சவூதி அரசின் திட்டத்தை தனது சாதனையாக கூறும் மோடி

0

ஒரு பெண் ஹஜ் பயணம் செய்ய வேண்டுமென்றால் சவூதி மஹரம் சட்டத்தின்படி அப்பெண் தனது கணவனுடன் அல்லது அப்பெண் திருமணம் செய்ய தகுதியற்ற துணையுடன் பயணிக்க வேண்டும். ஆனால் 2015ஆம் ஆண்டு 45 வயதிற்கு மேலான வயதுடைய பெண்கள் துணை இல்லாவிட்டாலும் ஒரு குழுவுடன் சேர்ந்து பயணிக்கலாம் என்று இந்த சட்டத்தில் சிறு திருத்தத்தை சவூதி ஏற்படுத்தியது. இதனை தான் செய்தது போல் தனது மங்கி பாத் வானொலி உரையில் கூறியுள்ளார் மோடி.

முத்தலாக் விவகாரத்தில் முன் இருந்ததை விட முஸ்லிம் பெண்களின் நிலையை தனது அவசர சட்டம் மூலம் மோசமடைய செய்துவிட்டு இவர் தன்னை அவர்களின் இரட்சகன் போல காட்டிக்கொண்டிருக்க தற்போது சவூதி அரசின் இந்த சட்டதிருத்தை தான் மேற்கொண்டது போல தனது உரையில் புளுகியுள்ளார் மோடி.

இது குறித்து அவர் உரையாற்றுகையில், “ஏன் இந்த பாகுபாடு? இதன் ஆழத்திற்கு நான் சென்று பார்க்கையில் 70 வருட சுதந்திரதிற்கு பின்னும் இது போன்ற கட்டுப்பாடுகளை நாம் தான் விதித்துள்ளோம் என்று அறிந்து நான் பெரும் அதிர்ச்சியடைந்தேன். பல்லாண்டுகளாக முஸ்லிம் பெண்களுக்கு இந்த அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து எந்த விவாதங்களும் நடத்தப்படவில்லை.” என்று அவர் கூறியுள்ளார்.

மோடியின் இந்த கூற்றுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ள முக்தர் அப்பாஸ் நக்வி, “இன்றைய மங்கி பாத்தில் முஸ்லிம் பெண்கள் மஹரம் இல்லாமல் ஹஜ் செல்ல சிறுபான்மைத்துறை ஏற்படுத்திய முடிவை குறிப்பிட்ட மோடிக்கு நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்த மஹரம் விதிமுறை சவூதி அரசால் ஏற்படுத்தப்பட்டதே அன்றி இந்தியாவின் முந்தைய எந்த ஒரு அரசாலும் ஏற்படுத்தப்பட்டது அல்ல. தற்போது சவூதி அரசின் இந்த திருத்தத்தை அச்சு பிசகாமல் அறிவித்துவிட்டு தாங்கள் ஏதோ முஸ்லிம்கள் பெண்களின் விலங்குகளை உடைத்தது போன்று நாடமாடுகிறார் மோடி. யதார்த்தத்தில் சவூதி அரசு இந்த திருத்தத்தை மேற்கொள்ளவில்லை என்றால் இந்திய அரசு என்ன திருத்தங்கள் கொண்டு வந்தாலும் ஹஜ் விஷயத்தில் அது நடைமுறைக்கு வர இயலாது.

இதுவரை உள்நாட்டில் மட்டுமே பிறர் சாதனைகளுக்கு தங்கள் பெயர்களை பெருமையாக சூட்டிக்கொண்டிருந்த பாஜக இதன்மூலம் வெளிநாட்டு அறிப்புகளுக்கும் தங்களின் பெயரை சூட்டி அழகு பார்க்க தொடங்கியுள்ளது.

Comments are closed.