சிரியா உள்நாட்டுப் போர்: ரமலான் முதல் வாரத்தில் 224 பேர் பலி

0

ரமலான் முதல் வாரத்தில் சிரியா உள்நாட்டுப்போரில் ரஷ்ய மற்றும் சிரியா போர் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சுகளில் 224 பேர் பலியானதாக The Syrian Observatory for Human Rights என்ற பிரிட்டனை மையமாக கொண்ட கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்த பட்டியலில் 50 குழந்தைகள், 15 பெண்கள் உட்பட 148 பொதுமக்கள் ரஷ்ய மற்றும் சிரியா இராணுவ ஹெலிகாப்டர்கள் வீசிய பாரல் குண்டுகளுக்கு பலியாகியுள்ளதாக அந்த கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த உயிரிழப்புகளுக்கு எந்தவித கண்டனமும் தெரிவிக்காத சர்வதேச சமுதாயத்திற்கு தங்களது கண்டனத்தையும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த மரண எண்ணிக்கையில் இட்லிப் சந்தையில் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் உயிரிழந்த 40 பொதுமக்களும் அடக்கம் என்றும் பலியானவர்களில் பெரும்பான்மையினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

இட்லிப் பகுதியில் ரஷ்ய படைகள் வான்வெளி தாக்குதல் நடத்திவருவதாக துருக்கிய கண்காணிப்பகம் உட்பட  பல கண்காணிப்பு குழுக்கள் தெரிவித்து வருகின்றன. ஆனால் அதனை ரஷ்யா மறுத்து வருகிறது.

2011 இல் அமைதிப் போராட்டமாக தொடங்கி இன்று பல்முனை உள்நாட்டுப் போராக உருவெடுத்துள்ளது சிரியா போராட்டம். இந்த போராட்டத்தில் இது வரை 280,000 மக்கள் உயிரிழந்துள்ளனர். சிரியா மக்கள் தொகையில் ஐம்பது சதவிகித மக்கள் அந்நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

Comments are closed.