சிறார்களின் வாழ்வை  சீர்குலைக்கும் மோடி அரசு!

0

 

புதிய சட்டதிருத்தங்கள் மூலம் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் துரோகமிழைத்த மோடி அரசு குழந்தை தொழிலாளர் முறையை மீண்டும் கொண்டு வந்து சிறார்களின் எதிர்காலத்தையும் சீர்குலைக்க தயாராகிவருகிறது. சிறார் தொழிலாளர் (தடுப்பும் கட்டுப்பாடும்) சட்டம் 1986ல் பல திருத்தங்களை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசு மேற்கொள்ளவுள்ள திருத்தங்கள் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு மாறாக ஊக்குவிக்கும் தன்மை கொண்டவையாகும்.

சுற்றுலா, பொழுதுபோக்கு மையங்கள், குடும்பத்தொழில்களில் சிறார்களை பணியில் ஈடுபடுத்தலாம் என்ற மோடி அரசின் முடிவு இந்தியாவில் ஒழிக்கப்பட்டு வரும் சுரண்டலை மீட்டெடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

குடும்பத் தொழில்களுக்கு சிறார்களை பயன்படுத்தலாம் என்ற அரசின் முடிவு முற்றிலும் அங்கீகரிக்க இயலாதது. பள்ளி நேரம் முடிந்த பிறகும், விடுமுறை நாட்களிலும் குடும்பத் தொழில்களுக்கு குழந்தைகளை அனுப்பலாம் என்ற சட்ட திருத்தம் குழந்தைகளுக்கு பெரும் தீங்கிழைப்பதாகும். சுற்றுலா  பொழுதுபோக்கு துறைகளில் குழந்தை தொழிலாளர்களை அனுமதிப்பதும் அவர்களின் வாழ்வை சீரழிக்கும். குழந்தைகளின் உழைக்கும் சக்தி மட்டுமல்லாமல், பாலியல் ரீதியாகவும் அவர்கள் பாதிப்பை சந்திப்பதற்கு இவ்விடங்களில் வாய்ப்புகள் அதிகம்.

 கல்வி நிலையங்களிலிருந்து படிப்பை பாதியிலே விட்டுவிடுவதை இச்சட்டம் துரிதப்படுத்தும். குழந்தை தொழிலாளர் முறை அராஜகம் மட்டுமல்ல, மனித நேயத்தை நேசிக்கும் நாகரீக சமூகத்தை காட்டுமிராண்டித்தனத்திற்கு மீண்டும் அழைத்து செல்வதாக அமையும்.

நமது நாட்டில் முழுமையாக குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க இயலாது என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறுகிறார். பாரம்பரிய தொழில்களில் குழந்தைகள் ஈடுபடுவதற்கு தடையில்லை என்பது அரசின் வாதம். 14 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களின் உழைப்பை சுரண்டுவதற்கான வாசலை சட்டம் மூலம் திறந்து கொடுப்பது பயங்கரமானது.

5 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளே குழந்தை தொழிலாளர்களாக கருதப்படுகின்றனர். குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் இன்றளவும் அது முற்றிலுமாகத் தடுக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். இந்நிலையில் புதிய சட்டம் சலுவை வழங்கினால் சுரண்டல்கள் பல மடங்கு அதிகரிக்கும். கல்வி உரிமைக்கான சட்டம்  2009ன் நோக்கத்தையே இச்சட்டதிருத்தம் சிதைத்துவிடும்.

வருடந்தோறும் சர்வதேச அளவில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து நடைபெறும் மாநாடுகளில் குழந்தைகளுக்கான உரிமைகள் குறித்த பிரகடனங்கள் வெளியிடப்படுகின்றன. ஆனால், அவையெல்லாம் இந்தியாவுக்கு பாதகமானது அல்ல என்று நரேந்திர மோடி கூறுகிறார். இந்த மசோதா மூலம் மிகக் கடுமையான மனித உரிமை மீறலுக்கு மோடி அரசு தயாராகி வருகிறது.

இச்சட்டம் நிறைவேறினால் நமது தேசத்தின் வருங்கால குடிமக்களான சிறார்களின் வாழ்வு அழிந்து போவதற்கு நாம் சாட்சியாவோம். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இச்சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் கிளர்ந்தெழ வேண்டும். கட்டிய மனைவியை தவிக்க விட்டு குடும்ப வாழ்வை புறக்கணித்து வாழும் மோடியால் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் துயரங்களை எப்படி புரிந்து கொள்ள முடியும்.

ஜூன் 12 – குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

(ஜூன் 2015 இதழில் வெளியான தலையங்கம்)

Comments are closed.