கேஸ் டைரி

0

உத்தர பிரதேசம்: 280 நபர்கள் மீது யு.ஏ.பி.ஏ.!

உத்தர பிரதேசத்தின் பஹ்ரேச் மாவட்டத்தில் 280 நபர்கள் மீது காவல்துறை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (யு.ஏ.பி.ஏ.) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஹ்ரேச் மாவட்டத்தின் கைரா பஜார் பகுதியில் அக்டோபர் 20 அன்று நான்கைந்து கிராமங்களில் இருந்து துர்கா பூஜை ஊர்வலத்தை நடத்தியவர்கள் சிலைகளை கரைக்க சென்றுள்ளனர். அப்போது கலர் பொடிகளை பள்ளிவாசலின் உள்ளும் அங்கிருந்தவர்கள் மீதும் ஊர்வலத்தில் வந்தவர்கள் வீசியதை தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டது. ஏற்கெனவே வன்முறைக்கு திட்டமிட்டவர்கள், முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தினர். காவல்துறையின் கண்முன்னே நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் பீதியுற்ற முஸ்லிம்கள் அப்பகுதியை விட்டும் தப்பி ஓடினர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த காவல்துறையினர் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் யு.ஏ.பி.ஏ. சட்டத்தின் பிரிவு 7ன் கீழ் பெயர் குறிப்பிடப்பட்ட 80 முஸ்லிம்கள் மற்றும் அடையாளம் தெரியாத 200 நபர்கள் மீது வழக்குகளை பதிவு செய்தனர். 280 நபர்கள் மீது காவல்துறையினர் யு.ஏ.பி.ஏ. சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரு மதத்தை சேர்ந்தவர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம்கள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பு (என்.சி.ஹெச்.ஆர்.ஓ.) மற்றும் ரிஹாய் மன்ச் அமைப்பினரின் உண்மை அறியும் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

சம்பவம் நடைபெற்ற அன்று இளவயது ஆண்களும் பெண்களும் ஊரை விட்டு தப்பியோடிய நிலையில் வயோதிகர்களும் குழந்தைகளும் மட்டுமே வீடுகளில் இருந்துள்ளனர். இந்நிலையில் அக்டோபர் 20 இரவில் மூன்று முறை இந்த வீடுகளுக்கு சென்ற காவல்துறையினர் அங்குள்ளவர்களை மிரட்டி பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.


மாலேகான் வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவு

மகாராஷ்டிராவின் மாலேகானில் வழக்கில் 2008ல் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்ட இந்துத்துவ தீவிரவாதிகள் மீது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பெண் சாமியார் பிரக்யா சிங், இராணுவ கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித், முன்னாள் இராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாயா, சுதாகர் திவேதி, அஜய் ரகிர்கர், சுதாகர் சதுர்வேதி மற்றும் சமீர் குல்கர்னி மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அபினவ் பாரத் அமைப்பு தீவிரவாத அமைப்பு என்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அந்த அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்கள் என்றும் நீதிபதி வினோத் படல்கர் கூறினார். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (யு.ஏ.பி.ஏ.) மற்றும் இந்திய குற்றவியல் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

வழக்கில் தங்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்கு தடை விதிக்க கோரி பம்பாய் உயர் நீதிமன்றத்தில் புரோகித் உள்ளிட்டோர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். தடை விதிக்க அக்டோபர் 29 அன்று பம்பாய் உயர் நீதிமன்றம் மறுத்ததை தொடர்ந்து மறுதினம் இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

2008 செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி மாலேகான் நகரில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஆறு நபர்கள் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். மகாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்பு படை முதலில் பத்து பேர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. மூவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பின், இந்த வழக்கில் தற்போது ஏழு நபர்களுக்கு எதிராக என்.ஐ.ஏ. நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.


சொஹ்ராபுதீன் என்கௌண்டர்: அமித் ஷாவிற்கு எதிரான மனு தள்ளுபடி

சாஹ்ராபுதீன் ஷேக் போலி என்கௌண்டர் வழக்கில் தற்போதைய பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் அமித் ஷா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை பம்பாய் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. குஜராத்தை சேர்ந்த சொஹ்ராபுதீன் ஷேக் என்பவர் நவம்பர் 2005ல் என்கௌண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் மனைவி கௌசர் பீயும் சில தினங்கள் கழித்து கொலை செய்யப்பட்டார். இதில் முக்கிய சாட்சியான துளசிராம் பிரஜாபதி மறுவருடம் என்கௌண்டரில் கொல்லப்பட்டார். இந்த என்கௌண்டர் வழக்குகளை விசாரித்த மத்திய புலனாய்வு துறையான சி.பி.ஐ. அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் காவல்துறை தலைவர் வன்சாரா உள்ளிட்டவர்களை முக்கிய குற்றவாளிகளாக கூறியது.

மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு இந்த வழக்கின் விசாரணையில் மாற்றம் ஏற்பட்டு அமித் ஷா இந்த வழக்கில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். அவர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. மேல்முறையீடு ஏதும் செய்யாத நிலையில் பம்பாய் வழக்கறிஞர்கள் சங்கம் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சித் மோரே மற்றும் பாரதி டாங்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் முறையீடு செய்யவோ தலையிடவோ வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி இவர்கள் தாக்கல் செய்த பொதுநல வழக்கை நவம்பர் 2 அன்று தள்ளுபடி செய்தது.


கோவை – 27 ஆண்டுகால வழக்கில் 85 வயது முதியவர் சிறையில் அடைப்பு

கோவையில் இந்து முன்னணி மாநகர செயலாளராக இருந்த சிவகுமார் 1991ல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அல் உம்மா இயக்க தலைவர் பாஷா, பிலால் ஹாஜியார் உள்ளிட்ட ஒன்பது நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு, கோவை நீதிமன்றம் 2003ல் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பிலால் ஹாஜியார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பிலால் ஹாஜியார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் பிலால் ஹாஜியாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

சமீபத்தில் உச்ச நீதிமன்றமும் இவரின் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. தண்டனை உறுதி செய்யப்பட்ட பிலால் ஹாஜியாரின் வயது 85. தனது வயதை காரணமாக குறிப்பிட்டு பிலால் ஹாஜியார் வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிமன்றம் தண்டனையை ரத்து செய்ய மறுத்துவிட்டது. பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில் 85 வயது முதியவரின் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனைய சில வழக்குகளில் முதுமையின் காரணமாக கைதிகள் விடுவிக்கப்பட்டு நிலையில் பிலால் ஹாஜியாரின் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அக்டோபர் 30 அன்று பிலால் ஹாஜியார் கோவை ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். காவல்துறையினர் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


ஹரேன் பாண்டியாவை கொலை செய்ய உத்தரவிட்டது வன்சாரா!

குஜராத் மாநில முன்னாள் அமைச்சரும் மூத்த பாரதிய ஜனதா கட்சி தலைவருமான ஹரேன் பாண்டியாவை கொலை செய்வதற்கான வேலையை சொஹ்ராபுதீன் ஷேக்கிற்கு கொடுத்தவர் குஜராத் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி டி.ஜி.வன்சாரா என்று சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கௌண்டர் வழக்கின் முக்கிய சாட்சியான அஸம் கான் கூறியுள்ளார். இந்த செய்தியை தன்னிடம் சொஹ்ராபுதீன் கூறியதாகவும் அவர் கூறியுள்ளார். சொஹ்ராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி ஆகியோருக்கு நெருங்கிய சகாவான அஸம் கான், இந்த தகவலை தன்னிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரி என்.எஸ். ராஜூ என்பவரிடம் 2010ல் தான் கூறியதாகவும் ஆனால் அவர் அதனை பதிவு செய்ய மறுத்துவிட்டார் என்றும் கூறியுள்ளார். நயீம் கான் மற்றும் ஷாஹித் ராம்புரி ஆகியோருடன் இணைந்து ஹரேன் பாண்டியாவை கொலை செய்யும் கான்ட்ராக்ட் கிடைத்துள்ளதாகவும் அவரை நாங்கள் கொலை செய்தோம் என்றும் உரையாடிக் கொண்டிருக்கும் போது சொஹ்ராபுதீன் என்னிடம் கூறினான். நான் இதனால் மிகவும் கவலையுற்றேன். ஒரு நல்ல மனிதரை நீங்கள் கொலை செய்து விட்டீர்கள் என்று நான் கூறினேன். இந்த கான்ட்ராக்டை தங்களுக்கு கொடுத்தது வன்சாரா என்றும் சொஹ்ரா புதீன் கூறினான். இதன் பின் சொஹ்ராபுதீனிடமிருந்து விலக நான் முடிவு செய்தேன் என்று அஸம் கான் நீதிமன்றத்தில் கூறினார். சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கௌண்டர் வழக்கில் முதலாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட வன்சாராவை ஆகஸ்ட் 1, 2017ல் விசாரணை நீதிமன்றம் விடுவித்தது. வன்சாரா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. மேல்முறையீடு செய்யாத நிலையில் சொஹ்ராபுதீனின் சகோதரன் ருபாபுதீன் மேல்முறையீடு செய்தார். ஆனால் வன்சாரா விடுவிக்கப்பட்டதை செப்டம்பர் மாதம் பம்பாய் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

மார்ச் 26, 2003 அன்று காலையில் ஹரேன் பாண்டியா சுட்டுª கொல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் 2007ல் 12 நபர்களை குற்றவாளிகள் என்று அறிவித்து ஒன்பது நபர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் 12 நபர்களையும் குஜராத் உயர் நீதிமன்றம் நிரபராதிகள் என்று விடுவித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால் இந்த 12 நபர்களும் உண்மையான குற்றவாளிகள் அல்ல என்று ஹரேன் பாண்டியாவின் குடும்பத்தினர் முன்னரே கூறியுள்ளனர். இந்த கொலை வழக்கில் முறையான விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Comments are closed.