சாதிக் ஜமால் போலி என்கௌண்டர் வழக்கு: டி.எஸ்.பி. பரோட்டிற்கும் ஜாமீன்

0

சாதிக் ஜமால் போலி என்கௌண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த டி.எஸ்.பி. தருண் பரோட்டிற்கும் ஜாமீன் (ஜூன் 26) வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டிருந்த அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மும்பை மற்றும் பாவ்நகருக்குள் நுழையக்கூடாது என்று சிபிஐ நீதிமன்றம் பரோட்டிற்கு உத்தரவிட்டுள்ளது.
பாவ்நகரை சேர்ந்த சாதிக் ஜமால் ஜனவரி 13, 2003 அன்று நடத்தப்பட்ட என்கௌண்டரில் குஜராத் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். மாநிலத்தில் உயர் தலைவர்களை கொலை செய்ய சாதிக் ஜமால் திட்டம் தீட்டியதாக வழக்கமான குற்றச்சாட்டை குஜராத் காவல்துறை சுமத்தியது.
மும்பை காவல்துறை அதிகாரி தயா நாயக் குஜராத் காவல்துறையிடம் சாதிக் ஜமாலை ஒப்படைத்ததை தான் கண்டதாக பத்திரிகையாளர் கேதன் திரோத்கர் நீதிமன்றத்தில் தெரிவித்ததை தொடர்ந்து இந்த போலி என்கௌண்டரின் உண்மை நிலை வெளியே தெரிய வந்தது. இந்த வழக்கு பின்னர் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. டிசம்பர் 2012ல் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
தருண் பரோட், இன்ஸ்பெக்டர்கள் பர்மர், ஐ.ஏ.செய்யாது, கிசோர் வகேலா, சப் இன்ஸ்பெக்டர்கள் ராம்ஜி மவானி, ஷியாம் கோஹில், கான்ஸ்டபிள்கள் அஜய்பால் சிங் யாதவ் மற்றும் சத்தர்சின்ஹ் சுதாஸாமா ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கில் செப்டம்பர் 2012ல் தருண் பரோட் கைது செய்யப்பட்டார். இஸ்ரத் ஜஹான் போலி என்கௌண்டர் வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்ட பரோட் அந்த வழக்கிலும் இதற்கு முன்னர் ஜாமீன் பெற்றுவிட்டார்.
மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு என்கௌண்டர் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுவது வாடிக்கையாகி விட்டது.

Comments are closed.