சந்தைப்படுத்தப்படும் தேசபக்தி!

0

சந்தைப்படுத்தப்படும் தேசபக்தி!

இந்தியாவில் ஜனநாயக உரிமைகள் தேசவிரோதமாக மாறி வருகின்றன. ஏற்கனவே சங்பரிவாரின் போலி தேசியவாதத்தையும் மத சகிப்பின்மையையும் குறித்து கேள்வி எழுப்பியவர்கள் தேச துரோகிகளாக சித்தரிக்கப்பட்டனர். பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர். சிலர் கொலையும் செய்யப்பட்டனர். இப்போது தேசப்பற்றிற்கு தங்களுடைய பாணியில் புதிய வரைவிலக்கணத்தை எழுதி வருகின்றனர். அலிகர் பல்கலைக்கழகத்தில் சங்பரிவார் ஏஜண்ட் செய்தி சேனலான ரிபப்ளிக் டி.வி.யின் ஆணவப்போக்கையும், அவதூறான செய்தி ஒளிபரப்பையும் குறித்து கேள்வி எழுப்பிய மாணவர்கள் மீது உத்தர பிரதேச அரசு தேச துரோக வழக்கை பதிவு செய்தது. பின்னர் எழுந்த கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து வழக்கு திரும்பப் பெறப்பட்டது. சங்பரிவாருக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை கேரள மாநில இடதுசாரி அரசும் நிரூபித்துள்ளது. ‘காஷ்மீர்கள் மீது நடத்தும் தாக்குதல்களை எதிர்ப்போம்’ என்று சுவரொட்டியை ஒட்டியவர்கள் மீது அங்கு தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சி மக்களுக்கு அவநம்பிக்கையையும் துயரத்தையுமே பரிசாக அளித்தது. மக்கள் விரோத கொள்கைகளும், ஊழலும், மதவாதமும் கைக்கோர்த்த அவலமான ஆட்சியை இதுவரை இந்த தேசம் கண்டதில்லை. இதனை மூடி மறைக்க போலி வாக்குறுதிகளை அள்ளி வீசினர். ஆனால், மக்கள் இதையெல்லாம் நம்புவதற்கு தயாரில்லை என்பதை அண்மையில் நடந்த பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டின. உளவுத்துறையின் எச்சரிக்கை குறித்த அலட்சியம், பாதுகாப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி என அரசின் பல்வேறு தவறுகளின் காரணமாக கஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலை பயன்படுத்தி தங்களது ப்ராண்டட் தேசப்பக்தியை சந்தைப்படுத்த சங்பரிவாரம் முயற்சித்தது. அதன் விளைவாக நாடு முழுவதும் கஷ்மீரிகள், குறிப்பாக மாணவர்கள் மற்றும் வியாபாரிகள் தாக்கப்பட்டனர்.

கஷ்மீரிகளை புறக்கணிக்க வேண்டும் என்று அரசியல் சாசன பதவியை வகிக்கும் மேகாலயா ஆளுநரே பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். மேற்கு வங்க மாநில முன்னாள் பா.ஜ.க. தலைவரான இவரிடம் இதை தவிர வேறு எதனை எதிர்பார்க்க முடியும்? கஷ்மீரிகளை தனிமைப்படுத்தி அதன் மூலம் முஸ்லிம் எதிர்ப்பு மனநிலையை உருவாக்க முயற்சி நடக்கும்போது நாட்டின் பிரதமர் மௌனம் சாதிக்கிறார். புல்வாமா தாக்குதலால் தேசமே அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த வேளையில் உத்தரகாண்டில் உள்ள கார்பெட் தேசிய பூங்காவில் நாள் முழுக்க படப்பிடிப்பில் பிசியாக இருந்தவரல்லவா மோடி?

சி.ஆர்.பி.எஃப். ஜவான்கள் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதல் கண்டனத்திற்குரியது; அதில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேவேளையில் ஜவான்களின் மரணத்தை தங்களது குறுகிய அரசியல் நலனுக்காக பயன்படுத்தி அதிகாரத்தை தக்கவைக்க முயற்சிக்கும் பா.ஜ.க. அரசின் இழிவான நடவடிக்கை புல்வாமா தாக்குதலைப் போல மிகவும் கண்டிக்கத்தக்கது. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு மோடி மற்றும் சங்பரிவாரத்தின் நடவடிக்கைகளை பார்க்கும்போது அந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதா? என்ற சந்தேகம் எழாமல் இல்லை. இக்கேள்வியை மம்தா பானர்ஜி முதலான முக்கிய அரசியல் தலைவர்களே எழுப்பியுள்ளனர். ஆனால், இவ்வாறு சந்தேகங்களை எழுப்புவோரை தேசபக்தியின் பெயரால் மிரட்டுகிறது மோடி அரசு.

மோடியின் ஆட்சி காலத்தில்தான் உரி மற்றும் பதான்கோட்டில் உள்ள இராணுவ தளங்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. உரி தாக்குதலுக்கு பதிலடியாக கொண்டாடப்பட்ட எல்லை கடந்த துல்லிய தாக்குதல் வெறும் வீராப்பு மட்டுமே என்பதை புல்வாமா தாக்குதல் உணர்த்துகிறது.

நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்த எதிரிகள் முயற்சிக்கும்போது துணிச்சலான தலைவர் தேவை என்ற கோஷங்கள் பவனி வர துவங்கிவிட்டன. ஆனால், ‘தற்போது யார் தலைவராக இருக்கிறார்?’ என்ற கேள்வியை யாரும் எழுப்பிவிடக்கூடாது.

குஜராத் இனப்படுகொலையை தடுக்க நடவடிக்கை எடுக்காததைக் குறித்த பத்திரிகையாளரின் கேள்விக்கு, காரின் சக்கரத்தில் சிக்கிய நாய்க்குட்டியோடு பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை ஒப்பிட்ட மோடி, தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஜவான்களுக்கு மதிப்பளிப்பார் என்று கருதுவது அபத்தம். தேச பக்தியை திரையாக பயன்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான ஆயத்தங்களை மோடி மற்றும் சங்பரிவாரங்கள் செய்ய துவங்கிவிட்டனர். மதச்சார்பற்ற சக்திகள் விழிப்புணர்வுடனும் விவேகத்துடனும் செயல்படாவிட்டால் இதைவிட மோசமாக இந்தியா மீண்டும் துயரத்தில் தள்ளப்படுவதை தடுக்க இயலாது.

Comments are closed.