கோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு

0

கோரக்பூர் மருத்துவர் கஃபீல் கானின் சகோதர் மீது துப்பாக்கிச்சூடு

கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்துகொண்டிருந்த குழந்தைகளை தனது சொந்த முயற்சியில் காப்பாற்றிய மருத்துவர் கஃபீல் கானை உத்திர பிரதேச யோகி அரசு சிறையைல் அடைத்து கொடுமை செய்தது. தற்போது அவர் பிணையில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் மருத்துவர் கஃபீல் கானின் சகோதரர் மீது இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாகக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து மருத்துவர் கஃபீல் கான் கருத்து தெரிவிக்கையில், “இந்த சம்பவம் உத்திர பிரதேச முதல்வர் தங்கியிருக்கும் கோரக்நாத் கோவிலுக்கு 500 மீட்டர் தொலைவில் நிகழ்ந்ததை அறிந்து நான் மிகவும் அதிர்ச்சியுற்றுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார். மேலும் தனது சகோதரரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டி தான் கோரியது அங்குள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரை தனக்கு தெரியும் என்பதால் தான் என்றும் ஆனால் காவல்துறையினர் என் சகோதரரை முதலில் சர்தார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் பின்னர் BRD மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் வற்புறுத்தினார்கள் என்று கூறியுள்ளார். ஆனால் BRD மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அவரை மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டனர். நேற்றைய இரவு மிகவும் முக்கியமான நேரங்கள் வீனடிக்கப்பட்டுவிட்டன என்று அவர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் கழுத்தில் குண்டு பாய்ந்த மருத்துவர் கபீல்கானின் சகோதரர் காசிஃப் ஜமீலின் உடலில் இருந்து தோட்டா அகற்றப்பட்ட நிலையில் அவர் மீண்டும் BRD மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவர் 48 மணிநேர தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையின் கூற்றுப்படி இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணங்கள் எதுவும் இருப்பதாக இதுவரை கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த மருத்துவர் கபீல் கான், “எனது சகோதரர் சுடப்பட்டுள்ளார். அவர்கள் எங்களை கொலை செய்ய முயற்சிப்பார்கள் என்று எனக்கு எப்போதோ தெரியும்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த கொலை முயற்சிக்கு பல நடுநிலையார்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்த போதிலும் இணையத்தில் தீவிர இந்துத்வா ஆதரவாளர்கள் இந்த சம்பவத்தை கொண்டாடி மகிழ்வது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.