கோத்ரா வழக்கு: மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு

0

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 11 நபர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து குஜராத் உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே சமயம் விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கிய 20 நபர்களின் தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட 63 நபர்களின் விடுதலையையும் உறுதி செய்தது. இரு தரப்பு வாதங்கள் முடிந்து ஏறத்தாழ இரண்டு வருடங்கள் முடிவடைந்த பிறகு நீதிபதிகள் ஏ.எஸ். தவே மற்றும் ஜி.ஆர்.உத்வானி ஆகியோர் இத்தீர்ப்பை வழங்கினர். வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுக்கள் மற்றும் தண்டனையை அதிகப்படுத்தக் கோரி அரசு தரப்பு தாக்கல் செய்த மனுக்கள் ஆகியவற்றை விசாரித்த நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
தீர்ப்பை வழங்குவதற்கு இரண்டாண்டுகள் தாமதமானதற்கு வருத்தம் தெரிவித்த நீதிபதிகள், குஜராத் அரசாங்கம் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் தனது கடமையை நிறைவேற்ற தவறியது என்றும் குற்றம் சாட்டினர். இச்சம்பவத்தில் இறந்த 59 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாயை அரசாங்கம் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிப்ரவரி 27, 2002 அன்று குஜராத்தின் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-6 பெட்டி எரிக்கப்பட்டதில் 59 நபர்கள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற இனப்படுகொலையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யபப்பட்டனர். ரயிலின் பெட்டிகளை வெளியில் இருந்து பெட்ரோல் ஊற்றி எரித்திருக்க வாய்ப்பில்லை என்று ஆய்வுகள் தெரிவித்தன. இருந்தபோதும் கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற வன்முறைகள் குறித்து அறிக்கை வெளியிட்ட நானாவதி கமிஷன் அறிக்கை, சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் வெளியில் இருந்து எரிக்கப்பட்டதாக தெரிவித்தது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு மார்ச் 1, 2011 அன்று தனது தீர்ப்பை வழங்கியது. இதில் 31 நபர்களை குற்றவாளிகள் என்று அறிவித்த நீதிமன்றம், 63 நபர்களை வழக்கில் இருந்து விடுவித்தது. குற்றவாளிகளில் 11 நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, 20 நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி என்று குஜராத் காவல்துறை கூறிவந்த மௌலானா உமர்ஜி நிரபராதி என்று விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. உமர்ஜி 2013ல் மரணம் அடைந்தார்.

Comments are closed.