கோரக்பூர் கதாநாயகன் மருத்துவர் கஃபில் கான் மீதான வழக்குகள் ஆதாரமில்லாததால் கைவிடப்பட்டது.

0

உத்திர பிரதேச மாநிலம் கோரக்பூரில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பல குழந்தைகள் உயிரிழந்தனர். அப்போது மேலும் உயிரிழப்பை தவிர்க்க தனது சொந்த முயற்ச்சியில் சொந்தப்பணத்தில் குழந்தைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கி வந்தார் மருத்துவர் கஃபில் கான். இவரது இந்த செயலால் மேலும் பல குழந்தைகள் மரணமடைவது தடுக்கப்பட்டது.

ஆனால் உத்திர பிரதேச அரசோ மருத்துவர் கஃபில் கானின் இந்த செயலை அங்கீகரித்து பாராட்டு தெரிவிக்காமல் அவர் மீது பழி சுமத்தி அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது. தற்போது DNA இதழில் வெளியான செய்தி ஒன்றின் அடிப்படையில் மருத்துவர் கஃபில் கான் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்று விசாரணை அதிகாரி அபிஷேக் சிங் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர் மீது ஊழல் புகார், தனியாக மருத்துவமனை வைத்து நடத்தி வருவது மற்றும் IT சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கோரக்பூர் மூத்த காவல்துறை கண்காணிப்பார் அனிருதா பங்கஜ் கூறுகையில், ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டங்களில் கீழ் டாக்டர் கஃபில் கான் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால் இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் 409, 308 மற்றும் 120-B ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

BMC மருத்துவமனை முதல்வர் டாக்டர் ராஜீவ் மிஸ்ரா மற்றும் டாக்டர் கஃபில் கான் மீது சதித்திட்டம் தீட்டுதல் மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி காவல்துறையின் சிறப்பு படை மருத்துவர் மிஸ்ரா மற்றும் அவரது மனைவியை கைது செய்தது. அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு செப்டெம்பர் 1 ஆம் தேதி அவர்கள் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரி அபிஷேக் சிங் கூறுகையில், “டாக்டர் கானிற்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதனால் அவர் மீதான வழக்குகள் கைவிடப்பட்டுள்ளன.” என்று கூறியுள்ளார். மருத்துவர் மிஸ்ராவிற்கு எதிராக 93 சாட்சியங்களின் வாக்குமூலங்களும் ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் மருத்துவர் கஃபில் கானிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் அவருக்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கஃபில் கானின் உறவினர் ஒருவர் கூறுகையில், “இந்த வழக்கில் டாக்டர் கஃபில் கான் பலிகிடாவாக்கப் பட்டுள்ளார். அவர் தனியாக மருத்துவமனை வைத்து நடத்துகிறார் என்ற போலியான ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவே அவர் ஒரு அப்பாவி என்று தெரிவிக்கிறது. ஊடகங்கள் அவரை ஒரு இரட்சகானாக சித்தரித்ததால் முதல்வர் எரிச்சலடைந்தார், இதனாலேயே அவர் வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டார்.” என்று கூறியுள்ளார்.

தற்போது அரசு கட்டண பாக்கி வைத்திருப்பதால் ஆக்சிஜன் விநியோகத்தை நிறுத்திய புஷ்பா ஆக்சிஜன் விநியோக நிறுவனம் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஆக்சிஜன் தயாரிப்பாளர் இல்லை என்றும் இவர்கள் வெறும் விநியோகிஸ்தர்கள் தான் என்றும் தயாரிப்பாளர்களை விட்டு விட்டு விநோகிச்தர்களிடம் அதிக விலைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் முறைகேடு உள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அப்படி எதுவுமே இல்லை என்றும் இந்த ஒப்பந்தத்திற்காக முறையாக மும்முறை டெண்டர் விடப்பட்டது என்றும் இந்நிறுவனத்தை தவிர வேறு எவரும் இந்த ஒப்பந்தத்திற்கு தங்களது வரைவை அனுப்பவில்லை என்பதனால் இந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது என்று இந்த மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் மருத்துவர் K.P.குஷ்வாலா தெரிவித்துள்ளார். மேலும் இந்த டெண்டர் நடைமுறை இரு முறை தணிக்கை செய்யப்பட்டு அதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கூறப்பட்டது என்றும் அவர் தெரிவித்டுள்ளார்.

Comments are closed.