சாதி கொடுமையால் பெண் மருத்துவர் தற்கொலை: பிரேதப் பரிசோதனையில் கொலை என முடிவு?

0

மும்பை BYL நாயர் மருத்துவமனை பெண் மருத்துவராக பணியாற்றி வந்தவர் பாயல் தத்வி. இவரது கணவர் பெயர் சல்மான். 26 வயதான தத்வி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். இதனால் தத்வியுடன் பணிபுரியும் சீனியர்களான ஹேமா ஆஜா, பக்டி மேகர் மற்றும் அங்கிதா கண்டலிவால் ஆகிய மூவரும் தத்வியின் சாதியைக் குறிப்பிட்டுக் கிண்டல் செய்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த தத்வி, கடந்த மே 22 ஆம் தேதி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து தத்வியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் 3 மருத்துவர்கள் மீதும் தற்கொலைக்கு தூண்டியது மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்தனர். இதற்கிடையே மருத்துவர்கள் ,மூவரும் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியிருந்த நிலையில் அவர்கள் மூவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பாயல் தத்வியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்தை நெரித்ததற்கான அடையாளம் இருந்தது தெரியவந்துள்ளதாக அவரது வழக்கறிஞர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனால் மருத்துவர்கள் அவரை கொலை செய்திருக்கக்கூடும் என்று சந்தேகப்படுவதாகவும் தத்வி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மருத்துவர்கள் மூவரையும் நாளை (வெள்ளிக்கிழமை) வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை போலவே பாயல் மரணம் நிகழ்ந்திருப்பதாகக் கூறி, இச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டியலின, பழங்குடியின மக்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.