சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் வரை இறுதி சடங்குகள் நடத்த முடியாது

0

ஏப்ரல் 7, 2015 அன்று தெலுங்கானாவில் நடைபெற்ற என்கௌண்டர் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் வரை அவர்களின் இறுதி சடங்குகளை நடத்த முடியாது என்று கொலை செய்யப்பட்டவர்கள் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வழியில் தப்ப முயன்றதாக கூறி ஐந்து நபர்களை தெலுங்கானா காவல்துறை சுட்டுக் கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சில மணிநேரங்களில் ஆந்திராவில் நடைபெற்ற மற்றொரு என்கௌண்டரில் இருபது நபர்கள் கொலை செய்யப்பட்ட செய்தி வெளியானவுடன் இந்த செய்தி ஊடகங்களின் பார்வையில் இருந்து மறைந்தது.
தெலுங்கானா என்கௌண்டரில் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் நேற்றைய தினம் ஹைதராபாத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.கொலை செய்யப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.இவர்கள் ஐந்து நபர்களும் போலி என்கௌண்டரில் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.அத்துடன் முஸ்லிம்களின் மிகப்பெரும் எதிரிகளாக காவல்துறையினர் உள்ளனர் என்றும் அவர்கள் கூறினர்.
கொலை செய்யப்பட்டவர்களில் முஹம்மது விகாருதீன்,முஹம்மது ஹனீஃப்,அம்ஜத் அலீ,ரியாஸ் கான் ஆகியோர் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள்.இஸார் கான் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர்.தெஹ்ரீகே இ கல்பா இ இஸ்லாமி என்ற இயகத்தை இவர்கள் நடத்தி அதன் மூலம் காவல்துறையினரை குறிவைத்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.2010ல் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்குகளின் விசாரணை இறுதி கட்டத்தை அடைந்து இவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட இருந்த சூழலில் இந்த என்கௌண்டர் நடந்துள்ளதாகவும் தங்களின் இயலாமையை மறைக்கவே காவல்துறையினர் இதனை செய்ததாகவும் குடும்பத்தின் குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர்.
இதனிடையே என்கௌண்டர் செய்யப்பட்ட விகாருதீன் கைவிலங்கிடப்பட்ட நிலையில் சுடப்பட்டிருப்பதை காட்டும் புகைப்படம் ஒன்று நேற்று வெளியானது.’இருக்கையுடன் கைவிலங்கிடப்பட்ட நபர் எப்படி மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்?’ என்று அவரின் தந்தை கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலுங்கானா அரசாங்கம் இந்த என்கௌண்டர் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும் வரை இறந்தவர்களின் ஜனாசா தொழுகையை (இறுதி சடங்கு)நடத்த முடியாது என்று கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

(Photo courtesy:twocirlces)

Comments are closed.