சிறையில் தொலைத்த நாட்கள்: எட்டு வருடங்கள் கழித்து விடுவிக்கப்பட்ட யாகூப்

0

பொய் வழக்குகளில் அப்பாவிகளை கைது செய்வது தொடர்கதையாக உள்ளது. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகள் என்று விடுவிக்கப்படுவது அவ்வப்போது நடக்கிறது. இதனை குறித்து தனி ஆய்வு நடத்தக்கூடிய அளவிற்கு பொய் வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.
அவ்வாறு பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் விடுவிக்கப்பட்டவர் முகம்மது யாகூப். பொய் வழக்குகளை புனைவதில் வட இந்திய காவல்துறையினர், அதுவும் சிறப்பு படையினர் என்ற பெயரில் முன்னணியில் உள்ளனர். யாகூபின் எட்டு வருடங்களை சீரதழித்த பெருமைக்கு சொந்தக்காரர்கள் உத்தர பிரதேச மாநில சிறப்பு படையினர்.
அமைதியான் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த யாகூபிற்கு ஜூன் 10, 2007 அன்று அனைத்தும் தலைகீழாக மாறியது. நஜினா ரயில் நிலையத்தில் அவரை கைது செய்த சிறப்பு படையினர் பத்து நாட்கள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் சித்திரவதைக்கு உள்ளாக்கினர். இருட்டறையில் வைத்து நிர்வாணமாக தன்னை சித்திரவதை செய்ததை யாகூப் தற்போது நினைவு கூர்கிறார். சித்திரவதை செய்வதில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகள் இருந்ததாக யாகூப் கூறுகிறார்.
அவர்களின் தொடர் சித்திரவதை காரணமாக அவர்கள் காட்டிய தாள்களில் எல்லாம் யாகூப் கையெழுத்திட்டார். ஜூன் 21 அன்று பத்திரிகையாளர்கள் முன் யாகூபை அவர்கள் நிறுத்திய போது, தான் அன்றுதான் கைது செய்யப்பட்டதாக யாகூப் கூறினார்.
பின்னர் வழக்கமான திரைக்கதையை சிறப்பு படையினர் ஒப்பித்தனர். யாகூப் ஹர்கத் அல் ஜிஹாத் அல் இஸ்லாமி தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்றும் வங்கதேசம் வழியாக பாகிஸ்தான் சென்று பயிற்சி பெற்றவர் என்றும் கூறினர். அத்துடன் ஹர்கத்தின் கமாண்டர்களான ஜலாலுதீன் மற்றும் நவ்சாத் ஆகிய இருவரும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக உத்தர பிரதேசத்தில் உள்ளதாகவும் கூறினர். இவை அனைத்தையும் ஒப்புதல் வாக்குமூலம் என்ற பெயரில் யாகூபின் வாயாலேயே கூற வைத்தனர். யாகூப் தீவிரவாதியாக நிறுத்தப்பட்டார்.
இன்ஃபார்மர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஜூன் 21 அன்று சார்பாக் ரயில் நிலையத்தில் யாகூபை கைது செய்ததாக சப் இன்ஸ்பெக்டர் வினய் கௌதம் அப்போது தெரிவித்தார். அத்துடன் 4.5 பேட்டரிகளையும் கைப்பற்றியதாக தெரிவித்தார். யாகூப் கொடுத்த தகவல்களை அடுத்து ஜலாலுதீன் மற்றும் நவ்சாத் ஆகிய இருவரையும் கைது செய்யததாகவும் தெரிவித்தார்.
ஏட்டு வருடங்கள் நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில் தற்போது யாகூப் நிரபராதி என்று அறிவிக்கப்பட்டுள்ளார். கூறிய தகவலகள் எதையும் சிறப்பு படையினர் நிரூபிக்காததால் யாகூவை விடுவிப்பதாக சிறப்பு செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி ரிஸ்வி ஆகஸ்ட் 6 அன்று தீர்ப்பளித்தார். நீதிபதி கேட்ட எந்த கேள்விக்கும் சிறப்பு படையினரிடம் பதில் இல்லை. ‘பகல் 2 மணிக்கு சார்பாக் ரயில் நிலையத்தில் வைத்து யாகூபை கைது செய்ததாக கூறியுள்ளீர்கள். அப்படியென்றால் ஏன் ஒரு சாட்சி கூட கொண்டுவரப்படவில்லை?’ ‘யாகூப் கைது செய்யப்பட்டதை யாருமே காணவில்லையா?’ ‘யாகூபிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் வெடிபொருட்கள் எங்கே?’ எதற்குமே சிறப்பு படையினரிடம் பதில் இல்லை. யாகூப் பாகிஸ்தான் சென்றதாக கூறியதையும் காவல்துறையினரால் நிரூபிக்க முடியவில்லை. ஒரு பொய் வழக்கை தெளிவாக இவர்கள் புனைந்துள்ளார்கள் என்பதை அறிந்த நீதிபதி இறுதியாக ஒரு கேள்வியை கேட்டார். ‘விலைமதிப்பற்ற வாழ்வின் அதிகமான பகுதியை திருடுவதற்காக ஒரு பொய் வழக்கை புனைந்தீர்;களா?’
இந்த வழக்கில் இருந்து ஜலாலுதீன் மற்றும் நவ்சாத் ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் மீது வேறு சில வழக்குகள் உள்ளதால், அவர்களின் சிறைவாசம் தொடர்கிறது.
‘ஜலாலுதீன் கொல்கத்தாவை சேர்ந்தவர். ஜூன் 21, 2007 அன்று ஊடகங்கள் முன் அவரை நிறுத்தும் போதுதான் அவரை நான் முதல் முறையாக பார்த்தேன். நவ்சாத் எனது தூரத்து உறவினர். அவர் கைது செய்யப்பட்டது எனக்கு தெரியாது. அவர் எனது உறவினர் என்பதை நான்தான் காவல்துறையினரிடம் தெரிவித்தேன்’ என்று யாகூப் கூறுகிறார்.
எவ்வித தவறும் செய்யாமல் எட்டு வருடங்கள் சிறையில் கழித்த யாகூப் தான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு இன்னும் இருபது வருடங்கள் ஆகும் என்று கூறுகிறார். யாகூபுடன் பேசினால் எங்கே தங்களையும் கைது செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் அவரின் நண்பர்கள் யாகூபை நெருங்குவதே இல்லை. 13 வயதான யாகூபின் மகன் அஃப்தாப் எப்போதும் அமைதியாகவே உள்ளார். அவருடைய வீடும் மோசமான நிலையிலேயே உள்ளது. இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியிலும் தனது ஒரே ஆறுதல் மகள் மன்தசா என்று யாகூப் கூறுகிறார்.
யாகூப் கைது செய்யப்படும் போது தாயின் வயிற்றில் கருவாக இருந்தார் மன்தசா. தனது எட்டு வருட வாழ்க்கை, மனைவி மற்றும் நான்கு குழந்தைகளின் வாழ்க்கையையும் சிறப்பு படையினர் சீரழித்துவிட்டதாக யாகூப் வருந்துகிறார்.
எவ்வித தவறும் செய்யாத யாகூப் சிறையில் தொலைத்த எட்டு வருடங்களை திரும்ப தருவது யார்?

Comments are closed.