கொல்கத்தாவில் மாங்காய் திருடியதற்காக 18 வயது சிறுவன் அடித்துக் கொலை

0

இந்திய மக்களிடையே வளர்ந்து வரும் சகிப்பின்மையின் மற்றொரு சாட்சியாக கொல்கத்தாவில் சிறுவன் ஒருவனை மாங்காய் திருடினான் என்று கூறி அடித்துக் கொன்றுள்ளனர்.

கொல்கத்தாவின் தாகுர்பூர் மாவட்டத்தில் கடந்த வியாழன் அன்று 18 வயது நிரம்பிய அனிருத்தா பிஸ்வாஸ் என்கிற மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட சிறுவன் அப்பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் தன் நண்பனுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க இருவர் இவர்கள் அங்கிருந்த மா மரத்தில் கல் எறிந்ததாகவும் அதனால் வீட்டின் ஜன்னல் உடைந்ததாகவும் குற்றம் சாட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். இவர்களுடன் வேறு சிலரும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்குப் பிறகு அந்த சிறுவன் தன் வயிற்றில் வலி ஏற்பட்டதாக கூறியுள்ளான். அவனது சிறுநீரில் ரத்தம் வெளியேறியுள்ளது. நான்கு நாட்கள் கழித்து கடந்த செவ்வாய் கிழமை (ஜூன் 7 ) அவனுக்கு ஏற்பட்ட காயங்களினால் அவன் உயிரிழந்துள்ளான்.

தங்களின் ஒரே மகனை இழந்த வேதனையில் உள்ளனர் பிஸ்வாஸ்ஸின் பெற்றோர். தன் மகன் 102 டிகிரி காய்ச்சல் உடையவனாக இருக்கும் போது எவ்வாறு அவன் மாங்காய் திருட சக்தியுள்ளவானாக இருந்திருக்க முடியும் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிஸ்வாசுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவன் உட்புற ரத்தக்கசிவினால் உயிரிழந்துள்ளான் என்று கூறியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் இருவரை கைது செய்துள்ளனர்.இவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்ந்து பிஸ்வாஸ்சை தாக்கிய மற்றவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.

தாத்ரியில் அக்லாக் அடித்துக் கொல்லப்பட்டதை குற்றமென்றே கருதாத மக்களும் அதில் அரசியல் ஆதாயம் தேடிய அரசியல்வாதிகளும்தான் இத்தகைய சம்பவங்களுக்கு காரணகர்த்தாக்களாக இருக்கின்றனர்.

Comments are closed.