சிவ சேனா தலைவர் வாகனத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட 1.11 கோடி ரூபாய்கள்

0

மும்பையில் வாசை குற்றப்பிரிவு போலீசார் மற்றும் வருமான வரித்துறையினர் இணைந்து நடத்திய சோதனை ஒன்றில் ரூபாய் 1.11 கோடி மதிப்பிலான புதிய மற்றும் பழைய ரூபாய்க்களை சிவ சேனா கட்சியை சேர்ந்த வாசை விரார் நகராட்சி தலைவர் தனன்ஜெய் காவ்டே வாகனத்தில் இருந்து கைப்பற்றியுள்ளனர்.

தனன்ஜெய் காவ்டே வீடு மற்றும் அலுவலகங்களில் காலை 8:30 மணியளவில் சோதனை செய்த அதிகாரிகள் அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் இந்த பணம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட 1.11 கோடி ரூபாய்களில் 64.5 லட்சம் ரூபாய்கள் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களாகும். மீதமுள்ள 47 லட்ச ரூபாய் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களாக இருந்துள்ளன. இதனையடுத்து காவ்டேவை காவல்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து இந்த பணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த சிவ சேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, இது குறித்து தங்கள் கட்சி விசாரித்து வருவதாகவும் இந்த சம்பவம் மாநில கூட்டுறவு அமைச்சர் சுபாஷ் தேஷ்முக்கின் நிகழ்வை போன்று இருப்பதாகவும் கூறியுள்ளார்.

முன்னதாக சுபாஷ் தேஷ்முக்கின் வாகனத்தில் இருந்து 91 லட்சம் ரூபாய் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டது. இந்த பணம் கரும்பு தொழிலாளர்களுக்கு கூலிக்காக கொடுக்க வைத்திருந்த பணம் என்று சுபாஷ் தேஷ்முக் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.