சாத்வி பிரக்யா சிங்கிற்கு பிணை வழங்கினால் அதற்கு ஆட்சேபனை இல்லை: NIA

0

2008  மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சாத்வி பிரக்யா சிங்கிற்கு பிணை வழங்குவதில் தங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை என்று தேசிய புலனாய்வுத்துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் NIA வின் சார்பில் ஆஜரான கூடுதல் வழக்கறிஞர் அணில் சிங், பிரக்யா சிங்கின் விஷயத்தில் கடுமையான சட்டமான MCOCA சட்டத்தினை NIA தளர்த்திவிட்டது என்றும் அதனால் அது இவரது வழக்கில் பொருந்தாது என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக பிரக்யா சிங்கின் பிணை மனுவை செஷன்ஸ் நீதிமன்றம் நிராகரித்தது. இதனை அடுத்து அவர் உயர் நீதி மன்றத்தில் இது தொடர்பாக மேல் முறையீடு செய்தார். இவ்வழக்கை நீதிபதி ஆர்.வி.மூர் மற்றும் நீதிபதி ஷாலினி பன்சல்கர் ஆகியோர் விசாரித்தனர்.

இந்த விசாரணையில், “முன்னதாக குற்றம் சுமத்தப்பட்டவர் வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டிருக்கலாம் என்ற எண்ணத்தில் மகாராஷ்டிர ATS இவர் மீது MCOCA சட்டத்தை பயன்படுத்தியது, ஆனால் இவர் வெறும் மாலேகான் குண்டுவெடிப்பில் மட்டுமே ஈடுபட்டுள்ளார் என்று NIA தெரிவிக்கிறது. அதனால் இவர் மீது MCOCA சட்டம் பொருந்தாது” என்று அணில் சிங் வாதாடினார்.

மேலும், “இவ்வழக்கை NIA கையில் எடுப்பதற்கு முன்னதாகவே, பல முக்கிய சாட்சிகள் தங்களது வாக்குமூலங்களை திரும்பப் பெற்றுவிட்டனர். மேலும் தங்களை தீவிரவாத தடுப்புப்படை அத்தகைய போலியான வாக்குமூலங்களை வற்புறுத்தி கூறச் செய்தது என்றும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனை கணக்கில் கொண்டு NIA ஆகிய எங்களுக்கு இவருக்கு பிணை வழங்குவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.” என்று NIA தெரிவித்துள்ளதாக அவர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

பிரக்யா சிங் தனது பிணை மனுவில், தான் ஆறு வருடங்களுக்கும் மேலாக சிறையில் கிடந்தது வாடுவதாகவும் இரண்டு புலனாய்வு அமைப்புகள் முரணான விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிப்பதாலும் தன்னை இன்னும் சிறையில் வைப்பது சரியல்ல என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த வழக்கு விசாரணை முடிய மிக நீண்ட காலம் ஆகும் என்றும் இந்த வழக்கில் குற்றங்கள் இனிமேல் தான் பதியப்படும் என்றும் பிணை கோரிக்கையை விடுக்கும் நபர் கடும் நோயினால் அவதியுறும் ஒரு பெண் என்றும் அதலால் நீதிமன்றம் இவர் மீது என்னென்ன நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறதோ அதனை விதித்தே அவரை பிணையில் விடுவிக்கலாம் என்று அவரது பிணை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் ஜனவரி 31 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Comments are closed.