சமீபத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் ஜனநாயக உரிமைகளை நசுக்கும்- பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு!

0

பத்திரிகை செய்தி:

பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழுவின் கோரிக்கைகள்! சமீபத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் ஜனநாயக உரிமைகளை நசுக்கும்! அசாம் மற்றும் காஷ்மீரில் நிலவும் மோசமான சூழ்நிலைகள் குறித்து கவலைகளை வெளிப்படுத்தியது!

அசாம் மற்றும் காஷ்மீரில் நிலவும் மோசமான சூழ்நிலைகள் குறித்து கவலைகளை வெளிப்படுத்தியது!

கடந்த ஆகஸ்டு 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கூட்டம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வைத்து நடைபெற்றது. அடிப்படையான ஜனநாயக உரிமைகளை நசுக்கும் வகையில் அடக்குமுறை சட்டங்களை இயற்ற பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்றத்தில் தனது ஆதிக்க பெரும்பான்மையை தவறாக பயன்படுத்துவதாக இக்கூட்டம் கூறியது. யு.ஏ.பி.ஏ திருத்த மசோதா 2019, என்.ஐ.ஏ மசோதா 2019, தகவல் அறியும் உரிமை திருத்த மசோதா 2019, முத்தலாக் மசோதா முதலான நீண்ட கால தாக்கங்களை ஏற்படுத்தும் பல சட்டங்கள் நாடாளுமன்றத்தில் ஒரு சில நாட்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மசோதாக்களின் தன்மை, அவற்றை நாடாளுமன்ற மீளாய்வுக்கு உட்படுத்தாமல் அவசரமாக நிறைவேற்றியமை மற்றும் மசோதாக்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட கடுமையான ஆட்சேபனைகளுக்கு எந்த கருத்தும் அளிக்காமை ஆகியன பா.ஜ.க ஜனநாயகத்தின் மெய்ப்பொருளுக்கு எதிராக தனது பெரும்பான்மையை தவறாக பயன்படுத்துவதற்கான அறிகுறிகளாகும்.

மசோதாக்கள் குறித்த எதிர்கட்சிகளின் நிலைப்பாடு ஏமாற்றமளிக்கிறது!

மசோதாக்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினர்களின் பாசாங்குத்தனமான நிலைப்பாடு குறித்து இந்த கூட்டம் கேள்வி எழுப்பியது. எதிர்கட்சிகளைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் மசோதாக்களுக்கு எதிராக குரல் எழுப்பினர். மேலும் 14 மசோதாக்கள் குறுகிய காலத்தில் ஆய்வு செய்யப்படாமல் அவசரமாக கொண்டு வரப்பட்டதாக குற்றம் சாட்டினர். இருப்பினும், இந்த மசோதாக்களுக்கான வாக்கெடுப்பு நடந்தபோது இரு அவைகளிலும் ஆதரவாக வாக்களித்தனர். மாநிலங்களவையில் பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை கிடையாது. எனினும் இரு அவைகளிலும் மசோதாக்களை பா.ஜ.க நிறைவேற்றியுள்ளது. எதிர்கட்சி உறுப்பினர்களில் சிலரை தவிர மற்றவர்கள் நேர்மையற்றவர்கள் அல்லது பா.ஜ.கவால் மிரட்டப்பட்டுள்ளனர் என்பது நிரூபணமாகியுள்ளது.

எதிர்கட்சிகளை ஒழித்துக்கட்ட பா.ஜ.க முயற்சிக்கிறது!

பிற கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களை விலைக்கு வாங்குவது, ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அரசியல் நெருக்கடியை உருவாக்குவது முதலான பா.ஜ.கவின் இழிவான அரசியல் குறித்து இந்த செயற்குழு கூட்டம் கவலை தெரிவித்துள்ளது. பா.ஜ.க மட்டுமல்ல, எதிர்கட்சிகளிடமிருந்து விலை போனவர்களும் மக்களுக்கும், கொள்கைகளுக்கும் துரோகமிழைத்துள்ளனர். அவர்கள் கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வீழ்த்தியுள்ளனர். இதர மாநிலங்களில் பிற கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் பணத்திற்காகவும் இதர ஆதாயங்களுக்காகவும் பா.ஜ.கவிற்கு கட்சி தாவியுள்ளனர். அதிகார பசியுள்ள தலைவர்களை பயன்படுத்தி மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை குழித்தோண்டி புதைப்பதன் மூலம் இதர கட்சிகளை அழிக்க தாங்கள் எந்தவொரு எல்லை வரைக்கும் செல்வோம் என்பதை பா.ஜ.க நிரூபித்துள்ளது. வலுவான எதிர்ப்பு ஏதுமில்லாத ஊனமுற்ற ஜனநாயகத்தை உருவாக்க அது விரும்புகிறது. பணம் மற்றும் அதிகாரத்தை விட மக்களின் நலன்களிலும், கொள்கைகளிலும் ஈடுபாடு கொண்ட தலைவர்களை வலுப்படுத்தி, தேர்ந்தெடுப்பதன் மூலம் பா.ஜ.கவின் தீய தந்திரங்களை எதிர்த்து தோற்கடிக்கவேண்டும் என்று செயற்குழு கூட்டம் இதர கட்சிகளை கேட்டுக்கொண்டது.

அசாம் தேசிய குடியுரிமை பதிவேடு(என்.ஆர்.சி): மனிதாபிமான நெருக்கடிக்கு வழிவகுக்கும் நேர்மையற்ற நிர்வாகமுறையை நிறுத்துங்கள்!

என்.ஆர்.சியின் இறுதி பட்டியலை வெளியிடுவதற்கான உச்சநீதிமன்றத்தின் காலக்கெடு முடிவடைய இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ள நிலையில் அசாமில் லட்சக்கணக்கான மக்கள் அதிகாரப்பூர்வமாக தங்களது குடியுரிமையை இழக்கும் ஒரு மனிதாபிமான நெருக்கடிக்கு அரசு வழிவகுத்துள்ளதை அங்குள்ள கள நிலவரம் சுட்டிக்காட்டுகிறது. 3.9 லட்சம் பேர் இதுவரை தங்களது கோரிக்கைகளையும், ஆட்சேபனைகளையும் பட்டியலில் சேர்க்க முடியவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், ஏற்கனவே என்.ஆர்.சி பட்டியலில் உள்ளவர்கள் குடியுரிமை பதிவுகளை மீண்டும் சரிபார்க்க அதிக எண்ணிக்கையில் அழைக்கப்படுவதாக பல இடங்களில் இருந்தும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இறுதி பட்டியலின் வெளியீடு திட்டமிட்டபடி நடந்தால், லட்சக்கணக்கான மக்கள் தங்களுக்கென ஒரு நாட்டையும், சிவில் உரிமைகளையும் இழப்பார்கள். அசாமில் உள்நாட்டுப் போர் போன்ற ஒரு சூழல் ஏற்படுவதை தவிர்க்க, இந்த பிரச்சனைக்கு உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து ஒரு மனிதாபிமான தீர்வை வழங்கவேண்டும் என்று தேசிய செயற்குழு கூட்டம் கோரிக்கை விடுத்தது.

மோசமான நிலையிலிருந்து காஷ்மீரை காப்பாற்றுங்கள்!

ஜம்மு-காஷ்மீரின் மோசமான நிலைமை குறித்து தேசிய செயற்குழு கூட்டம் வேதனையையும், ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியது.காஷ்மீரில் அண்மையில் அதிகரித்துள்ள மோதல்கள் மற்றும் கொலைகள், கூடுதல் படைகளை நிலைநிறுத்துதல், அமர்நாத் யாத்திரைக்கு தற்காலிக தடை, மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெளியேற உத்தரவு முதலானவை மாநிலத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளன. அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளுக்கும், அவர்களுக்கு பின்னால் திரண்ட மக்களுக்கும் மத்திய அரசின் செயல்பாடுகள் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள மக்களுக்கு உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலமே காஷ்மீர் பிரச்சனைகளுக்கு இறுதி தீர்வு காண முடியும் என்று தேசிய செயற்குழு கூட்டம் சுட்டிக்காட்டியது. பல தசாப்த கால சிக்கலான பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை ராணுவ வலிமையின் மூலம் எட்ட முடியாது. அதற்கு பதிலாக ஜம்மு-காஷ்மீரின் அனைத்து அசலான பிரிவு மக்களையும் ஈடுபடுத்திய உரையாடல் செயல்முறைக்கு திருப்புவதில் தான் உண்மையான அரசியல் ஞானம் உள்ளது என்று செயற்குழு கூட்டம் அரசுக்கு நினைவூட்டியது.

உன்னாவோ பாலியல் வன்புணர்வு வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்கிறோம்!

உன்னாவோ வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செயற்குழு கூட்டம் வரவேற்றது.பலம் வாய்ந்த குற்றவாளிகளுக்கு எதிராக நீதிக்காக போராடும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவருக்கு உச்சநீதிமன்றத்தின் தலையீடு மிகவும் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடியதாகும். யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேசத்தில் ஒரு சிறுமியும் அவரது குடும்பத்தினரும் அனுபவித்த கடுமையான அநீதி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது என்பதற்கு ஒரு சான்றாகும். உச்சநீதிமன்றம் கூட இதை கவனித்து வழக்கை டெல்லிக்கு மாற்றியுள்ளது. சிறுமிக்கு சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பிற்கு கூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் பொருள் நீதிமன்றம் உ.பி அரசு மற்றும் காவல்துறை மீது அவநம்பிக்கை கொண்டுள்ளது என்பதாகும். இந்த தீர்ப்பின் அடிப்படையில், கொடுமைகளை ஊக்குவிப்பதிலிருந்தும், குற்றவாளிகளை பாதுகாப்பதிலிருந்தும் உ.பி அரசு விலகவேண்டும் என்று செயற்குழு கூட்டம் கோரிக்கை விடுத்தது.

ஈரான் மீதான அமெரிக்காவின் போர் முழக்கத்திற்கு கண்டனம்!

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ஈரானுக்கு எதிரான பகைமையை வலுப்படுத்துவது அந்த பிராந்தியத்தில் இன்னொரு நாட்டின் ஸ்திரத்தன்மையை அழிக்கும் முயற்சியாகும் என்று தேசிய செயற்குழு கூட்டம் அவதானித்தது. பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனையை அமைதியான முறையில் தீர்ப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்றாலும், 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து ஒருதலைபட்சமாக அமெரிக்கா விலகுவதும், தெஹ்ரான் மீது பொருளாதார தடைகளை மீண்டும் திணிப்பதும் அமெரிக்கா அமைதியை விரும்பவில்லை என்பதற்கான அடையாளமாகும். ஈரானைத் தொடர்ந்து பிரிட்டனும் கப்பல்களை கைப்பற்றியது முழு பிராந்தியத்தையும் போருக்கான சூழலுக்கு கொண்டு சென்றுள்ளது.பிராந்தியத்தில் மற்றொரு சுற்று இரத்தக்களரி அழிவை தடுக்கும் வகையில் பிரச்சனையை அமைதியான முறையில் தீர்க்க உலக தலைவர்களுக்கு தேசிய செயற்குழு அழைப்பு விடுத்தது.

இந்த கூட்டத்திற்கு சேர்மன் இ.அபுபக்கர் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் எம்.முஹம்மது அலி ஜின்னா, துணைத் தலைவர் ஓ.எம்.ஏ.ஸலாம், செயலாளர்கள் அனீஷ் அஹ்மது மற்றும் அப்துல் வாஹித் சேட், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் இ.எம்.அப்துல் ரஹ்மான், பேராசிரியர் பி.கோயா, கே.எம்.ஷெரீஃப், வழக்கறிஞர் ஏ.முஹம்மது யூசுஃப், ஏ.எஸ். இஸ்மாயில், முஹம்மது ரோஷன், எம்.முஹம்மது இஸ்மாயில் முதலானவர்கள் கலந்துகொண்டனர்.

இப்படிக்கு

டாக்டர். முஹம்மது ஷம்மூன்,
தலைவர், ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு,
பாப்புலர் ஃப்ரண்ட், தலைமையகம், புது தில்லி.

Comments are closed.