சச்சார் அறிக்கை வெளியாகி 10 வருடங்கள் கழிந்தும் IAS, IPS இல் முஸ்லிம்கள் 3% மட்டுமே

0

2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சச்சார் கமிட்டி இந்திய முஸ்லிம்களின் நிலையை மேம்படுத்த பல்வேறு வழிமுறைகளை அரசுக்கு அது பரிந்துரைத்திருந்தது. அதில் ஒன்று முஸ்லிம் IAS மற்றும் IPS அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பது.

2006 ஆம் ஆண்டு மொத்தமுள்ள 3209 IPS அதிகாரிகளில் வெறும் 128 பேர் தான் முஸ்லிம்கள். இது மொத்த IPS அதிகாரிகளின் தொகையில் 4% மட்டுமாகும். தற்போது ஜனவரி 2016 இல் இந்த சதவிகிதம் 3.19% ஆக குறைந்துள்ளது. அதாவது தற்போது 3754 அதிகாரிகளுக்கு வெறும் 120 முஸ்லிம் IPS அதிகாரிகளே பணியில் உள்ளனர்.

ஒருவர் மத்திய சிவில் சர்வீஸ் பணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டுமென்றால் இரு வழிகள் உள்ளன. ஒன்று UPSC தேர்வில் வெற்றி பெற்று தேர்வாகுவது, மற்றொன்று மாநில சிவில் சர்விஸ் பணிகளில் இருந்து பதவி உயர்வு பெறுவது. தற்போது முஸ்லிம் IPS அதிகாரிகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம் மாநிலத்தில் பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படாததே. 2006 இல் 7% ஆக இருந்த இந்த பதவி உயர்வு 2016 இல் 3.82% ஆக குறைந்துள்ளது. மாநிலங்களில் இருந்து பதவி உயர்வு பெறப்பட்ட 1150 IPS அதிகாரிகளில் வெறும் 44 பேர் தான் முஸ்லிம்கள்.

UPSC தேர்வெழுதி IPS பணிக்கு தேர்வாகியவர்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை தற்போது உயர்ந்துள்ளது. சச்சார் அறிக்கை வெளியான போது 2297 அதிகாரிகளில் 2.7% சதவிகிதமான 63 முஸ்லிம் அதிகாரிகள் UPSC தேர்வெழுதி IPS பணிக்கு நியமிக்கப்பட்டார்கள். தற்போது மொத்தம் உள்ள 2604 அதிகாரிகளில் 76 பேர் UPSC தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தவர்கள். இதன் சதவிகிதம் 2.91 ஆகும்.

IAS அதிகாரிகளின் எண்ணிக்கையில் சச்சார் அறிக்கையின் போது இருந்த எண்ணிக்கையைவிட தற்பொழுது சற்று அதிகாமாகியுள்ளது. சச்சார் அறிக்கை வெளியான போது 3% இருந்த முஸ்லிம் IAS அதிகாரிகளின் எண்ணிக்கை தற்பொழுது 3.32 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 164 முஸ்லிம் IAS அதிகாரிகளில் 96 பேர் UPSC தேர்வெழுதி நேரடி தேர்வு செய்யப்பட்டவர்கள்.

IAS மற்றும் IPS பணிகளில் இந்திய ஜனத்தொகையில் 14% உள்ள முஸ்லிம் சமூகத்தினரின் பங்கீடு மிகவும் குறைவாக உள்ளது என்று சச்சார் கமிட்டியின் மதிப்பீட்டு கமிட்டி தலைவர் டாக்டர் அமிதாப் குந்து தெரிவித்துள்ளார். இன்னும் இந்த பணிகளுக்காக விண்ணப்பிப்பவர்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 8% தான் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பணிகளுக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்ட 172 பேர்களில் 48 பேர் உத்திர பிரதேசத்தில் உள்ளவர்களும், 34 பேர் பீகாரில் உள்ளவர்களும், 22 பேர் ஜம்மு கஷ்மீரில் உள்ளவர்களும் ஆவர்.

Comments are closed.