கேஸ் டைரி

0

2002 குஜராத் இனப்படுகொலை: தாமதப்படுத்தப்பட்ட இராணுவம்

2002 குஜராத் இனப்படுகொலையை கட்டுப்படுத்த 3000 படை வீரர்களை கொண்ட இராணுவம் அகமதாபாத் நகருக்கு வரவழைக்கப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் ஒரு நாள் முழுவதும் வாகனத்திற்காக மோடி அரசால் காக்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் முன்னிலையில் மோடியை சந்தித்த லெப்டினண்ட் ஜெனரல் ஜமீருத்தின் ஷா, இராணுவ வீரர்கள் நகருக்குள் சென்று கலவரத்தை கட்டுப்படுத்த இராணுவத்திற்கு தேவையான முக்கிய உதவிகளை செய்துத் தருமாறு வேண்டுகோள் வைத்துள்ளார். ஆனால் மார்ச் 1 ஆம் தேதி அதிகாலை 7 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்த இராணுவம் ஒரு நாள் முழுவதும் காக்க வைக்கப்பட்டுள்ளது. இந்த காத்திருப்பு நேரத்தில் பல்லாயிரம் உயிர்கள் பலியானது.

இது குறித்து தனது “சர்க்காரி முசல்மான்” (அரசாங்க முஸ்லிம்) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் ஜமீருத்தின் ஷா.

“குஜராத் கலவரத்தின் முக்கியமான காலகட்டம் பிப்ரவரி 28 இரவு மற்றும் மார்ச் 1 ஆம் தேதி. அப்போதுதான் அதிகப்படியான கலவரம் நடைபெற்றது. 1 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் நான் முதல்வரை(மோடி) சந்தித்தேன். இராணுவ வீரர்கள் மார்ச் 1 ஆம் தேதி முழுவதும் விமான தளத்தில் காத்திருந்தனர். பின்னர் மார்ச் இரண்டாம் தேதிதான் வாகன வசதி செய்து தரப்பட்டது. ஆனால் அப்போது அனைத்தும் முடிந்திருந்தது” என்று ஷா தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். குறித்த நேரத்தில் வாகன வசதிகள் ஏற்பாடு செய்து தரப்பட்டிருக்குமாயின் கலவர பாதிப்புகள் மிக மிகக் குறைவாகவே இருந்திருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

“காவல்துறையால் ஆறு நாட்களுக்கு செய்ய முடியாததை காவல்துறையை விட ஆறு மடங்கு குறைவான எண்ணிக்கையில் இருந்த இராணுவத்தினர் 48 மணி நேரத்தில் செய்து முடித்தோம். நாங்கள் எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை மார்ச் 4ஆம் தேதி முடித்தோம். நாங்கள் கேட்ட உதவிகள் எங்களுக்கு காலவிரையம் இன்றி செய்து தரப்பட்டிருந்தால் மார்ச் 2ஆம் தேதியே அது முடிந்திருக்கும்” என்று ஷா தெரிவித்துள்ளார்.

மேலும் தான் யாரையும் குறிப்பிட்டு குறைகூறவில்லை என்று கூறிய அவர், “போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்ய சில காலம் பிடிக்கும். ஆனால் இது போன்ற நேரங்களில் அதனை விரைவாக செய்திருக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

“கலவர கும்பல்கள் தெருக்களிலும் வீடுகளுக்கும் தீ வைத்துக் கொண்டிருந்த போது காவல்துறை அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. அதனை தடுக்க எந்தவித நடவடிக்கையையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்கள் காவல் நிலையத்தில் இருந்ததை என்னால் காண முடிந்தது. அவர்களுக்கு அங்கு இருக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. நாங்கள் எப்போதெல்லாம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க சொல்கிறோமோ அப்போது சிறுபான்மையினர் பகுதிகளில் அவர்கள் அதனை செய்யவில்லை. அதனால் சிறுபான்மையினர் கலவர கும்பலால் சூழப்பட்டனர். இது முற்றிலும் குறுகிய மனப்பான்மையுடைய ஒருதலைப்பட்சமான செயல்” என்று ஷா தெரிவித்துள்ளார். முன்னாள் இராணுவ தலைமை ஜெனரல் பத்மநாபன் இந்த நூலிற்கு முன்னுரை வழங்கியுள்ளார்.

பெஹ்லு கான் கொலை வழக்கு: நீதிமன்றம் சென்ற சாட்சிகள் மீது துப்பாக்கிச்சூடு

பசு பயங்கரவாதிகளால் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் அடித்துக்கொலை செய்யப்பட்ட பெஹ்லு கான் வழக்கில் சாட்சி கூறச் சென்ற அவரது இரு மகன்கள் உள்ளிட்டோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் பெஹ்ரோர் பகுதியில் உள்ள நீதிமன்றத்திற்கு சென்ற இவர்கள் மீத தேசிய நெடுஞ்சாலையில் வைத்து செப்டம்பர் 29 அன்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணையை பெஹ்ரோரில் இருந்து ஆல்வாருக்கு மாற்றும்படி பெஹ்லு கானின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து பெஹ்லு கான் மகன்களின் வழக்கறிஞர் ஆசாத் ஹயாத் கூறுகையில், “தாக்குதல் நடத்தப்பட்ட போது சாட்சிகள் அஸ்மத், ரஃபிக், ஓட்டுனர் அம்ஜத், பெஹ்லு கானின் மகன்கள் இர்ஷத் மற்றும் ஆரிப் ஆகியோருடன் நானும் காரில் இருந்தேன். நாங்கள் எங்கள் தரப்பு சாட்சியத்தை வழங்க பெஹ்ரோர் சென்று கொண்டிருந்தோம். நாங்கள் நீம்ரானா பகுதியை கடந்து செல்கையில், வாகனப்பதிவு எண் இல்லாத கருப்பு நிற ஸ்கார்பியோ வாகனம் எங்களை முந்திச் சென்று எங்களை நிறுத்த முயன்றது” என்று தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் நடந்தவற்றை விவரித்த பெஹ்லு கானின் மகன் இர்ஷத், அந்த வாகனத்தில் இருந்தவர்கள் சைகையினால் தங்களை நிற்கும்படி கூறியதாகவும் தங்களது வாகனம் நிற்காமல் சென்ற காரணத்தால் அவர்கள் தங்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

இவர்களின் கூற்றை காவல்துறை மறுத்துள்ளது. ஆனால் இந்த வழக்கில் ஆறு நபர்களை குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்துள்ள காவல்துறை மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று பெஹ்லு கானின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கௌரி லங்கேஷ் கொலை: மற்றுமொருவர் கைது

கெளரி லங்கேஷ் கொலையில் தொடர்புடையதாக வாசுதேவ் சூர்யவன்சி என்பவரை வழக்கை விசாரித்து வரும் கர்நாடகா மாநில சிறப்பு புலனாய்வுத் துறை (எஸ்.ஐ.டி.) கைது செய்துள்ளது. முன்னதாக, தீவிரவாத செயல்களில் தொடர்புடையதாக வாசுதேவ்வை மகாராஷ்டிரா மாநில தீவிரவாத எதிர்ப்பு படையினர் செப்டம்பர் 29 அன்று கைது செய்தனர். கௌரி லங்கேஷ் வழக்கில் 17வது குற்றவாளியாக வாசுதேவ் குறிப்பிடப்பட்டுள்ளார்.

நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஷரத் கலாஸ்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து வாசுதேவ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். லங்கேஷ் வழக்கில் பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தை வாசுதேவ் வழங்கியதாக எஸ்.ஐ.டி. குற்றம் சாட்டுகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியும் இந்து ஜனஜாக்ருதி சமிதியுடன் தொடர்புடையவருமான அமோல் காலேயின் டைரியில் ‘மெக்கானிக்’ என்று குறிப்பிடப்பட்டுள்ள நபர் வாசுதேவ்தான் என்றும் இரு சக்கர வாகனத்தை திருடி அவற்றை லங்கேஷின் கொலைக்கு வழங்கியதாகவும் எஸ்.ஐ.டி. கூறுகிறது.

கௌரி லங்கேஷ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 17 நபர்களில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏவுகணை தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கியவர் கைது

இந்தியாவின் மிக முக்கியமான பிரம்மோஸ் ஏவுகணை குறித்த முக்கிய விபரங்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு வழங்கியதாக பொறியியலாளர் நிஷாந்த் அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். டி.ஆர்.டி.ஓ.வில் (ஞிமீயீமீஸீநீமீ ஸிமீsமீணீக்ஷீநீலீ ணீஸீபீ ஞிமீஸ்மீறீஷீஜீனீமீஸீt ளிக்ஷீரீணீஸீவீக்ஷ்ணீtவீஷீஸீ) பணியாற்றிய இவரை உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவின் தீவிரவாத எதிர்ப்பு படையினர் கைது செய்துள்ளனர். பெண்கள் பெயரில் சமூக வலைதளங்களில் போலியான கணக்குகளை தொடங்கி இவருடன் தொடர்பு கொண்ட பாகிஸ்தான் உளவுத்துறையினர் இவரிடமிருந்து முக்கிய தகவல்களை பெற்றதாக கூறப்படுகிறது.

சில முக்கிய தகவல்களை அகர்வால் அவரின் லேப்டாப்பில் வைத்திருந்ததாகவும் இது சட்டத்திற்கு புறம்பானது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2017&-18ஆம் ஆண்டிற்கான இளம் விஞ்ஞானிக்கான விருதை பெற்றவர் என்று இவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த ஏவுகணை குறித்த விபரங்களை பாகிஸ்தானிற்கு ரகசியமாக கொடுத்த இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணையை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.

மாணவர் நஜீப் வழக்கை முடிக்க சிபிஐ-க்கு அனுமதி

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் நஜீப் அகமது காணாமல் போன வழக்கை முடித்து அறிக்கையை (நீறீஷீsuக்ஷீமீ க்ஷீமீஜீஷீக்ஷீt) விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் அக்டோபர் 8 அன்று சி.பி.ஐ.-க்கு அனுமதி வழங்கியுள்ளது. மாணவர் நஜீப்பை கண்டுபிடிக்க முடியாததால் இந்த வழக்கை முடிக்க தங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று முன்னதாக சி.பி.ஐ. கோரிக்கை வைத்திருந்தது.

சி.பி.ஐ. அறிக்கையை சமர்ப்பித்த பிறகு, நஜீபின் தாய் தனது ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம் என்றும் நீதிபதிகள் முரளிதர் மற்றும் வினோத் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது. வேறொரு விசாரணை ஏஜென்சியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற நஜீப்பின் தாயாரின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. அகில பாரதிய வித்யார்தி பரிஷத் அமைப்பினருடன் ஏற்பட்ட ஒரு மோதலுக்கு பிறகு அக்டோபர் 2016ல் மாணவர் நஜீப் காணாமல் போனார். இந்த வழக்கில் டெல்லி காவல்துறை எவ்வித முன்னேற்றமும் காணாததை தொடர்ந்து வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்றி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது சி.பி.ஐ.யும் மாணவன் நஜீப்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கைவிரித்துள்ளது. இந்த வழக்கில் சி.பி.ஐ. முறையான விசாரணை நடத்தவில்லை என்று நஜீபின் தாயார் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் தனது மகனை ஐ.எஸ். ஆதரவாளர் என்று குறிப்பிட்டு வெளிவந்துள்ள செய்திகளை நீக்க வேண்டும் என்றும் நஜீப்பின் தாயார் பாத்திமா நபீஸ் வழக்கு பதிவு செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி ஜே.ஆர்.மிதா, நஜீப்பை ஐ.எஸ். ஆதரவாளர் என்று குறிப்பிடும் அனைத்து செய்திகளையும் வீடியோ பதிவுகளையும் நீக்க வேண்டும் என்று செய்தி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜூனைத் கான் வழக்கு: முக்கிய குற்றவாளிக்கு ஜாமீன்

ஜூனைத் கான் படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்று அறியப்படும் நரேஷ் குமாருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏனைய ஐவருக்கும் ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

ஜூன் 2017ல் மதுராவுக்கு சென்று கொண்டிருந்த ரயிலில் ஜூனைத், அவரின் சகோதரன் மற்றும் இரு உறவினர்கள் தாக்கப்பட்டனர். இதில் ஜூனைத் மரணமடைந்தார். கூர்மையான ஆயுதத்தை வைத்து ஜூனைத்தை தாக்கியதாக நரேஷ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. முன்னதாக, ஃபரீதாபாத் விசாரணை நீதிமன்றம் நரேஷின் ஜாமீன் மனுவை ஜூன் மாதம் நிராகரித்தது.

இந்த வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால் தற்போது உயர் நீதிமன்றம் நரேஷ்க்கு ஜாமீன் வழங்கியுள்ளது. ஜூனைத் கொலையை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று அவரின் குடும்பத்தினர் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளதால் விசாரணையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு இடைக்கால ஜாமீன் மட்டுமே வழங்கியுள்ளதாக நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். சி.பி.ஐ. விசாரணை கோரியுள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை மட்டுமே இந்த ஜாமீன் செல்லுபடியாகும். அந்த வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் நரேஷ் காவல்துறையிடம் சரணடைந்து மீண்டும் ஜாமீன் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் ஜூனைத் மற்றும் இந்த வழக்கின் சாட்சிகள் வசிக்கும் ஃபரீதாபாத் மாவட்டத்திற்குள் நுழைவதற்கும் நரேஷ்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏர்வாடி ஹாஜா முகைதீன் கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் டிசம்பர் 21, 2015ல் இளைஞர் ஹாஜா முகைதீன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக் கோரியும் ஊர் பொது மக்கள் மூன்று நாட்கள் கடையடைப்பு நடத்தினர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. (விபரங்களுக்கு புதிய விடியல் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2016 இதழ்கள்) போராட்டங்களின் விளைவாக ஹாஜாவின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு மூன்று இலட்சம் ரூபாய் நிவாரணத்தை வழங்கியது.

இந்த வழக்கில் ஏழு நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இவர்களில் சிலர் இந்துத்துவ சங்கபரிவார் அமைப்புகளில் பொறுப்புகளை வகித்து வந்தனர். இந்த வழக்கில் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் கதிர்வேல்சாமி மற்றும் மகேஷ் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஏனைய ஐவருக்கும் எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவர்கள் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளியான கதிர்வேல்சாமி பாரதிய ஜனதா கட்சியின் களக்காடு ஒன்றிய செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

கதிர்வேல்சாமி மற்றும் மகேஷ் ஆகிய இருவரும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 302ன் கீழ் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிபதி, ஏனைய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

Goto Index

Comments are closed.