர் மீது மோசடி வழக்கு

மருத்துவர் கபீல்கானின் இளைய சகோதரர் மீது சமீபத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்நிலையில் தற்போது அவரது மற்றொரு சகோதரர் மற்றும் அவரது நண்பர் மீது போலியான ஆவணங்களை வைத்து வங்கிக் கணக்கு தொடங்கியதாக காவல்துறை மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஙிஸிஞி மருத்துவமனையில் சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்து கொண்டிருந்த குழந்தைகளை மருத்துவர் கபீல்கான் தனது சொந்த முயற்சியில் காப்பாற்றினார். அதனை தொடர்ந்து அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் பல்வேறு விதமான அடக்குமுறைகளை உத்தர பிரதேச அரசு கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. குழந்தைகளை காப்பாற்றிய கபீல்கான் மீது வழக்கு பதிவு செய்து பிணை வழங்காமல் எட்டு மாதங்கள் அவரை சிறையில் அடைத்தது ஆதித்யநாத் அரசு.

கபீல்கானின் மூத்த சகோதரர் ஆதில் மற்றும் அவரது நண்பர் முஹம்மது பைசான் மீது வழக்குகளை பதிவு செய்துள்ள காவல்துறை, பைசானின் பெயரில் திறக்கப்பட்ட வங்கிக் கணக்கு ஆவணங்களில் பைசானின் பெயரும் முசப்பர் ஆலம் என்பவரது புகைப்படமும் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் வங்கியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களுடன் இணைக்கப்பட்ட ஓட்டுனர் உரிமமும் போலியானது என்றும் இந்த வங்கி கணக்கு மூலம் சுமார் இரண்டு கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது என்றும் கூறுகிறது.

போலி ஆவணங்கள் மற்றும் தனது புகைப்படங்கள் வைத்து ஆதில் மற்றும் பைசான் ஆகியோர் கடந்த 2009ம் ஆண்டு வங்கிக் கணக்கு ஒன்றை தொடங்கியதாக ஷேக்பூர் பகுதியை சேர்ந்த ஆலம் காவல்துறையில் கொடுத்த புகாரை தொடர்ந்து இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் காவல்துறை கூறுகிறது.

தன் மீதான வழக்கு குறித்து கருத்து தெரிவித்த ஆதில் தனது சகோதரர் மீது துப்பக்கிச்சூடு நடத்தியவர்களை கைது செய்வதை விட்டுவிட்டு போலியான வழக்கில் தன்னை சிக்க வைக்க காவல்துறை முயற்சித்து வருகிறது என்றும் இவற்றின் பின்னணியில் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.


ஹாபூர் வழக்கு: முக்கிய குற்றவாளிக்கு பிணை

உத்தர பிரதேசம் மாநிலம் ஹாபூரில் பசு பயங்கரவாதிகளால் கடந்த மாதம் 19ம் தேதி காசிம் என்ற நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். (பார்க்க: புதிய விடியல் ஜூன் 16-&30). இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான யுதிஸ்டர் சிசோதியாவிற்கு செசன்ஸ் நீதிமன்றம் படுகொலை நிகழந்த 20 நாட்களில் பிணை வழங்கியுள்ளது.

வீடியோ பதிவுகள் மற்றும் இச்சம்பவத்தில் கடுமையாக தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சம்சுதீனின் வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில் 11 நபர்களுக்கு எதிராக காவல்துறை வழக்கு பதிவு செய்தது. ‘‘பொதுவாக இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 302ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நபருக்கு எளிதில் பிணை கிடைக்காது. நீதிமன்றத்தின் உத்தரவில் தான் கருத்து கூற விரும்பவில்லை’’ என்று ஹாபூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சங்கல்ப் சர்மா கூறியுள்ளார். அடித்துக் கொலை செய்த வழக்காக காவல்துறை இதனை பதிவு செய்யாமல், தெருச் சண்டை வழக்காக பதிவு செய்ததுதான் குற்றவாளி எளிதாக பிணை கிடைக்க காரணமாக அமைந்தது என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

முக்கிய குற்றவாளி வெளியே வந்ததை தொடர்ந்து மற்றவர்களும் விரைவில் வெளியே வந்துவிடுவார்கள் என்று கூறும் அவர்கள் தங்களின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்றும் அஞ்சுகின்றனர். எதிர் தரப்பினர் தங்களுக்கு எதிராக ஒரு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து கொலை வழக்கை ரத்து செய்ய எங்களுடன் பேரத்தில் ஈடுபடலாம் என்று சம்சுதீனின் சகோதரர் யாசின் கூறினார்.

இந்த வழக்கில் யுதிஸ்டருடன் சேர்த்து நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஏழு நபர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

Comments are closed.