கோவையில் 6 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை! PFI கண்டனம்

0

கோவையில் 6 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை! குற்றவாளிகளை உடனே கைது செய்து கடும் நடவடிக்கை எடு! குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து : தமிழக அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்!

கோவை துடியலூர் பகுதியில் ஒன்றாம் வகுப்பு படித்துவரும் 6 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இக்கொடுஞ் செயலை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கணடிப்பதோடு குழந்தையை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு தனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.

கோவை பெரியநாயக்கன் பாளையம், துடியலூர் பகுதியில் கடந்த 25ம் தேதி மாலையில் சிறுமியை காணவில்லை என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இரவு முழுதும் தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. மறுநாள் காலையில் வீட்டின் அருகிலுள்ள சிறிய சந்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது.

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்களின் அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் இரக்கமற்ற மிருகங்களால் மீண்டும் ஓர் பாலியல் படுகொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

மேலும், இதே கோவையில் சில ஆண்டுகளுக்கு முன், வீட்டின் கார் ஓட்டுநரே குழந்தை அஸ்வினியை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற சம்பவம் நிகழ்ந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், சென்னை போரூரில் ஹாசினி என்ற 7 வயதுச் சிறுமியை தஷ்வந்த் என்ற இளைஞன் பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்தான். காஷ்மீரில் 8 வயது ஆசிபாவை காவி பயங்கரவாதிகள் கும்பலாக ஒரு கோவிலுக்குள்ளேயே வைத்து வல்லுறவில் ஈடுபடுத்திக் கொன்றனர். இப்படிக் குழந்தைகள் மீதான வன்கொடுமைச் சம்பவங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே செல்வதற்கும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதற்கும் காரணம் கையாலாகாத ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளே ஆகும்.

பெருகிவரும் போதை பழக்கவழக்கங்கள் இதுபோன்ற உளவியல் பாதிப்புக்குள்ளான மிருகங்களை உருவாக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது. எனவே தடை செய்யப்பட்ட போதை பொருட்களின் உபயோகத்தை உடனடியாக தடுத்து நிறுத்த போதுமான நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து நடைபெற்று வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் அத்துமீறல்கள் தமிழ்நாட்டு மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் சுதந்திரமாக வீட்டை விட்டு வெளியே வருவதற்கு கூட தயங்கி நிற்கும் சூழல் உருவாகியுள்ளது. தமிழக அரசு இது விஷயத்தில் முழு கவனம் செலுத்தி மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.

மேலும், இந்த படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனே கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றது.

இப்படிக்கு

அ. முஹைதீன் அப்துல் காதர்,
மாநில செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தமழ்நாடு.

Comments are closed.