கைதிகள் சித்திரவதை செய்வதை அங்கீகரித்த டொனால்ட் டிரம்ப்

0

அமெரிக்க ஜனாதிபதியாக ஜார்ஜ்புஷ் இருந்த நேரத்தில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதிகள் என்று சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களை பல வகையான சித்தரவதைக்கு உள்ளாக்கியது அமெரிக்க அரசு. சட்டப்பூர்வமாகவே இந்த சித்தரவதைகள் அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வந்தன.

இந்த சித்தரவதைகளுள் சில ஈராக் யுத்தத்தின் அபு கரிப் சிறைவாசிகள் மூலம் வெளியுலகத்திற்கு வந்தது. இதில் ஒரு சித்திரவதை முறையான வாட்டர் போர்டிங் முறை ஒபாமா அரசால் தடை செய்யப்பட்டது. தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்ப் அரசு இந்த வாட்டர் போர்டிங் முறையினை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர முடிவெடுத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நெருப்பை நெருப்பால் அணைக்க வேண்டும் என்றும், தங்கள் கைதிகளின் தலைய துண்டித்து கொடுமைப் படுத்தும் ஐ.ஸ். தீவிரவாதிகளை இவ்வாறு தான் கொடுமை படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த வாட்டர் போர்டிங் என்பது தண்ணீரைப் பயன்படுத்தி கைதிகளை சித்தரவதைக்கு உள்ளாக்கும் முறையாகும். விசாரணை நேரங்களில் கைதிகளிடம் இருந்து தகவல்களை பெற இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. பல நேரங்களில் இது போன்ற சித்தரவதைக்கு உள்ளாக்கப்படுபவர்கள் தெரிவிக்கும் தகவல்கள் உண்மையானதாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த போதிலும் இது வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் நடைமுறையில் இருந்து வந்தது.

இந்த சித்தரவதையில் கைதியை கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுக்க வைத்து,  அவரது தலைப்பக்கத்தை கீழே தாழ்த்தி முகத்தை துணியால் மூடி தண்ணீரை வாய் மற்றம் மூக்கில் ஊற்றுவார்கள். ஆக்சிஜன் குறைவதால் நுரையீரல் நீரில் மூழ்கிய உணர்வை ஏற்படுத்தும். இதனால் கைதிக்கு மூச்சுத்திணறல் மற்றும் தாங்கமுடியாத வலி ஏற்படும். மேலும்   மூளை மற்றும் நுரையீரல்கள் பாதிக்கப்படும்.

ஜப்பானிடம் இருந்து அமெரிக்க கற்றுக்கொண்ட இந்த சித்தரவதை முறையை வியட்நாம் போர் முதல் அமெரிக்க பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இரட்டை கோபுர தாக்குதலின் போது கைது செய்யப்பட்ட அபு ஜூபய்தா என்பவர் மீது இந்த சித்தரவதையை 83 முறையும், அப்துர்ரஹீம் அல் நஷிரி என்பவர் மீது இருமுறையும் காலித் ஷேக் முகமது என்பவர் மீது 183 முறையும் இந்த சித்தரவதை முறை செயல்படுத்தப்பட்டதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

Comments are closed.