கோவிந்த் பன்சாரே கொலை வழக்கு:முக்கிய குற்றவாளி விரேந்திர தாவ்டே பிணையில் விடுதலை

0

பிரபல பகுத்தறிவாளர்கள் கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் ஆகியோரின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஹிந்து ஜனாக்ருதி சமிதி அமைப்பின் தலைவர் விரேந்திர தாவ்டே விற்கு பிணை வழங்கி மகாராஷ்டிரா கோல்ஹாபூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013  ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி நடைபெற்ற தபோல்கர் கொலை வழக்கு தொடர்பாக 2016 ஜூன் மாதம் இவர் கைது செய்யப்பட்டார். 2009 ஆம் ஆண்டு கோவா குண்டு வெடிப்பிற்கு காரணமான சனாதன் சன்ஸ்தா அமைப்பின் ஒரு கிளை தான் தாவ்டேவின் ஹிந்து ஜனாக்ருதி சமிதி ஆகும். இந்த அமைப்பு 2007  ஆம் ஆண்டு நடைபெற்ற வாஷி, தானே மற்றும் பான்வெல் குண்டு வெடிப்புகலிளும் தொடர்புடையது.

2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி காலை நடைபயிற்சி மேற்கொண்ட கோவிந்த் பன்சாரே மற்றும் அவரது மனைவி உமா மீது இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் காயமடைந்த பன்சாரே நான்கு நாட்களுக்கு பிறகு துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட காயத்தினால் உயிரிழந்தார். அவரது மனைவி உமா உயிர்பிழைத்த போதிலும் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டார்.

இந்த கொலைகள் கடந்த 2015 ஆம் ஆண்டு சனாதன் சன்ஸ்தா அமைப்புடன் தொடர்புடையது என்று கண்டறிந்த காவல்துறை இந்த வழக்கு தொடர்பாக சமீர் கைக்வாட் என்பவரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மற்றொரு நபரான ருத்ரா படில் என்பவரையும் காவல்துறை தேடி வந்தனர். இவர் 2009 கோவை குண்டு வெடிப்பு வழக்கிலும் தொடர்புடையவர்.

பின்னர் இந்த கொலையை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு, விரேந்திர தாவ்டே, சாரங் அகோல்கர் மற்றும் வினை பவார் ஆகியோரை தபோல்கர் மற்றும் பன்சாரே கொலை வழக்குகளில் முக்கிய குற்றவாளிகளாக அறிவித்தது. இதிலும் தாவ்டே சதித்திட்டம் தீட்டியவர் என்றும் அகோல்கர் மற்றும் பவார் இந்த குற்றச்செயல்களை செய்தவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்தது. முன்னதாக கைது செய்யப்பட்ட கைக்வாத் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது விரேந்திர தாவ்டேவிற்கும் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

Comments are closed.