கைது செய்யப்பட்டவர்கள் ஐ.எஸ். அமைப்பினரா?

0

உத்தர்காண்டின் ஹரித்வார் பகுதியில் ஐ.எஸ்.இயக்கத்தின் ஆதரவாளர்கள் என்று நான்கு இளைஞர்களை டில்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு ஜனவரி 19 ஆம் தேதி கைது செய்தது. இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த இளைஞர்கள் ஹரித்வாரில் நடக்க இருந்த கும்பமேளாவில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக கூறி டில்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு கைது செய்தது. ஆனால் இதனை மறுத்துள்ளனர் அவர்களின் பெற்றோர். கைது செய்யப்பட்ட எவரும் தங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு குற்றச்செயலிலும் ஈடுப்பட்டவர்கள் இல்லை என்று அவர்கள் தெரிவத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட முஹம்மத் அக்லாகின் தந்தை நசீம் அஹமத் கூறுகையில், “அக்லாக்கை ஜனவரி 18 ஆம் தேதி காவல்துறையினர் அவர் கல்லூரி செல்லும் வழியில் கைது செய்துள்ளனர். பின்னர் அவரின் அலைபேசியில் இருந்து அசீமுஸ் ஷான் மற்றும் முஹம்மத் ஒசாமாவிற்கு அழைப்பு விடுத்து தன் வீட்டிற்கு அழைக்கும்படி அக்லாக்கை வற்புறுத்தியுள்ளனர். அவர்கள் அங்கு வந்ததும் அவர்களையும் கைது செய்துள்ளனர் ” என்று தெரிவித்தார்.

மற்றோர் நண்பரான மிராஜ் வராததால் அவரின் வீட்டை உடைத்து அங்கிருந்து அவரை கைது செய்துள்ளனர். அத்தோடு அவரின் மடிக்கணினியையும் எடுத்துச் சென்றுள்ளனர் டில்லி காவல்துறையினர். இந்த நால்வரிடமிருந்தும் நான்கு அலைபேசிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் “நள்ளிரவு 2 மணியளவில் காவல்துறை எங்களை அழைத்து எங்கள் மகன்களை கைது செய்துள்ளதாகவும் லோடி ரோட்டில் உள்ள காவல்துறை சிறப்பு பிரிவு கட்டிடத்தில் அவர்களை அடைத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்” என்று நசீம் அஹமது கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களை காவலதுறையினர் அடித்து சித்திரவதை செய்ததாகவும் அவர்கள் அச்சத்தில் இருப்பதாகவும் அவர்களின் பெற்றோர் தெரிவித்தனர்.

அக்லாக்கின் ஃபேஸ்புக் மற்றும் அலைபேசி தீவிரவாதிகளுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் மற்ற மூன்று பேரின் பெயர்களும் அவர்களின் தகவல் பரிமாற்றத்தில் இருந்து கிடைத்துள்ளது என்றும் இவர்கள் அனைவரும் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் இவர்களின் நடவடிக்கை சந்தேகத்திற்குரியது என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர். இவர்கள் அனைவரின் மீதும் UAPA சட்டப் பிரிவு 120B, 18, மற்றும் பிரிவு 20 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு 15 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர் கூறுகையில் “ஜனவரி 22 ஆம் தேதி லந்தவ்ரா பகுதியில் உள்ள மிராஜின் வீட்டிற்கு மிராஜுடன் சென்று அவர் வீட்டை முற்றிலுமாக சோதனையிட்டுள்ளனர். வீட்டில் சந்தேகிக்கும்படியாக ஒன்றும் கிடைக்காததால் மிராஜின் சகோதரர் சர்ப்ராஸின் பையில் இருந்த 41000 ரூபாயை வலுகட்டாயமாக அனைவரின் முன்பே பிடுங்கி மிராஜின் வீட்டில் உள்ள ஒரு கபோர்டில் வைத்து அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக கூறி கையெழுத்து வாங்க முற்பட்டுள்ளனர். அதில் கையெழுத்திட சர்ப்ராஸ் மறுக்கவே அவரை துன்புறுத்தி அவர் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டியுள்ளனர். அப்படியும் கையெழுத்திட மறுத்துவிட்டார் சர்ப்ராஸ். இதே போல மற்றொரு சம்பவத்தில் பெங்களூருவிலும் புஷ்ரா தபசும் என்கிற பெண்ணையும் மிரட்டி வெற்று காகிதத்தில் கையெழுத்து போட நிர்ப்பந்தித்துள்ளனர். (பார்க்க செய்தி)

அதன் பின்னர் அசீமுஸ் ஷான் வீட்டிற்கு சென்ற காவல்துறை அவரது வீட்டிலும் சோதனை நடத்தியது. அங்கும் ஒன்றும் கிடைக்காமல் அவரது அலைபேசியுடைய பெட்டி ஒன்றை எடுத்துச்சென்றனர்.

தாங்கள் முஸ்லிம்கள் என்பதால்தான் தங்கள் மகன்களை காவல்துறையினர் குறிவைப்பதாகவும் காவல்துறை நியாயமான விசாரணை நடத்தும் என்பதில் தங்களுக்கு துளியும் நம்பிக்கை இல்லை என்றும் இந்த இளைஞர்களின் பெற்றோர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு சட்ட உதவிகளை அளிக்கப்போவதாக ஜம்மியத்துல் உலமா அமைப்பு தெரிவித்துள்ளது. ஜம்மியத்துல் உலமா ஹிந்த் அமைப்பின் தலைவர் மௌலானா செய்யத் அர்ஷத் மதானி பா.ஜ.க அரசின் முஸ்லிம்கள் மீதான இந்த கைது நடவடிக்கையை வன்மையாக கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் “வெறும் இணையதளத்தில் சாட் செய்தார்கள் என்று கூறி தீவிரவாத வழக்கில் கைது செய்திருப்பது இவர்களின் எண்ணத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அதேவேளையில் இஸ்லாமியர்களின் உயிரிலும் மேலான இறைதூதரை பற்றி அவதூறு பேசிவிட்டு இந்துத்துவவாதிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் “தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என்கிற பெயரில் தற்பொழுது நடந்துவரும் இஸ்லாமிய கல்விக்கூடங்கள் மீது அரசு தொடுக்கும் தாக்குதல்களும் முஸ்லிம் இளைஞர்கள் மீதான கைது நடவடிக்கைள் இரண்டு நோக்கத்துடன் நடத்தப்படுகின்றது. ஒன்று முஸ்லிம் இளைஞர்கள் மனதில் பயத்தை விதைப்பது. மற்றொன்று முஸ்லிம்களை கல்வியை விட்டு விரட்டியடிப்பது. 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த கைதுகள் மோடி அரசின் கொள்கையை தெளிவுபடுத்துகிறது” என்றும் கூறியுள்ளார்.

காவல்துறையின் இரட்டை நிலையை பற்றி குறிப்பிட்ட அவர், “ஒரு முஸ்லிமின் வீட்டில் ஒரு தீக்குச்சி பற்ற வைத்தால் அதனை வெடிமருந்து என்று கூச்சல் போடும் இந்த அரசு இந்துத்துவவாதிகளின் வீட்டில் வெடிகுண்டு செய்யும்போது தவறுதலாக வெடித்தால் அது பட்டாசு விபத்து என்று கூறுகிறார்கள். அரசின் இந்த இரட்டை நிலை நாட்டின் ஒற்றுமையை குலைக்கும் செயல்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி

Comments are closed.