சஹாரா பிர்லா ஆவணங்கள்: மோடிக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட லஞ்சம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

0

சஹாரா குழுமத்தினரிடம் நடத்தப்பட்ட சோதனைகளில் நரேந்திர மோடிக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அருண் மிஷ்ரா, மற்றும் நீதிபதி அமிதவ ராய் ஆகியோர், பிரதமர் மற்றும் இதர அரசியல்வாதிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீது விசாரணை நடத்த இது போதுமான ஆதாரம் இல்லை என்றும், போதிய ஆதாரம் இன்றி விசாரணை நடத்தினால் அது அவர்கள் சரிவர இயங்க தடையாக இருக்கும் என்றும இது ஜனநாயகத்திற்கு பாதுகாப்பானதல்ல என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த ஆவணங்கள் பெறப்பட்ட முறையை வைத்தும் தாக்கல் செய்யப்பட்ட முறையை வைத்து பார்க்கும் போது அதன் மீது விசாரணை நடத்தப்படுவது சரியானதல்ல என்று தாங்கள் கருதுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் வருமான வரித்துறையின் தீர்வு ஆணையம் (Settlement Commission) எடுத்த முடிவை தாங்கள் சந்தேகிக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

சஹாரா குழுமத்தினரிடம் நடத்தப்பட்ட சோதனைகளில் கிடைத்த ஆவணங்களில் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது பல கோடி ரூபாய்களை சஹாரா குழுமத்தினரிடம் இருந்து லஞ்சமாக பெற்றார் என்று குரிப்பிடப்படப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், டில்லி முதல்வர் அரவிந்த் கேஜிரிவாலும் தெரிவித்தனர். இதனை விசாரிக்க வேண்டும் என்று பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் தற்போதைய நீதிமன்றத்தின் முடிவு தமக்கு மிகுந்த ஏமாற்றமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர், “இது தனக்கான பின்னடைவல்ல, இந்த நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரடி” என்று கூறியுள்ளார். மேலும், “இது உச்ச நீதிமன்றத்தின் மீதான மரியாதையின் மேல் விழுந்த பேரடி, ஏனென்றால் அது தன் நாட்டு மக்களை கைவிட்டுவிட்டது” என்று அவர் கூறியுள்ளார்.

Comments are closed.