சிறையில் இருந்து விடுதலையாகிறாரா சாத்வி பிரக்யா சிங்?

0

2008 மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தீவிரவாத தடுப்புப் படை முக்கிய குற்றவாளி என சேர்த்த சாத்வி பிரக்யா சிங்கின் பிணை மனு புதன் கிழமை விசாரணைக்கு வந்தது. இது தேசிய புலனாய்வுத்துறை அவர் குற்றமற்றவர் என்று கூறியதை அடுத்து முதன் முறையாக கேட்கப்பட்ட பிணை மனு ஆகும். பிரக்யா சிங்கிற்காக ஆஜரான வழக்கறிஞர் அவினாஷ் குப்தா உயர்நீதிமன்றத்தில், பிரக்யா சிங் பல வருடங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு அவசர நிலையில் சிகிச்சையளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த பிணை மனு மீதான விசாரனையில் உயர்நீதி மன்றத்திடம் தேசிய புலனாய்வுத்துறை பிரக்யா சிங்கிற்கு பிணை வழங்குவதில் தங்களுக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. NIA சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அணில் சிங் இதனை நீதிபதி ரஞ்சித் மோர் மற்றும் நீதிபதி சாலினி பன்சல்கார் ஜோஷி ஆகியோர் அடங்கிய பென்ச்சிடம் தெரிவித்தார். இதனையடுத்து தேசிய புலனாய்வுத்துறை மற்றும் அதற்கு முன் இந்த வழக்கை விசாரித்த புலனாய்வுத்துறைகளின் சாட்சியகள் அனைவரின் வாக்குமூலங்களையும் நீதிமன்றத்திடம் சமர்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் இந்த வழக்கில் தலையீட்டு மனு ஏதும் அளிக்கப்பட்டுள்ளதா என்று அறிய வேண்டும் என்று கூறிய நீதிபதிகளின் பென்ச் இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற நவம்பர் மாதம் 29 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம்.

இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்தவரான நிசார் அஹமத் சையத் பிலால் சார்பாக வழக்கறிஞர் வஹாப் கான் அலுவலகத்தின் வழக்கறிஞர் நைமா ஷேக் ஆஜரானார். இவர் இவ்வழக்கில் பிலால் தலியீடு மனு தாக்கல் செய்ய விரும்புவதாக கூறினார். பிலால் செஷன்ஸ் நீதிமன்றத்திலும் பிரக்யா சிங்கின் பிணைக்கு எதிராக தலையீட்டு மனு தாக்கல் செய்தார். அங்கு பிரக்யா சிங்கின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Comments are closed.