சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை

1

சென்னை பேஸின் பிரிட்ஜ் காவல்நிலையத்தில் 1991ல் நடைபெற்ற கஸ்டடி வழக்கில் 26 வருடங்கள் கழித்து விசாரணை நீதிமன்றம் இரண்டு காவலர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. பிரகாசம் என்ற நபரை டிசம்பர் 17, 1991 அன்று இரவு 9.45 மணியளவில் திருட்டு வழக்கொன்றில் விசாரிப்பதற்காக சப் இன்ஸ்பெக்டர் சுப்பையா, கான்ஸ்டபிள்கள் திருஞானசம்பந்தம் மற்றும் வரதராஜ் ஆகியோர் அவரின் குழந்தையுடன் பேஸின் பிரிட்ஜ் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்பகுதி பஞ்சாயத்து தலைவரின் தலையீட்டினால் தனது குழந்தையை மட்டுமே பிரகாசத்தின் மனைவி அமுதாவால் காவல்துறையினரிடமிருந்து மீட்க முடிந்தது.
அழைத்து செல்லப்பட்டு மூன்று நாட்கள் கழித்து பிரகாசம் இறந்துவிட்டதாக அவர் மனைவியிடம் தெரிவித்தனர். காவல்துறையினரிடமிருந்து தப்பி ஓட முயன்ற பிரகாசம் பேசின் பாலத்தில் இருந்து கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு இறந்ததாக சுப்பையா தனது உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். வருவாய்துறை அதிகாரியின் விசாரணையில் பிரகாசம் காவல்துறையினரின் சித்திரவதையால் மரணித்ததாக அறியப்பட்டது. 2009ல்தான் இந்த வழக்கு விசாரணைக்காக செசன்ஸ் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி சாந்தி, காவலர்கள் சுப்பையா (வயது 72) மற்றும் வரதராஜ் (வயது 58) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மரண தண்டனை வழங்குவதற்கு உற்ற வழக்காக இது இருந்தாலும் இருவரின் வயதை கருத்தில் கொண்டு ஆயுள் தண்டனை வழங்குவதாக அவர் தீர்ப்பில் கூறியிருந்தார். இருவருக்கும் 1.5 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பிரகாசத்தின் குடும்பத்திற்கு ஐந்து இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநில அரசாங்கத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். பாலத்திற்கு இருந்த விழுந்த நபரின் உடம்பில் எப்படி 67 காயங்கள் ஏற்பட்டது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவரான திருஞானசம்பந்தம் விசாரணை காலத்திலேயே இறந்து விட்டார்.

Discussion1 Comment

  1. காலம் கடந்த தீர்ப்பு நீதி மறுப்பிற்கு சமம் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.