கொலை கடத்தல் குற்றச் சம்பவங்களால் நிரம்பியிருக்கும் அதித்யநாத்தின் 60 நாள் ஆட்சி

0

உத்திர பிரதேச மாநிலத்தில் பாஜகவின் யோகி அதித்யநாத் தலைமையிலான ஆட்சி அமைந்தது 60 நாள்ஆகியுள்ள நிலையில் இந்த கால கட்டத்தில் 803 பாலியல் குற்றங்களும் 729 கொலைகளும் 799 திருட்டு சம்பவங்களும் 2682 ஆட்கடத்தல் சம்பவங்களும் நடைபெற்றுள்ளதாக ஆளும் பாஜக அமைச்சர் உத்திர பிரதேச சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அதித்யநாத் உத்திர பிரதேச முதல்வராக பொறுப்பேற்றதும் பல்வேறு புரட்சிகர திட்டங்களை அறிவித்தது போலவும் உத்திர பிரதேசம் முன்மாதிரி மாநிலமாக ஆனது போலவும் பத்திரிகைகளிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரப்பப்பட்டது. இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ சைலேந்திர யாதவ் கடந்த மார்ச் 19 ஆம் தேதி முதல் (யோகி அதித்யநாத் பதவி ஏற்ற நாள்) மே மாதம் 9 ஆம் நாள் வரை உத்திர பிரதேச மாநிலம் முழுவதும் நடைபெற்ற கொலை கொள்ளை, பாலியல் கொடுமை முதலிய குற்றங்களின் பட்டியலும் அதன் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்தும் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதிலாக பாஜக அமைச்சரிடம் இருந்து இந்த புள்ளிவிபரங்கள் வெளியாகியிருப்பது யோகி ஆட்சியின் கீழ் உத்திர பிரதேசத்தின் உண்மை நிலை என்னவென்று உணர்த்தியுள்ளது.

அதித்யநாத் ஆட்சியில் காவல்துறையினர் மீதே தாக்குதல் நடைபெற்றதும் காவல்துறையினரை அதிகாரிகள் மிரட்டுவதும் தங்கள் பணிகளை சரிவர செய்த காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டது குறித்தும் செய்திகள் வெளியாகின. மேலும் அதித்யாநாத் புதிதாக பதவி வழங்கிய அதிகாரிகளில் பெரும்பான்மையினர் பிராமணர்கள் என்றும் செய்திகள் வெளியாகின. இவர் ஒரே நாளில் 84 IAS அதிகாரிகளையும் 54 IPS அதிகாரிகளையும் இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டதும் செய்திகளில் வெளியானது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து குற்றங்களை குறைத்ததை விட அதித்யநாத் அரசில் குற்றச்சம்பவங்கள் அதிகம் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது. சட்டசபையில் இந்த குற்றச்சம்பவங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பிய எம்.எல்.ஏ. சைலேந்திர பாபு கடந்த ஆண்டு குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில் நடைபெற்ற குற்றச்சம்பவங்களின் விபரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு தங்களிடம் அது தொடர்பாக தகவல் எதுவும் இல்லை என்று பாஜக அமைச்சர் பதிலளித்துள்ளார்.

Comments are closed.