கேஸ் டைரி

0

சொஹ்ராபுதீன் என்கௌண்டர்:70 இலட்சம் பெற்ற அமித் ஷா!

பாலி என்கௌண்டர்களால் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் நான்கு காவல்துறை உயர் அதிகாரிகள் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பலனடைந்ததாக இந்த வழக்குகளின் முன்னாள் விசாரணை அதிகாரி அமிதாப் தாகூர், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நவம்பர் 19 அன்று தெரிவித்தார். சொஹ்ராபுதீன் மற்றும் துளசிராம் பிரஜாபதி ஆகியோரால் மிரட்டப்பட்ட பட்டேல் சகோதரர்கள் 70 இலட்சம் ரூபாயை அமித் ஷாவிற்கு மூன்று தவணைகளில் கொடுத்ததாக அவர் கூறினார். என்கௌண்டரை நடத்துவதற்கு வன்சாராவிற்கு 60 இலட்சம் கொடுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களை இந்த வழக்கில் சேர்க்க அப்போதைய சிபிஐ இயக்குநர் அஷ்வினி குமார் தன்னை நிர்ப்பந்திக்கவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். உதய்பூர் சிறையில் இருந்து தன்னிடம் பேசிய பிரஜாபதி, தனது கண் முன் சொஹ்ராபுதீன் கொலை செய்யப்பட்டதை தன்னிடம் கூறியதாக சொஹ்ராபுதீனின் சகோதரர் ருபாபுதீன் நீதிமன்றத்தில் பதிவு செய்தார். கொலை செய்யப்பட்ட கௌசர் பீ கர்ப்பமாக இருந்ததை சிபிஐ மறைத்ததாகவும் குஜராத் சிஐடி அதனை பொருட்படுத்தவில்லை என்றும் கூறினார். கௌசர் பீ கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என்றும் ருபாபுதீன் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 2010ல் சிபிஐ-யிடம் வாக்குமூலத்தை பதிவு செய்த தீவிரவாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்) அதிகாரி ரவீந்திர மக்வானா, கௌசர் பீ கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்று கூறினார். கௌசர் பீயை பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட குஜராத் ஏ.டி.எஸ். சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் சௌபே, அகமதாபாத்தில் உள்ள ஒரு பண்னை இல்லத்தில் வைத்து கௌசர் பீயை கற்பழித்து கொலை செய்தார் என்று மக்வானா வாக்குமூலம் அளித்தார்.

துளசிராம் பிரஜாபதி போலி என்கௌண்டரில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளான எம்.என்.தினேஷ், ராஜ்குமார் பாண்டியன் மற்றும் டி.ஜி. வன்சாரா ஆகியோருக்கு முக்கிய பங்குள்ளது என்று சிறப்பு நீதிமன்றத்தில் தலைமை விசாரணை அதிகாரி சந்தீப் தம்கட்கே தெரிவித்துள்ளார்.

2012 ஏப்ரல் மாதத்தில் இருந்து இவ்வழக்கை விசார்த்து வந்த அதிகாரியான சந்தீப் தம்கட்கே, இந்த வழக்கில் அரசியல் மற்றும் கிரிமினல்களின் கூட்டு சதி உள்ளது என்றும் இதில் அமித் ஷா மற்றும் ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கட்டாரியா ஆகியோர் சொஹ்ராபுதீன் ஷேக், துளசிராம் பிரஜாபதி, அஸம் கான் ஆகிய கிரிமினல்களுடன் நெருங்கி செயல்பட்டதாக கூறியுள்ளார்.

துளசிராம் பிரஜபாதி போலி என்கௌண்டர் வழக்கில் அமித் ஷா, கட்டாரியா, ஐ.பி.எஸ். அதிகாரிகள் தினேஷ், ராஜ்குமார் பாண்டியன் மற்றும் வன்சாரா ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டு பின்னர் 2014 இல் இருந்து 2017 ஆம் ஆண்டுகளுக்கு இடையேயான காலகட்டத்தில் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தொலைபேசி அழைப்பு தகவல்கள் இவர்களின் குற்றத்தை உறுதி செய்கிறது என்று சந்தீப் தம்கட்கே தெரிவித்துள்ளார்.

2006ல் நடத்தப்பட்ட துளசிராம் பிரஜாபதி என்கௌண்டரில் உதய்பூர் எஸ்.பி. எம்.என். தினேசுக்கு முக்கிய பங்கிருந்ததையும் பிரஜாபதியை சுட்டுக் கொன்ற பின் சப் இன்ஸ்பெக்டர் ஆஷிஷ் பாண்டியா தனது கையில் தானே சுட்டு என்கௌண்டரில் சுடப்பட்டது போல் நாடகமாடியதையும் அவர் குறிப்பிட்டார்.

அமித் ஷா மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆஷிஷ் பாண்டியா, என்.ஹெச்.தபி மற்றும் ஸ்ரீநிவாச ராவ் போன்ற கீழ்நிலையில் உள்ள அதிகாரிகள் மீது வழக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கை முதலில் விசாரித்த விசாரணை அதிகாரியான அமிதாப் தாகூர், அமித் ஷா, வன்சாரா, தினேஷ், பாண்டியன் மற்றும் அபய் சுதாஸமா ஆகியோர் சொஹ்ராபுதீன் என்கௌண்டர் மூலம் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பலன் அடைந்ததாக சிபிஐ நீதிபதி எஸ்.ஜே.சர்மாவிடம் தெரிவித்தார். இந்த வழக்கில் உள்ள அனைத்து சாட்சிகளின் விசாரணையும் முடிந்ததாக விசாரணை அதிகாரி சந்தீப் தம்கட்கே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மொத்தமுள்ள 210 சாட்சிகளில் 92 சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சொஹ்ராபுதீன் என்கௌண்டர், கௌசர் பீ படுகொலை மற்றும் துளசிராம் பிரஜாபதி என்கௌண்டர் ஆகிய வழக்குகள் இணைக்கப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.


பன்சாரே வழக்கு – அமோல் காலேயிடம் எஸ்.ஐ.டி. விசாரணை

கோவிந்த் பன்சாரே படுகொலை வழக்கில் அமோல் காலேயிடம் இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு துறை (எஸ்.ஐ.டி.) விசாரணை நடத்தி வருகிறது. பிப்ரவரி 2015ல் கோல்ஹாபுரில் வைத்து பன்சாரே சுடப்பட்டார். கௌரி லங்கேஷ் வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள அமோல் காலேயின் கஸ்டடியை பெங்களுர் காவல்துறையிடமிருந்து பெற்று எஸ்.ஐ.டி. விசாரித்து வருகிறது. நரேந்திர தபோல்கர் வழக்கிலும் காலே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2013ல் தபோல்கர் படுகொலை செய்யப்பட்டார்.

தபோல்கர், பன்சாரே, கல்புர்கி மற்றும் கௌரி லங்கேஷ் ஆகியோர் கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்ட முதல் குற்றவாளி அமோல் காலே என்றும் அவனிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் கைப்பற்றப்பட்ட டைரியை தொடர்ந்து ஏனைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர் என்றும் விசாரணையை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூடுதல் டிஜிபி சஞ்சீவ் சின்காலும் காலேயிடம் விசாரணை நடத்தியுள்ளார். பன்சாரே வழக்கில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை கண்காணித்து வரும் பம்பாய் உயர்நீதி மன்றம் வழக்கு விசாரணை குறித்த விபரங்களை ஊடகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டாம் என்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.


கல்புர்கி வழக்கு: – கர்நாடகத்தை கடிந்து கொண்ட உச்சநீதிமன்றம்

சிந்தனையாளர் கல்புர்கி கொலை வழக்கை விசாரித்து வரும் கர்நாடகா இதுவரை வழக்கு விசாரணையில் எதுவும் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் கடிந்து கொண்டது. கல்புர்கி, பன்சாரே மற்றும் தபோல்கர் கொலை வழக்குகளை ஒருங்கிணைத்து விசாரிக்க வேண்டும் என்று கல்புர்கியின் மனைவி உமாதேவி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ரோகின்டன் நரிமன் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கில் கர்நாடகா இதுவரை எதுவும் செய்யவில்லை என்று தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் இரு வாரங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நவம்பர் 26 அன்று உத்தரவிட்ட நீதிபதிகள், முறையான விசாரணை நடக்கவில்லையென்றால் வழக்கை பம்பாய் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தனர். மாவட்ட சி.ஐ.டி. இந்த வழக்கில் மிகப்பெரும் தேடுதல் வேட்டையை நடத்தி வருவதாக கர்நாடகா அரசு கூறிய போதும் வழக்கின் விசாரணை குறிக்கோள் இன்றி செல்கிறது என்று தனது அச்சத்தை வெளிப்படுத்தி இருந்தார் உமாதேவி.


கௌரி லங்கேஷ் வழக்கு: சனாதன் சன்ஸ்தா நடத்திய திட்டமிட்ட கொலை

இந்துத்துவ தீவிரவாத இயக்கமான சனாதன் சன்ஸ்தா, பத்திரிகையாளர் கௌரி லங்கேஷை திட்டமிட்டு படுகொலை செய்தது என்று கர்நாடகா காவல்துறை சமர்ப்பித்துள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. நவம்பர் 23 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 9235 பக்கங்களைக் கொண்ட இந்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் 18 நபர்கள் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். புனேயை சேர்ந்த இந்துத்துவ தீவிரவாதி அமோல் காலே முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளான். கௌரி லங்கேஷை சுட்டுக் கொன்றது ஸ்ரீராம் சேனா அமைப்பை சேர்ந்த பரசுராம் வாக்மாரே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 5, 2017 அன்று தனது வீட்டின் முன் வைத்து பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதர இந்துத்துவ அமைப்புகளுடன் இணைந்து சனாதன் சன்ஸ்தா இந்த கொலையை நடத்தியது என்றும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இத்தகைய கொலைகளில் ஈடுபட்டு வரும் கும்பலால் இந்த படுகொலை நடத்தப்பட்டது என்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் பாலன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். மூத்த பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன், பத்திரிகையாளர் அந்தாரா தேவ் சென், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சமன் லால் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட நபர்கள் இவர்களின் ஹிட்லிஸ்டில் இருந்ததாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மே 30 அன்று தாக்கல் செய்யப்பட்ட முதலாவது குற்றப்பத்திரிகையில் கே.டி.நவீன் குமாரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்து விரோத கருத்துகளுக்காக கௌரி லங்கேஷை கொலை செய்ததாக நவீன் முன்னதாக கூறியிருந்தான்.

நரேந்திர தபோல்கர் மற்றும் கல்புர்கி கொலை வழக்கிலும் இதே நபர்களுக்கு தொடர்புள்ளதாகவும் இவர்கள் அனைவரும் சனாதன் சன்ஸ்தா மற்றும் இந்து ஜனஜாக்ருதி சமிதி ஆகிய அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்கள் என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.


அஜ்மீர் தர்கா வழக்கு: 11 வருடங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்ட குற்றவாளி

2007ல் அஜ்மீர் தர்காவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான சுரேஷ் நாயரை 11 வருடங்களுக்கு பிறகு குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படையினர் (ஏ.டி.எஸ்.) நவம்பர் 25 அன்று குஜராத்தின் பரூச்சில் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. சுரேஷ் நாயர் குறித்து தகவல் தருபவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் சன்மானத்தை அறிவித்திருந்தது.

அக்டோபர் 11, 2007ல் நடத்தப் பட்ட இந்த குண்டுவெடிப்பிற்கு வெடிகுண்டுகளை வழங்கிய சுரேஷ் நாயர், வெடிகுண்டுகளை வைக்கும் போதும் சம்பவ இடத்தில் இருந்ததாக ஏ.டி.எஸ். தெரிவித்தது. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பல்வேறு இந்துத்துவ அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள சுரேஷ் நாயர் அஜ்மீர் தர்கா வழக்கில் தனது பெயர் விசாரணைக்கு வந்ததில் இருந்து தலைமறைவானான். தனது பெயரை உதய் குருஜி என்று மாற்றியவன் சாமியாரை போல் நடித்து வந்துள்ளான். பரூச் மாவட்டத்தில நர்மதா பரிக்கிராமா என்ற பூஜையை மேற்கொண்டிருந்த போது நாயரை கைது செய்ததாக ஏ.டி.எஸ். தெரிவித்தது. மேற்கொண்டு விசாரணைக்காக நாயரை அகமதாபாத்திற்கு கொண்டு சென்றுள்ள ஏ.டி.எஸ். விரைவில் அவனை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்பதாக கூறியுள்ளது. இந்துத்துவ தீவிரவாதிகள் தொடர்புடைய வழக்குகள் மோடி தலைமையிலான அரசு அமைந்த பிறகு நீர்த்துப் போகும் நிலையில் தலைமறைவாக உள்ள இந்துத்துவ தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளது இதுதான் முதன் முறை.

அஜ்மீர் தர்கா வழக்கில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக்குகளான பாவேஷ் பட்டேல் மற்றும் தேவேந்திர குப்தா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மற்றொரு குற்றவாளியான சுனில் ஜோஷி 2007 டிசம்பரில் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

Comments are closed.