சிபிசிஐடி கடத்திச் சென்ற இளைஞரை விடுவிக்க வேண்டும்: பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை

0

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த செய்யத் அபுதாஹிர் என்பவரை துப்பாக்கி முனையில் சிபிசிஐடி யினர் சட்ட விரோதமாக இழுத்துச் சென்றனர் என்றும் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோவை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.அமல்ராஜிடம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

அபுதாஹிர் கடந்த திங்கள் கிழமை இரவு 11:30 மணியளவில் அவரது சாலையோர கடைக்கு வெளியே நிற்கும் போது துப்பாக்கிகளுடன் வந்த சிபிசிஐடி டிஎஸ்பி பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் இழுத்துச் சென்றுள்ளனர்.

இவர் கடந்த வருடம் கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி தலைவர் சசிகுமார் கொலை வழக்கு விசாரணைக்காக பல முறை காவல் நிலையம் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்க துப்பாக்கி முனையில் தனது மகனை காவல்துறையினர் இழுத்துச் சென்றுள்ளது மன வேதனையளிக்கிறது என்று அவரது தந்தை ஈ.எம்.ஜாஃபர் அலி கூறியுள்ளார். மேலும் ஏறத்தாழ 20 முறையாவது தனது மகனுடன் தானும் காவல்நிலையம் சென்றதாகவும் தற்போது திடீரென்று காவல்துறையினர் ஏன் இவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தனது மகன் தற்போது எங்கிருக்கிறான் என்று தனக்கு தெரியவில்லை என்றும் காவல்நிலையத்திலும் சிபிசிஐடி அலுவலகத்திலும் தனது மகன் இல்லை என்றும் உடனடியாக தனது மகன் எங்கு எப்படி உள்ளான் என்பது குறித்து காவல்துறையினர் தனக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதனையடுத்து புதன்கிழமை காலை 8 மணியளவில் கமிஷனர் அலுவலகம் முன்னர் திரண்ட பாப்புலர் ஃப்ரண்ட்  அமைப்பினர் அபுதாஹிரை விடுவிக்குமாறு கோரிக்கை வைத்தனர். அவ்வமைப்பின் தலைவர்களுடம் இது தொடர்பாக காவல்துறை ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தினார். இவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய காவல்துறை DCP S.லக்ஷ்மி உள்ளிட்ட அதிகாரிகள் அபுதாஹிரை குறித்து தங்களுக்கு எந்த தகவலும் தெரியாது என்று அப்போது கூறியுள்ளனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தொடர்ந்து பல்வேறு முஸ்லிம் அமைப்பினரும் அபுதாஹிரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது அபுதாஹிர் மீது ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததும் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதகாக் கூறி சிபிசிஐடி காவல்துறையினர் அவரை காவல்நிலையம் அழைத்து வந்துள்ளனர்.

Comments are closed.