சகிப்புத்தன்மைக்காக ஒரு உலக மாநாடு

0

சகிப்புத்தன்மைக்காக ஒரு உலக மாநாடு

2016ல் ஐ.நா. அவையின் ‘யுனெஸ்கோ” நிறுவனம் ஒவ்வொரு ஆண்டின் நவம்பர் 16ம் நாளை ‘உலக சகிப்புத்தன்மை நாளாக’ (International Day of Tolerance) கொண்டாடுவதென அறிவித்தது. மூன்றாண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு அமீரகத்தில் துபாய் நகரில் இந்தச் சகிப்புத்தன்மைக்கான நாளை மிகப் பெரிய அளவில் உலக அளவிலான இருநாள் கருத்தரங்காக நடத்துவது என முடிவு செய்து துபாய் அரசு அறிவித்திருந்தது. உலக அளவில் சுமார் 1000 பிரதிநிதிகளை அழைத்து மிகச் சிறப்பாக அதைக் கொண்டாடுவதெனத் திட்டமிட்டு அதற்கான குழுவும் அமைக்கப்பட்டது.

அக்குழுவினர் உலக அளவில் தேர்வு செய்து மனித உரிமை மற்றும் சகிப்புத்தன்மைக்காக இயங்கும் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தனர். இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாகப் பெரிய அளவில் வளர்ந்து வரும் இன மத வெறுப்பு மற்றும் சகிப்பின்மைக்கு எதிராகக் களச் செயல்பாடுகளைச் செய்துவரும் அமைப்பான ‘தேசிய மனித உரிமை அமைப்புகளுக்கான கூட்டமைப்பின் (NCHRO)’ தலைவர் என்கிற முறையில் எனக்கும் அழைப்பு அனுப்பி இருந்தனர்.

கடும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் தொண்டு நிறுவன உதவிகள் ஏதுமின்றி இந்திய அளவில் செயல்பட்டு வருகிற NCHRO சார்பாக, ‘போக்குவரத்து மற்றும் தங்கும் வசதி முதலியவற்றிற்கு மாநாடு பொறுப்பேற்றுக் கொண்டால் கலந்து கொள்கிறோம்’ என NCHRO சார்பாகப் பதில் அளிக்கப்பட்டது. மாநாட்டுக் குழுவினர் அதற்கு ஒப்புதல் அளித்து NCHRO வுக்கு அழைப்பு விடுத்தனர். சென்ற நவம்பர் 15, 16 தேதிகளில் துபாய் நகரில் உள்ள உலகின் அதி உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் உள்ள அர்மானி ஒட்டலில் நடைபெற்ற அந்த இரு நாள் கருத்தரங்கில் இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து அழைக்கப்பட்ட ஒரு பார்வையாளனாக நான் கலந்து கொண்டேன்.

சுமார் 600க்கும் மேற்பட்ட அழைப்பாளர்கள் அதில் கலந்து கொண்டனர். ஆறு அமர்வுகளில் 30 க்கும் மேற்பட்ட உலக அளவிலான அறிஞர்கள், களச் செயல்பாட்டாளர்கள், ஐ.நா. முதலான அமைப்புகளின் பொறுப்பாளர்கள், அறிவு ஜீவிகள், தூதுவர்கள் எனப் பலர் தங்களின் கருத்துக்களை அங்கு முன்வைத்தனர். ஒவ்வொரு அமர்வுக்கும் ஒவ்வொரு தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. தகுதி மிக்க ஒருவர் வழிநடத்துனராக (Moderator) இருந்து ஒவ்வொருவர் உரைக்கும் முன்பு அந்த அமர்வுத் தலைப்பில் சில கேள்விகளை முன்வைப்பார். அவர்கள் அந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முகமாகத் தம் உரைகளை நிகழ்த்துவர். பார்வையாளர்களுக்கு கேள்விகள் கேட்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இரண்டாவது நாள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் இரு கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.

முதல்நாள் அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமருமான துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் அல் ரஷீத் அல் மக்தூம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இனம், மதம், மொழி ஆகியவற்றால் வேறுபட்ட சுமார் 31 இன மக்கள் ஒற்றுமையாக வாழும் நாடு என கலந்து கொண்ட அறிஞர்களால் பாராட்டப்பட்ட அமீரகத்தில் சகிப்புத் தன்மைக்கென ஒரு அமைச்சரும் உள்ளார். ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் எனும் அந்த அமைச்சர் மாநாட்டின் மையச் சிறப்புரையை நிகழ்த்தினார்.

பங்கேற்பாளர்களுக்கு அர்மானி ஓட்டலிலும் அருகிலுள்ள இன்டெர் கான்டினென்டல் ஓட்டலிலும் தங்கும் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மிகப் பெரிய அளவில் உணவு ஏற்பாடுகளும் இருந்தன.

‘பன்மைத்துவத்தின் மூலம் செழிப்படைதல்: புதுமையாக்கம், கூட்டுச் செயல்பாடு ஆகியவற்றின் ஊடாக பன்மைத்துவத்தைத் தழுவுதல்‘ (Prospering from Pluralism: Embracing Diversity through Innovation and Collaboration) என்பது மாநாட்டின் பொதுத் தலைப்பு.

நவம்பர் 16ஐ சகிப்புத்தன்மைக்கான உலக நாளாக 2016ல் அறிவித்தபோது யுனெஸ்கோ&வின் இயக்குநர் நாயகம் ஆட்ரே அசௌலே, ‘சகிப்புத்தன்மை என்பது ஒரு உன்னத மானுட மாண்பு. அதை நாம் ஒவ்வொருவரும் நம் சொந்த வாழ்வில் கடைபிடிக்க வேண்டும். நம்மை வலிமையானவர்களாக ஆக்கும் இப்பன்மைத் தன்மையைக் கொண்டாடுவது மட்டுமின்றி நாம் ஒவ்வொருவரும் நம் சொந்த வாழ்வில் ஒவ்வொரு நாளும் அதைக் கடைபிடிக்க வேண்டும். பல்வேறு பண்பாடுகளுக்கும் அவற்றைக் கடைபிடிக்கும் மக்களுக்கும் இடையில் பரஸ்பர புரிதலை உருவாக்குவது இன்று அவசியமாக உள்ளது. உலகளாவிய மனித உரிமைப் பிரகடனத்தின் அடிப்படை கருத்தாக்கமாகவும் அதுவே உள்ளது. வன்முறையும் தீவிரவாதமும் பெருகி வரும் சூழலில் இது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. மனித வாழ்வு மதிப்பற்றுப் போன இச்சூழலில் சகிப்புத் தன்மையை நாம் தீவிரமாகக் கடைபிடித்தாக வேண்டும்’ எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணியில் நடந்த இம்மாநாட்டில் கலந்து கொண்ட கருத்துரையாளர்களில் பலரும், ‘மற்ற நாட்டு மக்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து சகிப்பின்மை மற்றும் பன்மைத்துவம் குறித்து கற்றுக் கொள்ள நிறைய உள்ளது’ எனக் கூறியதைக் கவனித்தேன். நமது தமிழ் நண்பர்களைச் சந்தித்த போதும் இங்கு அரசும் அரசியல் சட்டமும் உள் நாட்டினர், வெளி நாட்டினர் என வேறுபாடுகளைக் காட்டுவதில்லை எனவும், எல்லோரும் பொதுவில் சமமாகவே நடத்தப்படுகின்றனர் என்றும் குறிப்பிட்டனர்.

‘சகிப்பித் தன்மை என்பதைப் பள்ளிகளில் பாடமாகப் பயிற்றுவிக்க வேண்டும். அந்த வகையில் அமீரகப் பாடநூல்கள் ஒரு முன்மாதிரியாக உள்ளன. மற்ற நாடுகள் அவற்றைப் பின்பற்ற வேண்டும். சகிப்புத் தன்மையைப் பயிற்றுவிப்பதற்கு இளம் வயதே பொருத்தமானது. சகிப்புத் தன்மை என்பது ஒரு முழுமையான கருத்தாக்கம் (total concept). அது பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. ‘மற்றவர்கள்’ (others) மீது வன்முறையைப் பிரயோகிக்கக் கூடாது என்பது மட்டுமே சகிப்புத்தன்மையின் அளவுகோல் அல்லது அடையாளம் எனச் சுருக்கிப் புரிந்து கொள்ளக் கூடாது. அதற்கு மேலும் ஆழமான பொருளைக் கொண்ட சொல் ‘சகிப்புத்தன்மை’. நீங்கள் அவர்களோடு வாழ வேண்டும். அவர்களை ஏற்க வேண்டும், மதிக்க வேண்டும், அவர்கள் குறித்துக் கவலை கொள்ள வேண்டும். அவர்களின் பண்பாடுகளையும் வழமைகளையும் புரிந்தேற்க வேண்டும். பெரும்பான்மையான மக்கள் மற்றவர்களோடு சகிப்புத்தன்மையுடன் வாழவே விரும்புகின்றனர். சமூகத்தில் வெகு சிலரே சகிப்புத் தன்மைக்கு எதிராக உள்ளனர். ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். சகிப்புத்தன்மை கொண்ட சமூகமே பாதுகாப்பான சமூகம். சகிப்புத் தன்மை கொண்ட சமூகமே மகிழ்ச்சியான சமூகம். சகிப்புத் தன்மையற்ற எந்தச் சமூகமும் உலகில் பாதுகாப்பற்ற மகிழ்ச்சியற்ற சமூகமாகவே இருக்க முடியும்’- என்பவைதான் அந்த இரு நாள் மாநாட்டில் சாரமாக முன்வைக்கப்பட்ட செய்தி.

அமைதி மற்றும் சகிப்புத் தன்மையை உலகளவில் பரப்புவது எங்ஙனம், அரசுகள் அதில் எத்தகைய பங்கு வகிக்க வேண்டும், ஊடகங்களுக்கு அதில் எத்தகைய பொறுப்பு உள்ளது, சமூக ஊடகங்கள் பண்பாடு மற்றும் மதப் பன்மைத்துவங்களை மதிப்பதற்கு எத்தகைய பங்காற்ற வேண்டும், பண்பாடுகளுக்கு இடையேயான உரையாடல்களின் முக்கியத்துவம் சகிப்புத்தன்மையை வளர்த்தெடுப்பதில் கல்வியின் பங்கு என இரண்டு நாட்களிலும் மிக முக்கியமான தலைப்புகள் பலவற்றில் உலக அளவில் முக்கிய செயல்பாட்டாளர்கள் மற்றும் அறிஞர்கள் உரையாற்றினர். அரேபிய ஸ்கை நியூசின் இமேன் லஹ்ரேச், இளவரசி லாமியா பின் மஜீத் சௌத் அல் சௌத், வளைகுடா ஒற்றுமைக் குழுவின் இயக்குநர் நாயகம் ரஷித் அல்சயானி, இன அழிப்பைத் தடுப்பதற்கான ஐ.நா. அவையின் அறிவுரையாளர் அடாமா டியங், ஜப்பானின் தூதுவர் அகிமா உமேசேவா, Prospering from Pluralism அமைப்பின் ரெவரென்ட் விக்டர் எச்.கசானிஜியான் முதலியவர்கள் அங்கே பேசிய முப்பதுக்கும் மேற்பட்டோரில் நினைவுக்கு வரும் சில பெயர்கள்.

அரபு அறிஞர்கள் மட்டுமின்றி முஸ்லிம் பெண் அறிஞர்கள், ஆப்ரிக்கச் சிந்தனையாளர்கள், கிறிஸ்தவப் பாதிரிகள், கனடா முதலான நாடுகளிலிருந்து வந்த சீக்கியர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் எனப் பலதரப்பினரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இளவரசி லாமியா சகிப்புத் தன்மை என்பதில் பெண்கள் மதிக்கப்படுதல், ஆண் -பெண் சமத்துவம் ஆகியவை குறித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. பாலியல் சமத்துவம் (gender equity) எனும் அமைப்பின் தலைவராகவும் அவர் உள்ளார்.

ஒரே குறையாக நான் கண்டது அங்கு வந்திருந்த அனைவருக்கும் பேசியவர்களின் உரைகள் முன்கூட்டியே அச்சிட்டு வழங்கப்படாததுதான். எல்லோரும் குறிப்புகள் கூட இல்லாமல்தான் பேசினர். அதே போல ஒரு சிலரையேனும் பார்வையளர்கள் மத்தியிலிருந்து சுருக்கமாகக் கருத்துரைக்க அனுமதித்திருக்கலாம். பெரும்பாலான உரைகள் அரபியில் இருந்ததால் மற்ற மொழியினர் புரிந்து கொள்ள இயலாமற் போய்விட்டது. அதற்கும் ஏதேனும் மாற்று ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். நிகழ்ச்சி நிரல் தவிர கையில் எந்த ஒரு அச்சிட்ட காகிதமும் இல்லாமல்தான் பங்கேற்பாளர்கள் திரும்பி வந்தோம். பங்கேற்பாளர்களிடமிருந்து எதிர்காலச் செயல்பாடுகளுக்கான ஆலோசனைகளும் கேட்கப்படவில்லை.

வெளிநாடுகளில் எங்கு சென்ற போதிலும் ஒட்டல் அறைகளில் தங்குவதைக் காட்டிலும் நம் தமிழ் நண்பர்களோடு தங்குவதே என் வழக்கம். ஆனால் இம்முறை அரசு விருந்தினராகச் சென்றதால் அந்த வாய்ப்பு இல்லாமற் போய்விட்டது. எனினும் நவம்பர் 14 இரவு நான் துபாய் விமான நிலையத்தில் இறங்கியபோது அங்கு முகநூல் மூலம் அறிமுகமான நண்பர் பிலால், அலியார், முகமது இஷாய்ல், வலசை ஃபைசல், அனஸ் முதலான பத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் காத்திருந்தனர். நவம்பர் 15 அன்று கலந்துரையாடல் ஒன்றையும் ஏற்பாடு செய்தனர். சுமார் 70 பேர்கள் அதில் கலந்து கொண்டனர், மிகவும் உடல் நலமில்லாத நிலையில்தான் சென்றிருந்தேன். இருந்தாலும் நண்பர்களைச் சந்தித்த உற்சாகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்க முடிந்தது. அபுதாபியிலிருந்தெல்லாம் சகோதரிகள் உட்படப் பலரும் வந்திருந்தனர்.

ஒன்றைச் சொல்லி முடிப்பது அவசியம். இந்தத் தலைப்பில் நடத்தப்பட்ட இந்த மாநாடு முக்கியமான ஒன்று என்பதில் ஐயமில்லை. ஒப்பீட்டளவில் அனைத்து மக்கள் மத்தியில் சமத்துவம் நிலவும் நாடாக அமீரகம் அமைந்துள்ளது என்பதிலும் ஐயமில்லை. ஆனால் அதற்காக எந்தப் பிரச்சினையும் இல்லாத நாடாக நாம் அமீரகத்தைக் கருத வேண்டியதும் இல்லை. Middle East and North Africa

Division இல் உதவி ஆய்வாளராக இருக்கும் ஹிபா ஸயாதீன் என்பவர் மனித உரிமைக் களத்தில் துபாய் தனக்குள்ள கெட்ட பெயரைக் களைந்து கொள்ளும் முயற்சிதான் அது நடத்துகிற இம்மாநாடு என்கிறார்.

செப்டம்பர் 11 க்குப் பின் ‘தேசிய ஒற்றுமையைக் குலைப்பது’, ‘அரசு அடையாளங்களை அவமதிப்பது’ முதலான பெயர்களில் அடக்குமுறைச் சட்டங்களை இயற்றி அரசை விமர்சிப்பவர்களை நீண்ட நாள் சிறையில் அடைக்கும் வழக்கம் துபாயில் உள்ளதாக அவர் குற்றம் சாட்டுகிறார். விருதுகள் பெற்ற மனித உரிமைப் போராளி அகமது மன்சூர் சென்ற மே மாதம் பத்தாண்டுகள் இச்சட்டங்களின் கீழ் சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளதையும், பரவலாக அறியப்பட்ட கல்வியாளர் நாசர் பின் கெய்த் என்பவர் எகிப்து மற்றும் அமீரக அரசுகளை விமர்சித்த குற்றத்திற்காக 2017ல் பத்தாண்டுகள் சிறைத் தண்டனைக்கு உள்ளானதையும் அவர் குறிப்பிடுகிறார். ஜோர்டானைச் சேர்ந்த டெய்சீர் அல்நஜார் எனும் பத்திரிகையாளர் தனது முகநூல் பக்கத்தில் எகிப்து மற்றும் வளைகுடா நாடுகளை விமர்சித்ததற்காக துபாய் அரசால் மூன்றாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று இம் மாநாட்டை நடத்திய துபாய் மன்னரின் மகள் ஷெய்கா லதீஃபா அமீரகத்திலிருந்து தப்பித்தோட முயற்சித்தபோது தடுத்து நிறுத்திக் கொண்டுவரப்பட்டவர். பின்னர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

இந்த மனித உரிமை மீறல்களை நாம் எப்படி மறக்க முடியும்?
-அ. மார்க்ஸ்சகிப்புத்தன்மைக்காக ஒரு உலக மாநாடு

Comments are closed.