சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு குற்றவாளி அசீமானந்தாவிற்கு பிணை!

1

இந்தியா பாகிஸ்தானை இணைக்கும் ஒரே ரயில் இணைப்பான சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 2007ம் ஆண்டு ஹிந்துத்துவா தீவிரவாதிகளால் நான்கு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டன. இதில் ஏற்ப்பட்ட குண்டு வெடிப்பில் 68 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டிவெடிப்பு தீவிரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியான சுவாமி அசீமானந்தாவிற்கு வெள்ளிக்கிழமை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இவரது பிணையை எதிர்க்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய புலனாய்வுத்துறை (NIA) எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதோடு மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளிகள் தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் ஷர்மா ஆகியோரின் பிணையை எதிர்க்கவும் நரேந்திர மோடி அரசு அனுமதி வழங்கவில்லை. மோகன்லால் மற்றும் தேஜாராம் பர்மார் ஆகியோருக்கு பிணை வழங்கியதால் சமநிலை அடிப்படையில் இவர்களுக்கும் பிணை வழங்கியதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

மேலும் மோடி அரசில் மலேகான் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான பிரக்யா சிங்கையும் குற்றமற்றவர் என்று கூறி அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் NIA கைவிட்டது. ஆனால் கடந்த ஜூன் மாதம் NIA சிறப்பு நீதிமன்றம் சாத்வி பிரக்யா சிங்கின் பிணையை மறுத்தது.

மோடி ஆட்சியில் அதன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மத்திய புலனாய்வு நிறுவனங்களும் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு தொடர்புடைய இந்துத்வா தீவிரவாதிகளின் வழக்குகளை ரத்து செய்கின்றன அல்லது அதனை பலகீனமடைய செய்கின்றன என்ற குற்றச்சாட்டினை எதிர்கட்சிகள் அவ்வப்போது வைத்து வருகின்றனர்.

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் சிறப்பு வழக்கறிஞரான ரோகினி சாலியன் தன்னை இவ்வழக்கில் மென்மைப் போக்கை கையாளுமாறு NIA அதிகாரிகள் வற்புறுத்துவதாக முன்னர் கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில், 2008 மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் புகழ்பெற்ற தகுதியான, நம்பகத்தன்மையுடைய வழக்கறிஞரை சிறப்பு வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. மேலும், முன்னாள் வழக்கறிஞரான ரோகினி சாலியனை வழக்கில் மென்மைப்போக்கை கையாள வேண்டும் என்று வற்புறுத்திய NIA அதிகாரி மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்ய வழிவகை செய்ய வேண்டும் எனவும் அதே போல இவ்வழக்கில் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Discussion1 Comment

  1. பிஜேபி ஆட்சிக்கு வந்து காவிரி வந்ததோ இல்லையோ நிறைய குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு பெயில் கிடைத்தது.