கோவை சிறைவாசி ரிஸ்வான் மரணம்!சிறைத்துறை மற்றும் தமிழக அரசின் பொறுப்பற்ற செயல்பாடே மரணத்திற்கு காரணம் – பாப்புலர் ஃப்ரண்ட் குற்றச்சாட்டு

0

கோவை சிறைச்சாலையில் ஆயுள்தண்டனை கைதியாக இருந்த ரிஸ்வான் அவர்கள் நேற்று இரவு (10.03.2018) சிறையினுள் இருக்கும் போதே அகால மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளித்துள்ளது. 43 வயதான ரிஸ்வான் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்தார்.வலிப்பு நோய் உட்பட பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டிருந்தும் அரசின் முறையான சிகிச்சை கிடைக்கப்படாமலேயே தனது வாழ்நாளை கழித்துள்ளார்.நேற்றைய தினம் இரவு அவருடைய உடல்நிலை மோசம் அடைந்துள்ளது. சிறைத்துறை அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காத காரணத்தினால் தூக்கத்திலேயே அவருடைய உயிர் பிரிந்துள்ளது.முஸ்லிம் சிறைக்கைதிகள் விசயத்தில் சிறைத்துறை மற்றும் தமிழக அரசின் தொடர் அலட்சியத்தின் காரணமாக இதுவரை நான்கு முஸ்லிம் சிறைக்கைதிகள் சிறையிலேயே இறந்துள்ளனர்.

திண்டுக்கல்லில் நடந்த MGR நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறையில் உள்ள ஆயுள் சிறை வாசிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு செய்தார். பிப்ரவரி 24 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் இதுவரை விடுவிக்கப்படாதது ஆயுள் சிறைக்கைதிகளிடம் பெருத்த ஏமாற்றத்தையும்,மிகுந்த மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த மன உளைச்சலும் வேதனையும் ரிஸ்வான் உயிரிழப்பதற்கு மற்றொரு காரணம் ஆகும்.இதே போன்ற நிலையில் நூற்றுக்கணக்கான சிறைக்கைதிகள் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்கப்பெறாமலும்,அரசின் விடுதலை அறிவிப்பின் மூலமும் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர் என்பதை எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே தமிழக அரசு மத்திய அரசின் அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் இனியும் காலம் தாழ்த்தாது 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த அனைத்து ஆயுள் சிறை வாசிகளையும் உடனே விடுதலை செய்ய வேண்டும், உயிரிழந்த ரிஸ்வான் குடுபத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,மரணத்தின் கூடமாக உள்ள தமிழக சிறைச்சாலைகளை சீரமைக்க வேண்டும்,நோயினால் பாதிக்கப்பட்டுள்ள கைதிகள் விசயத்தில் அலட்சியம் காட்டாமல் உரிய தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றோம்.சகோதரர் ரிஸ்வான் அவர்களை இழந்து வாடும் அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்படிக்கு

 

ஆ.ஹாலித் முகமது,

மாநில பொதுச்செயலாளர்,

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,

தமிழ்நாடு.

Comments are closed.