சனாதன் சன்ஸ்தா அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க மறுக்கும் பா.ஜ.க. அரசு

0

விஜய் ரோகடே என்பவரால் சனாதன் சன்ஸ்தா அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மீதான விசாரணை மும்பை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி என்.ஹெச்.படில், மற்றும் பி.டி.நாயக் ஆகியோர் அடங்கிய பென்ச்சிடம் விசாரணைக்கு வந்தது.

இதில் மனுதாரர், கடந்த 2012 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா அரசு தீவிரவாத தடுப்புபடை தங்களிடம் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் சனாதன் சன்ஸ்தா அமைப்பை தடை செய்யுமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் மத்திய அரசாங்கம் இன்று வரை இது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த மத்திய அரசின் வழக்கறிஞர், மகாராஷ்டிர மாநில அரசின் வேண்டுகோளை மத்திய அரசு சரிபார்த்ததாகவும் ஆனால் இது தொடர்பாக மகாராஷ்டிர அரசு சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் தங்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்றும் அதனால் அம்மாநில அரசை கூடுதல் ஆதாரங்கள் வழங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிர மாநில அரசுகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்திற்கான ஆவணங்களை சமர்பிக்குமாரும் இவற்றை வெறும் வாய்வழியாக கூறமுடியாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் இவ்விஷயம் தொடர்பாக மத்திய மாநில அரசுகளுக்கிடையே பரிமாறப்பட்ட கடிதங்கள் அனைத்தையும் இரண்டு வாரங்களுக்குள் சமர்பிக்குமாறு அவர்கள் கூறியுள்ளனர். மேலும் எந்த சட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசு ஒரு இயக்கத்தை தடை செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மனுதாரரின் வழக்கறிஞர், UAPA சட்டத்தின் மூலமாக மத்திய அரசு எந்த ஒரு இயக்கத்தையும் தடை செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு கூடுதல் உள்துறை செயலாளர் உள்துறை அமைச்சகத்தின் இயக்குனருக்கு சனாதன் சன்ஸ்தா அமைப்பின் மீது மூன்று குண்டுவேடிப்பு குற்றச்சாட்டுகள் இருப்பதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளது என்று மகாராஷ்டிர மாநில அரசு நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்திருந்தது. அதில் மகாராஷ்டிர அரசு சனாதன் சன்ஸ்தா அமைப்பை UAPA சட்டத்தின் கீழ் தடை செய்ய முடிவு செய்திருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.