சட்டம் யார் கையில்?

1

 

 – ரியாஸ்

மார்ச் 23 அன்று உத்தரபிரதேசத்தின் மீரட் வீதிகளில் சிலர் அமைதியாக தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து கொண்டிருந்தனர். மார்ச் 21 அன்று ஹாஷிம்புரா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக அவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். கலந்து கொண்டவர்களின் முகங்களில் விரக்தியும் ஏமாற்றமும் இருந்தன.

முப்பது வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட தனது கணவர் இக்பாலின் கறுப்பு வெள்ளை புகைப்படத்துடன் இதில் கலந்து கொண்டார் ஜெய்புன். மே 12,1987 அன்று ஜூம்ஆ தொழுகைக்கு செல்வதாக கூறிச் சென்ற இக்பால் மீண்டும் திரும்பவே இல்லை. அது புனிதமிக்க ரமலான் மாதத்தின் இறுதி ஜூம்ஆ. பெருநாளை எதிர்பார்த்து இருந்தவர்கள் பெருநõளை அடையவில்லை. இக்பாலை போன்று ஏறத்தாழ ஐம்பது முஸ்லிம்களை இழுத்துச் சென்றது பிரதேச காவல்படை. (கணூணிதிடிணஞிடிச்டூ அணூட்ஞுஞீ இணிணண்tச்ஞதடூச்ணூதூ  கஅஇ) சிறுவர்கள், பெரியவர்கள் என்ற வயது வித்தியாசமின்றி இவர்களை இழுத்து சென்றனர்.

இழுத்துச் சென்றவர்களை அன்றிரவு பிரதேச காவல்படையின் வாகனத்தில் ஏற்றி காஸியாபாத்தின் ஹிண்டான் நதிக்கு கொண்டு சென்றனர். வாகனத்தில் இருந்தவர்களை இறங்குமாறு கூறி வரிசையாக நிற்க வைத்து கண்மூடித்தனமாக சுட்டனர். சுடப்பட்டவர்களை நதியில் தூக்கி வீசினர். மீதமுள்ளவர்களை முராத்நகரின் உயர் கங்கா கால்வாய்க்கு அழைத்துச் சென்றனர். முந்தைய கோரத்தை கண்டதால் இம்முறை எஞ்சியவர்கள் வாகனத்தை விட்டும் இறங்க மறுத்தனர். அதனால், அவர்களை வாகனத்தின் உள்ளேயே வைத்து சுட்டுக் கொன்றனர். பின்னர் கால்வாயில் வீசிச் சென்றனர்.

துப்பாக்கிச் சூடு சத்தத்தை கேட்டு சம்பவ இடங்களுக்கு வந்த காவல்துறையினரே இந்த கோரத்தை கண்டு அதிர்ந்து விட்டனர். மொத்தம் 42 முஸ்லிம்கள் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். ஐந்து நபர்கள் மட்டும் உயிர் தப்பினர். உயிர் தப்பிய பாபுதீன் மற்றும் சுல்ஃபிகர் நாசர் ஆகியோருக்கு அப்போது வயது வெறும் பதினைந்து.

வழக்கின் விசாரணை ஆரம்பித்து ஆமையை விட மோசமான வேகத்தில் சென்றது. மொத்தம் 19 பேர் குற்றவாளிகள் என்று கூறப்பட்டது. குற்றப்பத்திரிகை 1996ல் தான் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் விசாரணை செப்டம்பர் 2002ல் டெல்லிக்கு மாற்றப்பட்டது. என்றாவது ஒரு நாள் தங்களுக்கு நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு பயணம் செய்த வண்ணம் இருந்தனர். 27 ஆண்டுகள் நடைபெற்ற விசாரணை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. மொத்தம் 161

சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இடையே குற்றம் சாட்டப்பட்ட மூவரும் தப்பிப் பிழைத்த ஒருவரும் மரணித்தனர்.

மார்ச் 21 அன்று தீர்ப்பை வாசித்த கூடுதல் செசன்ஸ் நீதிபதி சஞ்சய் ஜிண்டால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி பதினாறு நபர்களையும் விடுதலை செய்தார். அப்படியென்றால் அந்த 42 முஸ்லிம்களையும் கொலை செய்தது யார்? அந்த 42 நபர்களும் தங்களை தாங்களே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு கால்வாயிகளில் குதித்து விட்டார்கள் என்று சொல்கிறார்களா?

கணவனை இழந்த ஜெய்புன் ‘என்னிடம் உள்ள ஒரே ஆதாரம் முப்பது வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம்தான். இல்லையென்றால் இப்படி ஒரு மனிதன் வாழவே இல்லை என்று கூறினாலும் கூறுவார்கள்” என்று விரக்தியுடன் கூறுகிறார்.

இடைப்பட்ட இந்த 27 ஆண்டுகளில் காங்கிரஸ், பா.ஜ.க., சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி என அனைவரும் உத்தரபிரதேசத்தை ஆட்சி செய்து விட்டனர். ஆனால், இந்த மக்களுக்கு நீதிதான் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் நியாயத்தை எதிர்பார்க்கும் கடைசி புகலிடமாக நீதிமன்றங்கள்தான் உள்ளன. ஆனால், இந்த நீதிமன்றங்களே இப்படி தீர்ப்பளித்தால் மக்களின் நிலை என்னவாகும்?

இது ஏதோ விதிவிலக்கான அல்ல. இது தற்போது தொடர்கதையாக உள்ளது. போலி என்கௌண்டர் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களில் ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள் அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர் என்பதுதான் தற்போதைய நிலையாக உள்ளது.

சில வழக்குகளில் அரசு தரப்பு வழக்கறிஞர்களின் போக்கு நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது. மும்பை தாக்குதல் வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராகியவர் உஜ்வால் நிகாம். வழக்கு விசாரணை நடைபெறும்போது தினமும் பத்திரிகையாளர்கள் முன்தோன்றி பல ஆவேச கருத்துகளை கூறியவர். அஜ்மல் கசாப் சார்பாக ஆஜராகிய வழக்கறிஞர் அப்பாஸ் கஸ்மியை தீவிரவாத வழக்கறிஞர் என்று அழைத்தவர். சாட்சிகளின் விசாரணை முக்கிய கட்டத்தில் இருக்கும்போது வழக்கை ஒத்திவைக்க கோரி அதில் வெற்றியும் கண்டவர்.

விசாரணை நடைபெறும் போது, ஒரு சமயம், “அஜ்மல் கசõப் தனக்கு பிரியாணி வேண்டும் என்று கேட்கிறான். சிறையில் கொடுக்கப்படும் உணவை உட்கொள்ள மறுக்கிறான்” என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார். இது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘அப்பாவிகளை கொன்றவனுக்கு பிரியாணியா?’ என்று அனைவரும் கொதித்தெழுந்தனர். இறுதியாக கசாப்பிற்கு தூக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. நவம்பர் 2012ல் ரகசியமான முறையில் தூக்கில் ஏற்றப்பட்டான் கசாப்.

ஆனால், தற்போது உஜ்வால் நிகாம் ஒரு உண்மையை உதிர்த்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற தீவிரவாத எதிர்ப்பு கருத்தரங்கத்தின் போது பத்திரிகையாளர்களிடம் இவர் அந்த உண்மையை ஒப்புக்கொண்டார். “உண்மையில் கசாப் பிரியாணி ஏதும் கேட்கவில்லை. கசாப் மீது அனுதாபம் ஏற்படும் ஒரு நிலை ஏற்பட்டதால் அதனை மாற்றுவதற்கு நான்தான் இவ்வாறு கூறினேன்’ என்று கூறினார்”  இந்த அரசு தரப்பு வழக்கறிஞர். எப்படி இருக்கிறது இவரின் வாதம்?

தேசத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்த அப்ஸல் குருவிற்கு மரண தண்டனை வழங்கினார்கள். இப்போது மக்களின் சிந்தனை போக்கை மாற்றுவதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் பொய் கூறியுள்ளார். ஆனால், துரதிஷ்டவசமாக சில ஊடகங்களை தவிர்த்து வேறு யாரும் இந்த செய்தியை கண்டு கொள்ளவே இல்லை. பொய் உரைத்த அரசு வழக்கறிஞருக்கு என்ன தண்டனை என்று யாரும் கேள்வி எழுப்பவில்லை. இதேப்போன்று இன்னும் எத்தனை வழக்குகளில் இவர் எத்தனை பொய்களை கூறினாரோ?

ஜனநாயகத்தின் தூணான நீதித்துறையின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஆனால், இந்த நீதித்துறையோ இன்று சிலரின் கட்டளைகளுக்கு ஏற்பவும் சிலரின் ஆசைகளுக்கு ஏற்பவும் ஆட்டுவிக்கப்படுகிறது என்பதுதான் கசப்பான உண்மை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இந்த கட்டுகளில் இருந்து நீதித்துறை காப்பாற்றப்பட வேண்டும். இல்லையென்றால், ஒடுக்கப்பட்ட மக்களை நீதித்துறையை கொண்டே ஒடுக்கும் மோசமான நிலை நமது நாட்டில் மேலோங்கிவிடும். அது ஜனநாயக மரபுகளை போற்றும் நமது நாட்டிற்கு அழகல்ல.

(ஏப்ரல் 2015 இதழில் வெளியான கட்டுரை)

Discussion1 Comment

  1. இந்துத்துவம் நீதித்துறையிலும் உள்வாங்கிவிட்டதோ ?
    அப்படி என நினைக்க தோணுகின்றது