சி.ஏ.ஏ: ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலையீடு அசாதாரணமானதா?

0

சி.ஏ.ஏ: ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலையீடு அசாதாரணமானதா?

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் நீதிமன்றத்திற்கு அமிக்கஸ் க்யூரியாக இணைய ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தது மத்திய மோடி அரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இயற்றப்படும் ஒரு சட்டம், சட்டத்திருத்தத்திற்கு எதிராக வெளியில் உள்ள ஒரு அமைப்பு தலையிடுவது அசாதாரணம் என்று சுட்டிக்காட்டி வெளியுறவுத்துறை அமைச்சகம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

பாகுபாட்டிற்கு எதிரான சர்வதேச உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ள இந்தியா பாரபட்சமான குடியுரிமை திருத்த சட்டத்திற்கு துணிந்ததன் முரண் ஒழுங்கை சுட்டிக்காட்டி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இவ்வழக்கில் அமிக்கஸ் க்யூரியாக இணைய விருப்பம் தெரிவித்தது. குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பான 140 வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் பார்வையில் உள்ளன. குடியுரிமை திருத்த சட்டம் உலகின் முன்னால் இந்தியாவின் கண்ணியத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதை யாராலும் மறுக்க முடியாது.

அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து கஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கி விட்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததோடு மனித உரிமைகளை இராணுவத்தின் பூட்ஸ்கால்களின் கீழ் துவசம் செய்தபோது நாட்டிற்கு உள்ளேயும், வெளிநாடுகளிலும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனைத்தொடர்ந்து சர்வதேச சமூகத்தின் வாயை மூட மேற்கத்திய நாடுகளில் தங்களுடைய தீவிர வலதுசாரி கொள்கைகளுக்கு ஆதரவானவர்களை கஷ்மீருக்கு வரவழைத்து ஒரு நாடகத்தை நடத்தி தலையிட வைத்தது மோடி அரசு. இது ஒரு அப்பட்டமான வெளிநாட்டு தலையீடாகும்.

சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (ஐ.சி.சி.பி.ஆர்) பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (ஐ.சி.இ.எஸ்.சி.ஆர்), இன பாகுபாட்டை ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை (ஐ.சி.இ.ஆர்.டி), சிறார் உரிமை உடன்படிக்கை (சி.ஆர்.சி), பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை முதலான ஐ.நா. முன்னெடுத்த பல உடன்படிக்கைகளிலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. மேலே கூறிய உடன்படிக்கைகளின் சாராம்சம் என்னவெனில் பாகுபாடின்மையும், உரிமைகளில் சமத்துவமுமாகும். ஆனால், மூன்று நாடுகளிலிருந்து வரும் முஸ்லிமல்லாத அகதிகளுக்கும், குடியேறிகளுக்கும் குடியுரிமையை வழங்குவதன் மூலம் மத அடிப்படையிலான பாகுபாடு மற்றும் உரிமை மீறல்களுக்கு சட்ட அந்தஸ்தை மத்திய மோடி அரசு வழங்குகிறது என்பதுதான் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எழும் முக்கிய குற்றச்சாட்டாகும்.

நாட்டிற்குள்ளேயே அரசியல் சாசனத்தின் தத்துவங்களை மட்டுமல்ல, சர்வதேச உடன்படிக்கைகளையும், சட்டங்களையும் முக்கியத்துவத்தை இழக்கச் செய்த அசாதாரண நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக மதத்தை அளவுகோலாக நிர்ணயித்ததும் அது மத, இன பாகுபாட்டிற்கும், டெல்லி மாதிரி இனப்படுகொலைகளுக்கு கருவியாக மாறவும் செய்த மோடி அரசின் நடவடிக்கை தான் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்பின் அசாதாரண தலையீட்டிற்கு வழிவகுத்துள்ளது. மனிதாபிமானம் குறித்து இம்மி அளவு கூட கவலைப்படாத மத்திய சங்பரிவார அரசு சர்வதேச குரல்களுக்கு செவிசாய்ப்பதெல்லாம் அபூர்வமே!

Comments are closed.