சமூக வாழ்வில் ஊமையும் & நீதியாளரும்!

0

சமூக வாழ்வில் ஊமையும் & நீதியாளரும்!

‘‘மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றிய (மற்றும்) ஓர் உதாரணம் கூறுகிறான்: அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை); எந்தப் பொருளின் மீது (உரிமையும்) சக்தியும் அற்றவன்; தன் எஜமானனுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டு வரமாட்டான்; மற்றவனோ, தானும் நேர்வழியிலிருந்து, (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான் -இவனுக்கு (முந்தியவன்) சமமாவானா?’’ (அல்குர்ஆன் 16:76)

சமூகத்தில் பலம் பெறும் ஏகாதிபத்திய சக்திகளின் ஆதிக்கம் மனிதர்களை மௌனிகளாக்கும்.  காலஞ் செல்லச் செல்ல அவர்கள் உரிமைகளை குறித்த விழிப்புணர்வற்றவர்களாகவும், கடமைகளை குறித்து ஏதும் அறியாதவர்கள் போலவும் மாறிவிடுவார்கள். செல்வமும், கல்வியும், பதவியும் இருக்கும்போதே மனிதர்கள் சொந்தமாக கருத்துக்கள் ஏதும் இல்லாதவர்களாக, நிலைப்பாட்டை எடுக்க முடியாதவர்களாக, தமது குடும்ப வட்டத்தை தவிர சமூக ஈடுபாடு இல்லாதவர்களாக அடிமைகளாக மாறிவிடுவார்கள்.

அராஜகம் மற்றும் அநியாயத்தின் பீதிவயப்படுத்தும் நிசப்தத்தில், மௌனத்தை உடைத்து வெளிப்படையாக பேசுவதையும், அநியாயத்தை கேள்வி கேட்பதையும் அவர்கள் தற்கொலைக்கு சமமானதாக கருதுவார்கள். அவர்களை காப்பாற்ற முயற்சிப்பவர்களுக்கு அவர்கள் ஒரு சுமையாக இருப்பார்கள். அவர்களின் திறமைகளுக்கு ஏற்ப ஏதேனும் ஒரு துறையில் அவர்களை அமர்த்தினால் அவர்களிடமிருந்து எவ்வித உதவியையும் பெற இயலாது.

ஆனால், இறைநம்பிக்கையாளர், குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் வாழ்வும் கற்றுத் தரும் கொள்கைகளையும், நபிமார்கள், சித்தீக்கீன்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை மாதிரியையும், உண்மையையும், நீதியையும் போதுமான அளவு புரிந்து கொண்டு செயல்படுவதற்கு முயற்சிப்பார். இஸ்லாத்தை நெருக்கமாக அறிந்து கொண்டு நீதியின் குரலாக சமூகத்தில் எழுந்து நிற்க எந்தவொரு தடையும் அவருக்கு இருக்காது. ஸாலிஹீன்கள் காட்டித் தந்த போராட்டத்தின் பாதை அவர் முன்பாக காணக் கிடைக்கிறது. பின்னர் ஏன் அநீதி ஆட்டம் போடும் போது இழப்புக்களை குறித்து அஞ்சி, பேசா மனிதராக ஊமையாக அவர் அடங்கியிருக்கவேண்டும்?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘நீதியாளர்கள், வல்லமையும் மாண்பும் மிக்க அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் வலப்பக்கத்தில் ஒளியாலான மேடைகளில் இருப்பார்கள். அவனுடைய இரு கைகளுமே வலக்கரமே (வளமிக்கதே). அவர்கள் தமது நிர்வாகத்திலும், குடும்பத்திலும், தாம் பொறுப்பேற்றுக் கொண்ட (அனைத்)திலும் நியாயமாக நடந்து கொண்டனர் (என்பதே இச்சிறப்புக்குக் காரணம்)”. (நூல்: முஸ்லிம்)

Comments are closed.